வீடியோ நன்றி ஜூவி.
'அடடே... இப்படியும் ஓர் பக்தியானந்தாவா?!' என்று 'சாக்லேட் சாமி'க்கு தரிசனம் கொடுக்க (என்னவொரு மெதப்பு!) கிளம்பினோம். கபாலீஸ்வரர் கோயிலுக்கும் சித்திரக் குளத்துக்கும் இடைப்பட்ட வீதி ஒன்றின் மாடி வீடுதான் (ஆ)சாமியின் ஆசிரமம். இரவு 8.30 மணிக்குமேல்தான் பக்தர்கள் சந்திப்பு. வாசலில் பூ விற்கும் பாட்டி, ''சாமி கால் நம்ம உடம்பில் படுறதுக்குக் கொடுத்துவெச்சிருக்கணும்... இந்தா பூ வாங்கிட்டுப்போய் சாமிய பாருய்யா...'' என்று கூவிக்கொண்டு இருந்தார்!
வரிசையாக ஒரு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயங்கள் ஒட்டப்பட்டு (அதாவது, இங்கே வந்து போனாலே ஐஸ்வர்யம் கொட்டுமாம்!) இருந்த மாடிப்படிகளைக் கடந்து சந்நிதானம்(!) சென்றோம். ஆங்காங்கே ஐந்து தலை நாகம், அசுரர் முகங்கள்கொண்ட பயமுறுத் தும் சிலைகளைத் தாண்டிச் சென்றால்... 'பளிச்' மூக்குத்தியோடு கருவறைக்குள் அம்மன் சிலை! சுவர் எங்கும் ஒட்டப்பட்டு இருக்கும் ஆன்மிகத் தத்துவ நோட்டீஸ்களுக்கு மத்தியில்... 'சாக்லெட் பெருமை' பேசும் பிட் நோட்டீஸ்களும் அடக்கம். மல்லிகைப் பூ, கலர் கலர் சாக்லெட் பாக்கெட்டுகளோடு சாமியின் தரிசனத்துக்கு காத்துக்கிடந்த பக்தர் ஒருவரிடம் மெள்ளப் பேச்சுக் கொடுத்தோம்.
''நானும் என் பொஞ்சாதியும் ரெண்டு மாசமாத்தான் சாமியைக் கும்புட வர்றோம். சாமி பேர் வெங்கட்ரமணா. பாரீஸில் (அட, பாரீஸ் கார்னர்!) இருக்குற ஒரு தேசிய வங்கியிலதான் வேலை பார்க்கிறார். பகலில் பேங்க் வேலை; ராத்திரியில் மட்டும் பூஜை. வெள்ளி, செவ்வாய் மாதிரி விசேஷ நாட்களில் ராத்திரி ரெண்டு மணி வரைக்கும்கூட பூஜை நடக்கும். ஒவ்வொரு முறை வரும்போதும் 'சாமியோட காலால் ஒரே ஒரு மிதி வாங்கிட மாட்டோமா'ன்னு ஏக்கத்தோடதான் வர்றோம் (எல்லாம் இந்த நாட்டைப் புடிச்ச கெரகம்!). இந்த முறை நிச்சயம் எனக்கு சாமி கருணை காட்டும்...'' என்று காத்துக்கிடந்தார் அந்த அப்புராணி பக்தர்.
சிறிது நேரத்திலேயே 'ஜல்ஜல்'லென்ற கொலுசு ஒலியோடு கம்பீரமாக அறைக்குள் நடந்து வந்தார் 'சாக்லெட் சாமி' என்ற 'அம்மன் சாமி!' காதில் வளையக் கம்மல், காலில் கொலுசு, கால் விரலில் மெட்டி.... என்று விநோத வில்லனுக்குத் தேவையான கெட்-அப்பில் ஆஜரானவர், அம்மன் சிலை அருகில் உள்ள சொகுசு நாற்காலிக்குள் உடம்பைப் புதைத்துக்கொண்டார்.
தளும்பி நிற்கும் தீர்த்தம் (தப்பா யோசிக்கப்படாது!), குவித்துவைக்கப்பட்ட குங்குமம், விதம்விதமான சாக்லெட் குவியல்களுக்கு மத்தியில் அமர்ந்து எதையோ மென்றுகொண்டே ஜரூராக அருள் வாக்குக்கு சைகை காட்டினார்.
அவ்வளவுதான்... 'ஆசீர்வாத மிதி' வாங்கக் கூட்டம் அலைமோதியது. நெடுஞ்சாண் கிடையாகத் தொப்பென்று சாமியின் பாதத்தில் விழுந்து வணங்கு கிறது கூட்டம். பக்தியின் உச்சத்தில், சிலர் சாமியின் பாதங்களைத் தொட்டு... முத்தமிட்டு உருகுவதோடு, 'சாமியின் காலால் மிதி வாங்காமல் எழும்பவே மாட் டேன்!' என்ற பிடிவாதத்துடன் படுத்த நிலையிலேயே நேரம் கடத்துகின்றனர். இன்னும் சிலர், கீழே கிடக்கும் பூச்சிதறல்களை சுத்தம் செய்யும் சாக்கில் 'மிதி' வாங்க 'விடா முயற்சி' செய்கின்றனர்!
பெண் பக்தைகளும்கூட சாஷ்டாங்கமாக சாமியின் காலில் விழுந்து கும்பிடுகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் எந்தவிதத் தயக்கமும் இன்றி பாந்த மாக மல்லிகைப் பூவைச் சூடி அழகு பார்க்கிறார் சாக்லெட் சாமி. உச்சி குளிர்ந்து நிற்கும் அந்தப் பெண் பக்தைகளின் நெற்றியில் அடுத்த கட்டமாக உரிமையோடு குங்குமத் திலகமும் இடுகிறார். கூடவே, மறக்காமல் அவர்களது தாலியை தன் கைகளுக்குள் பொத்தி அழுத்தியவாறு சில நொடிகள் முணு முணுக்கிறார் சாமி! இது தவிர, சொந்த வாழ்க்கைக் குறையைச் சொல்லி அழும் சில பெண் பக்தைகளின் வாய்க்குள் சட்டென்று ஓர் ஒற்றைச் சாக்லெட்டைப் பிரித்துத் திணிக்கிறார். கசப்புகள் கரைந்து இனிப்பாகிவிடுமாம்! அத்தனையையும் பக்கத்தில் இருந்து பார்த்து பூரிப்போடு பரவசமாகிறார்கள் அவரவர் கணவன்மார்கள்!
பக்தர்கள் எல்லோருக்கும் 'கால் மிதி' பாக்கியம் கிடைத்துவிடாது. அதற்கும் ஒரு முதுகு யோகம் வேண்டும். தம்பதி சகிதமாக வந்து விழுந்து வணங்கிக்கொண்டு இருந்தவர்களில், ஓர் ஆண் பக்தரின் முதுகில் திடீரென தனது இரு கால்களையும் படாரென்று தூக்கி மிதித்து சாமி 'ஆசீர்வாதம்' செய்ததில், பதறிபோனோம். மிதி வாங்கிய வலி நமக்குப் புரியவில்லை. அடுத்தடுத்து மிதி வாங்கும் ஆவலோடு கூட்டமும் முண்டியடித்துத் திணறியது.
'கடவுள்களின் உணவான சாக்லெட்டை(?) சாப்பிட்டால் முதுமையைத் தடுக்கலாம்!' என்ற 'பிராண்ட் நியூ' தத்துவத்தை விளக்கிச் சொல்கிறது பிட் நோட்டீஸ் ஒன்று. ஊருக்கே சாக்லெட் கொடுக்கும் சாமியோ தனது முதுமையை மறைக்க தலைமுடி, தாடிக்கு பளிச்சென்று 'டை' பூசி இளமையைக் காப்பாற்றுகிறார். நமது முறை வந்ததும் சாமியை நெருங்கி நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு பேச எத்தனித்தோம். சட்டென்று டென்ஷனாகி, ''ஆன்மிகத்தைப்பற்றி உனக்கு என்ன தெரியும்? ஜூ.வி-யில் என்ன பக்தியைப் பற்றியா எழுதறீங்க...?'' என்று திடீர் 'அருள்' வந்து ஆட ஆரம்பித்தார். ரொம்ப நேரம் கழித்து சமாதானமாகிப் பேச ஆரம்பித்தார்.
''இந்த அம்மன் வழிபாட்டை 26 வருஷமா செய்துட்டு வர்றேன். இதுவரையிலும் எந்தக் கெட்ட பெயரும் எனக்குக் கிடையாது. ஒரு மனுஷாளைப் பாத்த மாத்திரத்திலேயே இவர் டாக்டர், இன்ஜீனீயர்னு யாராலும் சொல்லிட முடியுமா? உடம்பு சரியில்லைன்னு டாக்டர்கிட்டே போறோம். அவர் ஆம்பளை டாக்டரா... பொம்பளை டாக்டரான்னு பார்த்துக்கிட்டாப் போறோம்? யாராயிருந்தா என்ன... நமக்கு உடம்பு சரியானாப் போதும்னு நினைச்சு சிகிச்சை எடுக்குறோம்! அதே மாதிரிதான் என்னை நம்பி நிறைய பேர் பிரச்னைகளோட வர்றாங்க. அம்மன் கருணையால் அவங்களுக்கு பூ, பொட்டு வெச்சு ஆசீர்வாதம் கொடுக்குறேன். எல்லாம் சுபமாகிடுது. இதெல்லாமே ஒரு ஹீலிங் தெரபிதான்!'' என்று ஒரே போடாகப் போட்டு முடித்தார்.
நன்றி: ஜூவி.
படம்: என்.விவேக்
1 கருத்து:
அவசியம் படிக்க.
பூமி உருண்டை அல்ல தட்டையாம் ? பூமிக்கு அஸ்திவாரமாம்?, பூமிக்கு தூண்களாம் ? பூமிக்கு நான்கு மூலைகளாம்?. சூரியன் தான் நகருகுறது. பூமியல்லவாம்!!
விஞ்ஞான அறிவிற்கு புறம்பான பைபிள் கூற்றுகள்.!!!
கல்வி அறிவு பெற்ற கிறிஸ்துவ மிஷனரிகளை வெட்கி தலை குனிய செய்யும் புனித பைபிளின் ஸ்லோகங்களில் சில.
CLICK THIS AND READ
LINK பைபிளில் மாபெரும் தவறா?. இப்டிலாமா பைபிள் சொல்லுது?
------------------------
கருத்துரையிடுக