அகமதாபாத்,ஜூலை27:ஷொராஹ்ப்தீன் ஷேக் போலி என்கெளண்டர் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் போலீஸ் அதிகாரி என்.கே.அமீன், அரசு தரப்பு சாட்சியாக உள்ளார்.
இது வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள குஜராத் முன்னாள் அமைச்சர் அமித் ஷாவுக்கு இது கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
போலி என்கெளண்டர் வழக்கில் கைதாகியுள்ளவர் அகமதாபாத் முன்னாள் துணை காவல் துறை கண்காணிப்பாளர் என்.கே.அமீன். கடந்த 2007-ல் கைது செய்யப்பட்ட அமீன், இப்போது அமித் ஷா அடைக்கப்பட்டுள்ள சபர்மதி சிறையில்தான் உள்ளார். இந்நிலையில் அவர் அப்ரூவராக இருப்பதாக அவரது வழக்கறிஞர்கள் அகமதாபாத்தில் நேற்று (திங்கள்கிழமை) தெரிவித்தனர்.
இது தொடர்பாக கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.
அப்போது பாதுகாப்பு கருதி அமீனை வேறு சிறைக்கு மாற்ற வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்படும் என்று வக்கீல்கள் தெரிவித்தனர். அவருக்கு ஆகஸ்ட் 7-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜாமீன் மனு ஆகஸ்ட் 2-ல் விசாரணைக்கு வரவுள்ளது.
இதனிடையே அமித் ஷாவை தங்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிஐ அனுமதி பெற்றுள்ளது. இதன்படி ஜூலை 28 மற்றும் 30-ம் தேதிகளில் சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தவுள்ளனர்.
இந்நிலையில் அமித் ஷா சார்பாக பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி இந்த வழக்கில் ஆஜராக இருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக