வியாழன், 15 ஜூலை, 2010

விடுதலைப் போரில் முஸ்லிம்கள்-(புத்தக விமர்சனம்)



இந்த நூலை ஒரு முஸ்லிம் எழுத்தாளர் எழுதியிருந்தால் அதில் வியப்பு ஒன்றும் இருக்காது. திரு. வி.என். சாமி இந்த நூலை எழுதியிருப்பது சமூக நல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.



நூல்: விடுதலைப் போரில் முஸ்லிம்கள்
ஆசிரியர்: வி.என். சாமி
விலை: ரூ. 500
பக்கங்கள்: 1112
வெளியீடு: பாவலர் பதிப்பகம்
37, குருபக்காரன் சாலை,
மதுரை: 625 009
தொலைபேசி: 04524512250

இந்திய விடுதலைக்காக சிறை சென்றவர்களிலும், உயிர் தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். அவர்களுடைய மக்கள் தொலை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் உயிர் துறந்த முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகம் என்றார் மூத்த பத்திரிக்கையாளர் குஷ்வந்த் சிங். ஆனால் இன்றளவிலும் முஸ்லிம்களின் தியாக மற்றும் வீர வரலாறு மறைக்கப்பட்டே வந்திருக்கின்றது.

இந்நூலாசிரியர் முஸ்லிமாக இருந்தால் ஒரு தலைபட்சமாக முஸ்லிம்களுக்கு சாதகமாக எழுதியிருக்கிறார் என்ற எண்ணம் தோன்றும். ஆனால் இந்நூலாசிரியர் வி.என். சாமி அவர்கள் தினமணி நாளிதழின் மூத்த செய்தியாளராக பணியாற்றியவர், நூலாசிரியர் பத்திரிக்கையாளர் என்பதால் விடுதலைப் போரில் முஸ்லிம்களின் வீர வரலாற்றை விரிவாகவும், ஆழமாகவும் தகுந்த சான்றுகளுடனும் எழுதியிருக்கிறார்.

நூலில் இருந்து சில பகுதிகள்........

குஞ்சலி மரைக்காயர்

இந்திய விடுதலைப் போரின் முன்னோடியாக திகழ்ந்த கேரளத்து குஞ்சலி மரைக்காயர், ஆங்கிலேயர்கள் இந்தியாவில் கால் பதிப்பதற்கு முன்னர் வருகைப் புரிந்த போர்ச்சுகீசியரை விரட்ட, கடற்போரில் பல்வேறு சாகஸங்களைப் புரிந்தார். இவரது நினைவைப் போற்றும் வகையில் சுதந்திர இந்தியாவின் போர்க் கப்பல் ஒன்றுக்கு குஞ்சலி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஹைதர் அலி-திப்புசுல்தான்

ஒரு சிப்பாயாக வாழ்க்கையைத் தொடங்கி மைசூர் சுல்தானக உயர்ந்து பின்னர் இந்திய மண்ணிலிருந்து ஆங்கிலேயரை விரட்ட மிகுந்த துணிச்சலுடன் போரிட்டவர். ஆனால் மராத்தியரும், நிஜாமும், ஆற்காட்டு நவாபும் துரோகமிழைத்தால் ஹைதர் அலியின் நோக்கம் நிறைவேறாமல் போனது. ஹைதர் அலியின் மகனான திப்பு சுல்தான் தந்தை வழி நின்று தனது இறுதி மூச்சிறுக்கும் வரையிலும் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடியவர்.

மருதநாயகம் கான்சாகிப்


இந்திய மண்ணிலிருந்து வெள்ளையரை வெளியேற்ற வேண்டும் என்னும் உறுதியுடன் விடுதலைப் போரில் ஈடுபட்டு வரலாறு படைத்தவர் மருதநாயகம் கான்சாகிப். கான்சாகிப் மதுரையில் ஆங்கிலேயரின் கொடியை பீரங்கி வாயில் வைத்துச் சுட்டுப் பொசுக்கி விட்டு சுதந்திர பிரகடனம் செய்தவர். இவர் தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது சொந்த நாட்டு துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டார். மதுரையை அடுத்த சம்மட்டிபுரம் என்னுமிடத்தில் 15-03-1764 அன்று கான்சாகிபை ஆங்கிலேயர் தூக்கிலிட்டனர். மூன்று நாள்கள் கழித்து அவரது உடலை பல துண்டுகளாக வெட்டி, தலையை திருச்சியில் புதைத்தனர். வெட்டி எடுத்த கை, கால்களைத் திருநெல்வேலி, திண்டுக்கல், நத்தம் ஆகிய ஊர்களில் புதைத்தனர். கை, கால்கள் இல்லாத உடல் மதுரையில் சம்மட்டிபுரத்தில் புதைக்கப்பட்டது.

மாப்பிள்ளைமார் கிளர்ச்சி

மாப்பிள்ளைமார்கள் செய்த புரட்சி மகத்தானதாகும். இது நாடு தழுவிய போராட்ட இல்லாவிடினும் கூட, 1857ல் நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சிக்குப் பின் நடந்த மிகப் பெரிய புரட்சியாகும். கேரளத்தில் எறநாடு, வள்ளுவநாடு முதலிய மலபார் தாலுக்காகளில் இப்புரட்சி நடைபெற்றது.


இந்த கிளர்ச்சியின் போது நூற்றுக்கணக்கான மாப்பிள்ளைமார்கள் கூட்ஸ் வண்டியில் அடைக்கப்பட்டு கோவைக்கு அனுப்பப்பட்டனர். கூட்ஸ் வண்டியின் கதவுகள் இறுக்கமாக பூட்டப்பட்டதால் காற்றோட்டமும், வெளிச்சமும் இல்லாத நிலையில் தாகத்தாலும் மூச்சுத் திணறலாலும் சித்திரவதைப்பட்டு ஏராளமான மாப்பிள்ளைமார்கள் இறந்தனர்.

பெண் போராளிகள்


இந்திய விடுதலைப் போரில் இஸ்லாமியப் பெண்களும் ஆர்வத்துடன் பங்கு கொண்டனர்.

அயோத்தி மன்னர் வஸீர் அலிஷாவிடமிருந்து ஆங்கிலேயர் அயோத்தியைக் கைப்பற்றினர். அப்போது மன்னரின் மனைவி பேகம் ஹசரத் மஹல் லக்னோவில் தங்கியிருந்தார். அயோத்தியை ஆங்கிலேயர் கைப்பற்றியதை எதிர்த்து மக்களைத் திரட்டி அவர் புரட்சியில் ஈடுபட்டார். ஒன்பது மாத காலம் புரட்சியாளர்கள் பேகம் ஹசரத் மஹல் தலைமையில் ஆங்கிலேயப் படையை எதிர்த்துப் போர் புரிந்தனர். இறுதியில் ஆங்கிலேய இராணுவத்தின் கை ஓங்கியது. பேகம் ஹசரத் மஹல் தனது மகன் பிரிஜிஸ் காதிருடன் நேபாளத்திற்குத் தப்பிச் சென்றார். நேபாள எல்லையில் ஆங்கிலேயர்களால் அவரும் அவரது மகனும் கொல்லப்பட்டனர்.

அபுல் கலாம் ஆசாத் மீது ஆங்கிலேய அரசு 1922ம் ஆண்டு ராஜ நிந்தனை குற்றம் சாட்டி கைது செய்தது. அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் ஒரு வருடக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.. இத்தண்டனை பற்றி ஆசாத்தின் மனைவி ஸுலைஹா பேகம் கீழ்க்கண்டவாறு காந்திஜிக்கு தந்தி அனுப்பினார்.


ஷஎன் கணவர் அபுல் கலாம் ஆசாத்திற்க நீதி மன்றம் ஓராண்டுக் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது. இந்தத் தண்டனை நாங்கள் எதிர் பார்த்ததை விடக் குறைவு. தேசத் தொண்டுக்கு வழங்கப்படும் பரிசு சிறைத் தண்டனை என்றால் இப்போது வழங்கப்பட்டுள்ள ஓராண்டுக் கடுங்காவல் தண்டனை மிகவும் அற்பமான பரிசு
.
வள்ளல் ஹபீப்

மியான்மரில் (அன்றைய பர்மா) ஹபீப் பெரும் வணிகராகத் திகழ்ந்தவர்.பெரும் கோடீஸ்வரர். நேதாஜி, மியான்மர் சென்ற போது அவர் தம் சொத்துக்கள் அனைத்தையும் இந்திய நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணம் செய்தார். அதைக் கண்டு நேதாஜி பிரமித்து விட்டார். இதன் பின் கிழக்காசியாவில் நேதாஜி பயணம் செய்த இடங்களிலெல்லாம் ஹபீபின் வள்ளல் தன்மையைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். நாட்டைப் பிடித்திருக்கும் பிணி நீங்க ஹபீப் மருந்து தேவை
என்று அவர் பேசிய கூட்டங்களில் எல்லாம் சொல்லலானார்.

மேலும் மரண தண்டனை பெற்ற முஸ்லிம் வீரர்கள், முஸ்லிம் பக்கிரிகள் உயர்த்திய போர்கொடி, சிப்பாய் புரட்சியில் இன்னுயிர் ஈந்தவர்கள், ஜாலியன் வாலாபாக்கில் உயிரிழந்த முஸ்லிம்கள், விடுதலைப் போரில் அலிகர் பல்கலைக் கழக மாணவர்கள், இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு இன்னுயிர் ஈந்த முஹம்மது ஹபீப், உலமாக்களின் விடுதலை வேட்க்கை, விடுதலைப் போரில் ஈடுபட்ட பத்திரிக்கையாளர்கள், கவிஞர்களும் கலைஞர்களும் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகளில் பல்வேறு புதிய தகவல்களையும் நூலாசிரியர் இணைத்திருக்கிறார். நூலில் முத்தாய்ப்பாக சிறை சென்ற தியாகிகளின் ஊர்வாரியான விவரங்கள் மற்றும் நூலின் பிற்பகுதியில்விரிவான பெயர் மற்றும் பொருட் குறிப்பகராதியும் உண்டு. கெட்டி மேப்லித்தோ தாளில் இந்நூல் அச்சிடப்பட்டுள்ளது. கட்டுரைகளுக்கேற்ப பல்வேறு கோட்டோவியங்களும் நூலில் உண்டு.


இந்நூலுக்கு மதிப்புரை எழுதியுள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், '80 வயதை கடந்தப் பின்பும் அவர் இன்னும் எழுதிக் கொண்டிருப்பது அவரது அற்பணிப்பு மனப்பான்மையின் வெளிப்பாடு தான். இந்த நூலை வெளியிட அவர் பட்ட சிரமங்கள் சாதாரணமானவை அல்ல. இந்த நூலை ஒரு முஸ்லிம் எழுத்தாளர் எழுதியிருந்தால் அதில் வியப்பு ஒன்றும் இருக்காது. திரு. வி.என். சாமி இந்த நூலை எழுதியிருப்பது சமூக நல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு பெரும்பாலும் இருட்டடிப்பு செய்யப்பட்டு வரும் வேளையில் திரு. வி.என். சாமி அவர்களின் இந்த அற்புதமான ஆய்வு நூலை இளைய தமிழகத் தலைமுறை மக்களுக்கு ஓர் ஒளி விளக்காக அமைந்துள்ளது. சமூக நல்லிணக்கம் தழைத்தோங்க விரும்பும் தமிழக மக்கள் என்னென்றும் திரு.வி.என். சாமிக்கு நன்றிக் கடன் பட்டுள்ளார்கள். இந்த நன்றிக் கடனின் அறிகுறியாக இந்த நூல் தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் பரவ வேண்டும். இது பாடநூலாக அமைவதற்கு அரசு முன்வர வேண்டும்.

இந்நூல் முஸ்லிம்களின் இல்லங்கள் ஒவ்வொன்றிலும் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒன்று.

thanks to : Pasur Babu

கருத்துகள் இல்லை: