சனி, 24 ஜூலை, 2010

ஷொராஹ்ப்தீன் போலி என்கெளண்டர் வழக்கு- குஜராத் அமைச்சர் தலைமறைவு- சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல்!

ஜுலை.24:ஷொராஹ்ப்தீன் ஷேக் மற்றும் அவரது மனைவி கவுசர் பீவி போலி என்கெளண்டர் வழக்கு தொடர்பாக நேற்று சிபிஐ முன் நேரில் ஆஜராகியிருக்க வேண்டிய குஜராத் மாநில உள்துறை இணையமைச்சர் அமீத் ஷா தனக்கு கூடுதல் கால அவகாசம் கோரினார். ஆனால், அதை சிபிஐ நிராகரித்துவிட்டது. இதையடுத்து அவர் தலைமறைவாகிவிட்டார்.

மேலும் சிபிஐயால் கைது செய்யப்படாமல் இருக்க அவர் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால், அதை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து அவர் மீது சிபிஐ குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதனால் இந்த வழக்கில் அவர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுவிட்டார்.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு மிக நெருக்கமான இவர் தான் இந்த என்கெளண்டரை திட்டமிட்டு நடத்தியதாக சிபிஐ கருதுகிறது.

குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கயிருந்த நிலையில் அரசுக்கு ஆதரவாக வாக்குகளைத் திரட்ட, இந்த தம்பதியை தீவிரவாதிகள் என்று குற்றம் சாட்டி கொலை செய்துள்ளனர் குஜராத் போலீஸ் அதிகாரிகள் என்கிறது சிபிஐ.

இதில் அமித் ஷாவுக்கு நேரடியாக தொடர்பு இருந்துள்ளது. யார் சொல்லி இவர் இந்த என்கெளண்டரை நடத்தினார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கொலையை பார்த்த சாட்சியும் என்கெளண்டர்:
மேலும் இந்தக் கொலையை நேரில் பார்த்த துள்சிராம் பிரஜாபதி என்ற வாலிபரையும் என்கெளண்டரில் குஜராத் போலீஸ் அதிகாரிகள் கொன்றனர். அவர் தப்பிச் செல்ல முயன்றதாகவும் அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் இவர் கொல்லப்பட்டதாகவும் போலீசார் கூறினாலும் நேரில் பார்த்த சாட்சியை ஒழித்துக் கட்டவே இவர் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. இதன் பி்ன்னணியிலும் அமித் ஷா இருந்துள்ளார்.

இந் நிலையில் ஷொராஹ்ப்தீன் போலி என்கவுன்ட்டர் வழக்கு தொடர்பாக வியாழக்கிழமை மதியம் 1 மணிக்குள் காந்திநகரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று அமீத் ஷாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து நேற்று மதியத்துக்குள் அவர் நேரில் ஆஜராக வேண்டும் கால அவகாசம் வழங்கப்பட்டது. இது தொடர்பாக அமைச்சரின் வீட்டு கதவில் சிபிஐயின் சம்மன் ஒட்டப்பட்டது.

ஆனால், நேற்றும் அவர் ஆஜராகவில்லை. தனக்கு கூடுதல் அவகாசம் வேண்டும் என்று கோரியுள்ளார். மேலும் என்னென்ன கேள்விகளை கேட்கப் போகிறீர்கள் என்றும் சிபிஐயிடம் அமித் ஷாவின் வழக்கறிஞர்கள் கேட்டனர். கேள்விகள் பட்டியல் எல்லாம் தரமுடியாது என்று அந்த வழக்கறிஞர்களிடம் சிபிஐ கூறிவிட்டது. இதையடுத்து அமித் ஷா தலைமறைவாகிவிட்டார். அவரைத் தேடி சிபிஐ பல்வேறு இடங்களுக்கு படைகளை அனுப்பியுள்ளது. அவரது அலுவலகத்துக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள், அவரது உதவியாளரிடம் விசாரணை நடத்தினர்.

பகல் 1 மணி வரை அவர் விசாரணைக்கு வராததால் அவர் மீது சிபிஐ குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதன்மூலம் இந்த வழக்கில் அவர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுவிட்டார்.

எந்த நேரமும் கைதாவார்:
இந் நிலையில் அமித் ஷா முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகினார். ஆனால், மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதையடுத்து அமித் ஷாவை கைது செய்ய சிபிஐ தீவிரமாக களமிறங்கியுள்ளது.

முன்னதாக 2005ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி அகமதாபாத் அருகே பயங்கரவாதி என்று கூறி ஷொராஹ்ப்தீன் ஷேக் போலீஸ் என்கெளண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை உள்துறை இணையமைச்சர் அமீத் ஷா தான் என்கெண்ட்டர் நடத்தி கொல்ல போலீஸாருக்கு உத்தரவிட்டார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த வழக்கில் சாட்சியாக இருந்த அவரது மனைவி கவுசர் பீவியும் 2006ம் ஆண்டு ஜனவரியில் கொல்லப்பட்டார்.

இந்த என்கெண்ட்டர்களை நடத்திய 4 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 10 போலீஸார் கைது செய்யப்பட்டுவிட்டனர். ஆனால், அமித் ஷாவையும் போலீஸ் அதிகாரிகளையும் காப்பாற்ற குஜராத் அரசு முயன்றதால் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அமைச்சரின் தொலைபேசி உரையாடல் பட்டியல்:
இதையடுத்து இப்போது சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த என்கெளண்ட்டர் தொடர்பான அமைச்சர் அமித் ஷாவின் தொலைபேசி உரையாடல்களையும் சிபிஐ பதிவு செய்துள்ளது.

அதில்,ஷொராஹ்ப்தீன், அவரது மனைவி, சாட்சியான பிரஜாபதி ஆகியோரின் கொலைகளுக்கு முன்பும் பின்னும் 4 ஐபிஎஸ் அதிகாரிகளுடனும் அமித் ஷா நேரில் பலமுறை தொடர்ந்து தொலைபேசியில் பேசியது உறுதியாகியுள்ளது.

இந்தக் கொலைகள் நடந்த அடுத்த நிமிடமே அமைச்சரின் செல்போனை இந்த 4 அதிகாரிகளும் அடுத்தடுத்து தொடர்பு கொண்டுள்ளனர். அவரும் இவர்களை தொடர்பு கொண்டுள்ளார் என்பதை சிபிஐ உறுதி செய்துள்ளது.

மேலும் இந்த என்கெளண்டர்களை நடத்திய 4 ஐபிஎஸ் அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை நடத்தியதில் இந்த கொலைகளின் பின்னணியில் அமித் ஷா இருப்பதை உறுதி செய்துள்ளனர். அவர் தான் இந்த என்கெளண்டர்களை நேரடியாகவே மேற்பார்வையிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

துள்சிராம் பிரஜாபதி தப்பியோடிபோது அவர் தங்களை சுட்டதாகவும் பதிலுக்கு தாங்கள் சுட்டபோது தான் அவர் இறந்ததாகவும் போலீஸ் அதிகாரிகள் கூறுவதும் பொய் என்று தெரியவந்துள்ளது.

பிரஜாபதியின் சட்டையில் குண்டு துளைத்துள்ளதை பார்க்கும்போது அவர் மிக மிக அருகில் வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டதாவும், ஓடும்போது சுடப்பட்டதாக தெரியவில்லை என்றும் பிரதேப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அறிக்கை அளித்துள்ளனர்.

இன்ஸ்பெக்டரே சுட்டு்க் கொண்டாரா?:
மேலும் பிரஜாபதி சுட்டதால் காயம் ஏற்பட்டதாக கூறப்பட்ட இன்ஸ்பெக்டரின் கையில் உள்ள காயம் தூரத்தி்ல் உள்ள நபர் சுட்டதால் ஏற்படவில்லை, அது மிக அருகி்ல் வைத்து சுடப்பட்ட குண்டு, ஒருவேளை அந்த இன்ஸ்பெக்டரே அந்த காயத்தை உருவாக்கியிருக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த இன்ஸ்பெக்டர் எக்ஸ்-ரே எடுக்கவோ, மருத்துவப் பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் அட்மிட் ஆகவோ மறுத்துவிட்டார் என்றும் மருத்துவர்கள கூறியுள்ளனர்.

அமைச்சர் உத்தரவால் கொல்லப்பட்ட ஷொராஹ்ப்தீன் மனைவி:
இதற்கிடையே இந்த போலி என்கெளண்டர் வழக்கில் கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் என்.வி.செளஹான் இந்த என்கெளண்டர்கள் குறித்து சிபிஐயிடம் ஏராளமான தகவல்களைத் தந்துள்ளார்.

ஷொராஹ்ப்தீன் கொல்லப்பட்ட பிறகு அவரது மனைவி கவுசர் பீவியின் பாதுகாப்புக்கு இருந்த அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில்,

கவுசர் பீவி ஒரு பண்ணை வீட்டில் வைக்கப்பட்டிருந்தார். அப்போது ஐபிஎஸ் அதிகாரி வன்சாரா அங்கு வந்தார். அவருக்கு அமைச்சர் அமித் ஷாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவரிடம் கவுசர் பீவி பற்றி கவலைப்பட வேண்டாம் என்றார். ஆனால், எதிர்முனையில் இருந்த அமித் ஷா தொடர்ந்து ஏதோ சொல்ல வன்சாரா அமைதியாகிவிட்டார்.

இந்த தொலைபேசி அழைப்பு முடிந்தவுடன் என்னிடம் திரும்பிய வன்சாரா, கவுசர் பீவியை உயிருடன் விட்டு வைப்பது நமக்கு ஆபத்து. எனவே அவரை கொன்று உடலை கண்டுபிடிக்கவே முடியாதபடி அழித்துவிடுமாறு அமைச்சர் அமித் ஷா கூறிவிட்டார் என்றார்.

இதையடுத்து கவுசர் பீவியை குஜராத் போலீஸ் அதிகாரிகள் கொன்று உடலை எரித்துவிட்டு, அவர் காணாமல் போய்விட்டதாக வழக்குப் பதிவு செய்தனர்.

அறிக்கையை மாற்ற மறுத்த விசாரணை அதிகாரி:
அதே போல குஜராத் சிஐடி பிரிவு இன்ஸ்பெக்டரான சோலன்கியும் இதே போல சிபிஐயிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அவரும் இந்தக் கொலைகளில் அமைச்சர் அமித் ஷாவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இவர் தான் ஷொராஹ்ப்தீன் என்கெளண்டர் வழக்கை விசாரித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தனது விசாரணை அறிக்கையில், ஷொராஹ்ப்தீன் தீவிரவாதி அல்ல, அவர் போலி என்கெண்டரில் தான் கொல்லப்பட்டுள்ளார். அவரையும் அவரது மனைவியையும் துள்சிராமையும் போலீசார் கடத்திச் சென்றே கொலை செய்தனர். பின்னர் அதை என்கெளண்டர் போல காட்டி உலகை ஏமாற்றினர் என்று கூறியுள்ளார்.

ஆனால், இந்த விசாரணை அறிக்கையை பார்த்து டென்சனான அமைச்சர் அமித் ஷா அதை அழித்துவிடுமாறு தனக்கு உத்தரவிட்டதாக சிஐடி பிரிவின் ஐஜி கீதா ஜோகிரி தன்னிடம் கூறியதாகவும் சோலன்கி சிபிஐயிடம் கூறியுள்ளார்.

அறிக்கையை என்கெளண்டர் நடத்திய அதிகாரிகளுக்கு ஆதரவாக மாற்றி எழுதித் தருமாறு தன்னிடம் கீதா கூறியதாகவும் ஆனால், அதை ஏற்க தான் மறுத்துவிட்டதாகவும் சோலன்கி தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் முதலில் கீதா ஜோகிரி தான் விசாரணை அதிகாரியாக இருந்தார். ஆனால், விசாரணையை இவர் மிக மிக மெதுவாக நடத்தியதால் அவரை சுப்ரீம் கோர்ட் நீக்கியது நினைவுகூறத்தக்கது.

மேலும் ராஜஸ்தானில் இருந்த இந்த என்கெளண்டரை நேரில் பார்த்த சாட்சியான பிரஜாபதியை சந்திக்க சோலன்கி அனுமதி கோரி கடிதம் எழுதியபோது அதைத் தர கீதா மறுத்துள்ளார். இது குறித்து சோலன்கி கேட்டபோது, அனுமதி தர வேண்டாம் என்று தனக்கு உத்தரவு வந்துள்ளதாக கீதா கூறியுள்ளார்.

இந் நிலையில் பிரஜாபதியும் என்கெளண்டரில் கொல்லப்பட்டுவிட, கீதாவுக்கு சோலன்கி எழுதிய கடிதமும் மாயமாகிவி்ட்டது சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாட்டிவிட்ட ரியல் எஸ்டேட் அதிபர்கள்:
இத்தோடு அமித் ஷாவுக்கு சிக்கலைத் தந்துள்ள இன்னொரு விஷயம் இரு ரியல் எஸ்டேட் அதிபர்கள் சிபிஐயிடம் தந்துள்ள வாக்குமூலம். அதில், தங்களிடம் பணம் கேட்டு ஷொராஹ்ப்தீன் மிரட்டி வந்ததாக வாக்குமூலம் தருமாறு தங்களை அமித் ஷாவும் போலீஸ் அதிகாரி வன்சாராவும் கட்டாயப்படுத்தி வாக்குமூலத்தை பதிவு செய்ததாக இருவரும் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஷொராஹ்ப்தீன் ஒரு தாதா கும்பலைச் சேர்ந்த தீவிரவாதி என்பதைப் போல காட்ட இந்த ரியல் எஸ்டேட் அதிபர்களை அமித் ஷாவும் போலீசாரும் பயன்படுத்தியதும் உறுதியாகியுள்ளது.

ராமன் படேல், தசரத் படேல் என்ற இந்த இரு ரியல் எஸ்டேட் அதிபர்களான சகோதரர்கள் அமித் ஷாவுக்கு ரூ.70 லட்சம் வரை பாதுகாப்பு பணம் தந்து வந்ததாகவும் சிபிஐயிடம் கூறியுள்ளனர்.

அஜய் படேல் என்பவர் மூலம் அமைச்சருக்கு இந்தப் பணத்தைத் தந்து தங்கள் தொழிலுக்கு தொல்லை வராமல் பார்த்துக் கொண்டதாகவும், அந்த வகையில் அமைச்சர் தங்களுக்கு நெருக்கமானதாகவும் கூறியுள்ளனர்.

இத்தனை ஆதாரங்களுடன் இந்த போலி என்கெளண்டர் வழக்கில் வசமாக சிக்கியுள்ளார் குஜராத் உள்துறை இணையமைச்சர் அமீத் ஷா. சிபிஐ முன் ஆஜராகும்போது இந்த ஆதரங்களை வைத்து அவர் விசாரணைக்குப் பின் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பில் இருந்து அரசியலுக்கு வந்தவர் அமீத் ஷா. குஜராத்தில் 2002ம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சியில் அமர்ந்தபோது காவல்துறைக்கு பொறுப்பு வகி்க்கும் உள்துறை இவரிடம் தரப்பட்டது.

இரண்டாவது முறையாக மோடி ஆட்சிக்கு வந்தபோதும் அதே துறையை அமீத் ஷாவுக்கு வழங்கினார் மோடி. 45 வயதாகும் அமீத் ஷா, நரேந்திர மோடிக்கு மிக மிக நெருக்கமானவர் என்பதோடு, இணையமைச்சராக இருந்தாலும் மாநில அமைச்சரவையில் நம்பர் டூ அந்தஸ்தில் இருப்பவர் ஆவார்.

இவர் இப்போது இவ்வாறு நேரடியாக சிக்கியிருப்பது நரேந்திர மோடிக்கும் சிக்கலை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை: