அலஹாபாத்:பாராளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அப்சல் குருவின் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் காங்கிரஸ் காலம் தாழ்த்தி வருவதாகவும், இதனால் அப்சல் குரு காங்கிரஸ் கட்சியின் மருமகனாக திகழ்வதாகவும் பி.ஜே.பி. தலைவர் நிதின் கத்காரி அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார்.
இது குறித்து விமர்சித்துள்ள சமாஜ்வாதி கட்சி எம்.பி.குமார் ராமன் சிங்க், இது போன்ற கருத்துக்கள் ஒரு மனநோயாளியிடமிருந்தே எதிர்பார்க்க முடியும் என்றார்.
இக்கருத்துக்களை துரதிஷ்டம் என்று கூறிய குமார், ஒரு தேசிய கட்சியின் தலைவரிடமிருந்து இதுபோன்ற கருத்துக்கள் ஒரு போதும் வரக்கூடாதது என்றார். இது வெறுப்பு கொண்ட பி.ஜே.பி. அரசியல் கொள்கையை பிரதிப்பலிப்பதாக கூறியுள்ள அவர், இந்திய ஜனநாயக கொள்கைக்கும் பி.ஜே.பி.யின் கொள்கைக்கும் பெரிய அளவில் வித்தியாசங்கள் உள்ளதாக தெரிவித்தார்.
அப்சல் குரு விவகாரத்தில், பி.ஜே.பி வேண்டுமென்றே சிறுபான்மையின மக்களை சீண்டிப் பார்க்கிறது என்று கூறியுள்ள குமார், இங்கு தான் சமாஜ்வாதி கட்சிக்கும் பி.ஜே.பி போன்ற கட்சிக்கும் மாற்றங்கள் இருப்பதாக தெரிவித்தார்.
'காங்கிரஸை நாங்கள் எதிர்த்தாலும், இதுபோன்ற கேவலமான ஒழுக்கமற்ற தன்மையை ஒருபோதும் கையில் எடுத்தது கிடையாது' என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர் அஜய் சிங்க், பி.ஜே.பி. தலைவருக்கு காலில் வர வேண்டிய 'புண்' வாயில் வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
'அரசியல் அனுபவமில்லாத கட்காரிக்கு, எங்கு எப்பொழுது என்ன பேச வேண்டும் என்பதே தெரியாது என்றார். இது போன்ற மனிதர்கள் தேசிய கட்சியின் தலைவர்களாக ஆக்கப்பட்டுள்ளது துரதிஷ்டவசமானது.' என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக