வியாழன், 8 ஜூலை, 2010

காண்ட்ராக் வழங்க யுஎஸ் நிறுவனத்திடம் லஞ்சம் வாங்கிய பிஎச்இஎல், என்டிபிசி

BHEL Logo
வாஷிங்டன்: பல்வேறு இந்திய அரசுத்துறை நிறுவனங்களுக்கு ஏராளமான லஞ்சம் தந்து காண்ட்ராக்ட்கள் பெற்றதாக ஒரு அமெரிக்க நிறுவனம் அந் நாட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கலிபோர்னியாவைச் சேர்ந்த சிசிஐ என்ற மின் நிலைய வால்வுகள் தயாரிக்கும் நிறுவனம் 36 நாடுகளில் காண்ட்ராக்ட் பெற பல மில்லியன் டாலர்கள் லஞ்சம் தந்ததாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இதையடுத்து தான் லஞ்சம் தந்ததை இந்த நிறுவனம் ஒப்புக் கொண்டு, யார் யாருக்கு எவ்வளவு தரப்பட்டது என்ற விவரத்தை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதில் இந்தியாவைச் சேர்ந்த அரசுத்துறை நிறுவனங்களான பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL), தேசிய அனல் மின் வாரியம் (NTPC), மகாராஷ்டிரா மாநில மின்துறை, ஹரியானா மாநில மின்வாரியம், பிலாய் எலெக்ட்ரிக் ஆகிய நிறுவனங்களும் அடக்கம்.

தனது சாதனங்களை விற்க காண்ட்ராக்ட் பெற இந்த நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுக்கு 2004ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை ஏராளமான லஞ்சம் தந்ததாக சிசிஐ தெரிவித்துள்ளது.

பணம் வாங்கிய அதிகாரிகளின் பெயர் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. அதுவும் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

இதில் என்டிபிசியின் நிலக்கரி மின் நிலைய அதிகாரிகளுக்கு தரப்பட்ட லஞ்சம் மட்டும் 1,63,449 டாலர்கள் ஆகும்.

இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுவது புதிய விஷயமல்ல. ஆனால், அதை அமெரிக்க நிறுவனம் பட்டியல் போட்டு நீதிமன்றத்திடம் விளக்கம் தந்துள்ளது தான் புதிய விஷயம்.

இந்தியாவின் பாதுகாப்புத்துறைக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களிலும் பெருமளவில் லஞ்ச-லாவண்யம் நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் தயாரிக்கும் விமானங்கல், ஆயுதங்களை நம்பித்தான் தான் நமது பாதுகாப்பு வீரர்கள் உள்ளனர்.

கருத்துகள் இல்லை: