சனி, 24 ஜூலை, 2010

உலகப் பொருளாதார வளர்ச்சிக்கான இயந்திரம் அல்ல அமெரிக்கா'- பராக் ஒபாமா

ஜுலை.24:'உலகப் பொருளாதார வளர்ச்சிக்கான இயந்திரம் அல்ல அமெரிக்கா' என்று கூறியுள்ள அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து வளரும் பொருளாதாரத்திற்கு ஒரு மாற்றத்தை உலக நாடுகள் கண்டுபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அமெரிக்கா வந்துள்ள பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் உடன் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசியபோது ஒபாமா இவ்வாறு கூறியுள்ளார்.

"அமெரிக்கா வாங்கும், பயன்படுத்தும், இறக்குமதி செய்யும் என்ற அடிப்படையிலான பொருளாதார மாதிரியை நீங்கள் சார்ந்திருக்க முடியாது என்று கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் முதன் முறையாக நான் கலந்து கொண்டபோதே இதை திட்டவட்டமாகத் தெரிவித்தேன்.

பங்குகள் மீது கடன் பெற்றுச் செல்கிறோம்,கடன் அட்டைகளைப் பயன்படுத்துகிறோம், உலகெங்கிலும் சென்று பொருட்களை வாங்குகிறோம். இந்த நிலை மாற வேண்டும்,அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து வளர்ச்சி காணும் பொருளாதாரத்திற்கு மாற்றமாக வேறொரு பொருளாதார மாதிரியை உலகின் மற்ற நாடுகள் உருவாக்க வேண்டும்.

உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை உந்தித் தள்ளும் இயந்திரமாக அமெரிக்க இருக்க முடியாது" என்று ஒபாமா கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: