போலி என்கவுன்டர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போலி என்கவுன்டர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 18 ஜனவரி, 2012

பாட்லா ஹவுஸ் என்கவுன்டர் போலியானது என்கவுன்டரில் போலீஸ்தான் கொன்றது”

பாட்லா ஹவுஸ் என்கவுன்டர் போலியானது என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் கொளுத்திப் போட்ட வெடி டில்லி அரசியல் மட்டங்களில் நன்றாகவே வெடிக்கத் தொடங்கிவிட்டது.

என்கவுன்டர் நடந்தபோது அப்பார்ட்மென்டுக்கு அருகே சிதறி ஓடும் பொதுமக்கள்

பாரதீய ஜனதா கட்சி “ஆமா.. அதுதானே..” என்று தொடங்கி, பாட்லா ஹவுஸ் போலி என்கவுன்டர் தொடர்பில் அரசு பதில்லொல்லியே ஆகவேண்டும். தார்மீகப் பொறுப்பேற்று உட்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று கூறிவிட, “எனக்கு இருக்கும் சிக்கல் போதாதென்று, இது வேறா?” என அதிர்ந்து போயுள்ளார் உட்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

அவசர அவசரமாக தனது கட்சிப் பிரமுகரின் கூற்றையே மறுத்துள்ள அமைச்சர் சிதம்பரம், “2008-ல் பாட்லா ஹவுஸ் துப்பாக்கிச் சண்டை நிஜமானது. பாதுகாப்புப் படையினரும் தீவிரவாதிகளும் நிஜமாகவே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். அந்தச் சண்டையில்தான் இரு தீவிரவாதிகளும் இறந்து போனார்கள்” என்று கூறியுள்ளார்.

இவர்கள் குறிப்பிடும் என்கவுன்டர் 2008-ம் ஆண்டு செப்டெம்பர் 19-ம் தேதி நடைபெற்றது. ஆபரேஷன் பாட்லா ஹவுஸ் என்பது அதற்கு சூட்டப்பட்ட பெயர். டில்லி ஜாமியா நகர் பகுதியில் உள்ள அப்பார்ட்மென்ட் ஒன்றில் அத்திய முஜாஹிதீன் அமைப்பினர் தங்கியிருப்பதாக கிடைத்த உளவுத் தகவலை அடுத்து, இந்த ஆபரேஷன் திட்டமிடப்பட்டது என்றது டில்லி போலீஸ்.

என்கவுன்டரின் பின் தடயங்களைத் தேடும் போலீஸ்

டில்லி போலீஸின் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று அழைக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் மோகன் சர்மா தலைமையில் போலீஸ் படை அந்த வீட்டை சுற்றி வளைத்தது. துப்பாக்கிப் பிரயோகம் நடந்தது.

இறுதியில், இரு தீவிரவாதிகள் (ஆதிஃப் அமின், மொஹமெட் சஜித்) கொல்லப்பட்டார்கள், இருவர் கைது செய்யப்பட்டார்கள். ஒருவர் தப்பி ஓடிவிட்டார் என டில்லி போலீஸ் அறிவித்தது.

தாக்குதலுக்கு தலைமை வகித்துச் சென்ற என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் இன்ஸ்பெக்டர் மோகன் சர்மாவும் கொல்லப்பட்டார்.

இந்த என்கவுன்டர் தொடர்பாக அவ்வப்போது புதிய புதிய கதைகள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் இது எப்போதுமே ஒரு சர்ச்சைக்குரிய என்கவுன்டராகவே இருந்தது.

இப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரே இது போலி என்கவுன்டர் என்று சொல்லிவிட்டதில், பூதம் மீண்டும் கிளம்பியிருக்கிறது. பூதத்துக்கு பிரியாணி போட பாரதீய ஜனதாவும் தயாராகி விட்டது.

என்கவுன்டர் முடிந்தபின் அங்கு குவிந்த மக்கள்

பா.ஜ.க. பேச்சாளர் ரவி ஷங்கர் பிரசாத், “அமைச்சர் சிதம்பரம் இது நிஜமான என்கவுன்டர் என்று சொல்கிறார். ஆனால், அவரது கட்சித் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் போலி என்கவுன்டர் என்கிறார். திக்விஜய் சிங் இந்தக் குற்றச்சாட்டை சுமத்திய மேடையில் ராகுல் காந்தியும் இருந்தார்.

ராகுல் காந்தி முன்னிலையில் திக்விஜய் சிங் சொல்வதை நம்புவதா, அமைச்சர் சிதம்பரம் சொல்வதை நம்புவதா? சோனியா காந்தியும் ராகுலும் இது தொடர்பாக வாய் திறந்து ஏதாவது கூறும் உத்தேசம் ஏதாவது உள்ளதா?” என்று போட்டுத் தாக்கியிருக்கிறார்.

“எனக்குத் தெரிந்தவரை இது நிஜமான என்கவுன்டர்தான். இது தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் நான் பார்த்துவிட்டேன். போலியாக எதுவும் தெரியவில்லை” என்கிறார் அமைச்சர் சிதம்பரம்.

ஆட்சியின் தலைவர் என்ற முறையில் பிரதமர் மன்மோகன் சிங்கோ அல்லது, கட்சியின் தலைவர் என்ற முறையில் சோனியா காந்தியோ இதுவரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

நிலைமை கழுத்துவரை இறுகும்வரை கருத்து தெரிவிக்கும் வழக்கம் அவர்களுக்கு இல்லை.

திங்கள், 9 ஆகஸ்ட், 2010

சொராஹ்புதீன் வழக்கு: மாஜி குஜராத் டிஜிபி ஓ.பி. மாத்தூர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

காந்திநகர்,ஆக8:சொராஹ்புதீன் போலி என்கவுன்டர் வழக்கில், குஜராத் மாநில முன்னாள் டிஜிபி ஓ.பி.மாத்தூர் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார்.

சொராஹ்புதீன் வழக்கை குஜராத் சிஐடி விசாரித்து வந்தபோது அந்த அமைப்பின் தலைவராக இருந்தவர் மாத்தூர்.

அவரை விசாரணைக்கு வருமாறு கூறி சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. இதையடுத்து இன்று மாத்தூர் விசாரணைக்கு ஆஜரானார்.

சிஐடி பிரிவு தலைவராக இருந்த மாத்தூர் பின்னர் அகமதாபாத் கமிஷனராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் டிஜிபி பதவிக்கு உயர்ந்து ஓய்வு பெற்றார். தற்போது குஜராத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ரக்ஷா பல்கலைக்கழகத்தின் தலைமை பொறுப்பை வகித்து வருகிறார்.

சனி, 31 ஜூலை, 2010

மேலும் ஒரு போலி என்கவுன்டர் வழக்கில் சிக்குகிறார் குஜராத் டிஐஜி வன்ஸாரா

அகமதாபாத்: சோராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் டிஐஜி டிஜி வன்ஸாரா, இன்னொரு போலி என்கவுன்டர் வழக்கில் சிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

சோராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் முக்கியக் குற்றவாளியான வன்ஸாரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் டிஐஜி பதவியிலிருந்தும் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்னொரு போலி என்கவுன்டர் வழக்கில் அவர்சிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

வன்ஸாரா அகமதாபாத் நகர குற்றப் புலனாய்வுப் பிரிவு துணை ஆணையராக இருந்தபோது 2003ம் ஆண்டு சாதிக் ஜமால் மேத்தர் என்பவர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது போலி என்கவுன்டர் என தற்போது சலசலப்பு எழுந்துள்ளது.

பவநகரைச் சேர்ந்த சாதிக், 2003ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி அகமதாபாத்தின் நரோடா பகுதியில் உள்ள காலக்ஸி சினிமா தியேட்டருக்கு அருகே குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அப்போது இதுகுறித்து பேட்டி அளித்த வன்ஸாரா, சாதிக் ஒரு லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி. முதல்வர் நரேந்திர மோடி மற்றும் விஎச்பி தலைவர் பிரவீன் டொகாடியா ஆகியோரைக் கொல்ல திட்டமிட்டிருந்தார். இதுகுறித்துத் தகவல் கிடைத்தவுடன் அவரைப் பிடிக்க போலீஸார் விரைந்தபோது தாக்க முயன்றார். இதையடுத்து போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் இறந்தார் என்று கூறியிருந்தார்.

பின்னர் சாதிக்கின் கூட்டாளிகளைப் பிடிக்க முடியவில்லை என்று கூறி இந்த வழக்கை மூடி விட்டனர்.

இந்த நிலையில் தனது சகோதரரை போலி என்கவுன்டர் மூலம் கொன்று விட்டதாக கூறி குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

கடந்த 2007ம் ஆண்டு மே மாதம் இந்த வழக்கை அவர் தொடர்ந்தார். இந்த வழக்கில் தற்போது நீதிபதி அகில் குரேஷி முன்னிலையில் இறுதிக் கட்ட விசாரணை தொடங்கியுள்ளது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது இந்த வழக்கு தொடர்பாக மீடியாக்கள் செய்தி வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரி ஒருவரின் சார்பில் அவரது வக்கீல் வேண்டுகோள் வைத்தார். ஆனால் அதை நீதிபதி ஏற்கவில்லை. ஆகஸ்ட் 6ம் தேதிக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கையும் சிபிஐக்கு விட குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டால் வன்ஸாரா வசமாக சிக்குவார் என கூறப்படுகிறது.