இந்தியாவிலுள்ள தீவிரவாத எதிர்ப்பு சட்ட, திட்டங்களை, இந்திய அரசு முஸ்லிம்களை விருப்பத்துக்குச் சிறையில் அடைப்பதற்குப் பயன்படுத்துவதாக லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச சிறுபான்மை உரிமைகள் கழகம் வெளியிட்ட 2010 ஆண்டு அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
"முஸ்லிம்களைச் சட்டவிரோதமாகக் கைது செய்துள்ள விவரம் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்ட பின்னரும் விசாரணை அதிகாரிகளுக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" எனவும் அந்த அறிக்கை இந்திய அரசு மீது குற்றம் சுமத்துகிறது.
"சிறுபான்மையினருக்கு எதிராக அட்டூழியம் புரிவோரை குற்ற வழக்குகளில் இணைக்காமல் பாதுகாக்கப்படுவதாகவும் மிகச் சில அபூர்வமான சம்பவங்களில் மட்டுமே விசாரணை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது" எனவும் சர்வதேச சிறுபான்மை உரிமைகள் கழகத்தின் தென்னிந்திய பிரிவு பிரமுகர் ஷராஹ் மிஹ்லார் கூறினார்.
"பாட்லா ஹவுஸில் இரு முஸ்லிம் மாணவர்களைப் போலி என்கவுண்டர் மூலம் படுகொலை செய்த விவகாரத்திலும் உத்தரபிரதேசத்திலுள்ள சில இடங்களில் முஸ்லிம் இளைஞர்களைத் தீவிரவாதிகள் என போலியாக முத்திரை குத்திக் கைது செய்த சம்பவத்திலும் 2009 ஜனவரியில் ஆயிரக்கணக்கானோர் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தினர். மும்பை தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர் 6 மாதம் வரை எவ்வித குற்றமும் சுமத்தாமல் ஒரு நபரைச் சிறையிலடைப்பதற்கு அதிகாரம் வழங்கும் சட்டத்தைக் கொண்டுவர அரசு முயற்சி செய்தது. 2009 ஏப்ரல் மாதம், மத்தியப் பிரதேசத்திலுள்ள கிறிஸ்தவ பள்ளிக்கூடத்தில் தாடி வளர்த்தியதற்காக பள்ளியை விட்டு நீக்கப்பட்ட முஸ்லிம் மாணவர் சமர்ப்பித்த மனுவை விசாரணைக்காக ஏற்றுக் கொள்வதற்குக் கூட உச்ச நீதிமன்றம் தயாராகவில்லை" முதலான விஷயங்கள் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தாடி வளர்த்துவது மத அடிப்படைவாதம் என்றும் தீவிரவாதத்தின் அறிகுறி என்றும் தாலிபானிசத்தை இந்தியாவில் பரப்புவதற்கான முயற்சி என்றும் அது மதசார்பற்றக் கொள்கைக்கு எதிரானது என்றும் நீதிபதி கருத்து கூறிய விஷயமும் அந்த அறிக்கையில் நினைவுபடுத்தப்படுகிறது.
"இந்தியாவில் 2009 ஆம் ஆண்டு, இந்துத்துவப் பயங்கரவாதிகள் நடத்திய மதக்கலவரங்களில் 23 பேர் பலியாகினர். 72 பேருக்குக் காயமேற்பட்டது. அஸ்ஸாம், பிகார், குஜராத், கர்நாடகா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் முதலான மாநிலங்களில் கலவரங்கள் ஏற்பட்ட போது, சிறுபான்மையினர் சக்தியுள்ள மாநிலங்களான கேரளம், ஆந்திரப் பிரதேசம், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், தமிழ்நாடு, ஒரிஸா, மேற்கு வங்காளம் போன்றவற்றில் மதக்கலவரங்கள் உருவாகவில்லை.
2009 ஆம் ஆண்டு, சிறுபான்மையினருக்கு முக்கியமான நீதிமன்றத் தீர்ப்புகள் வெளியாகின. குஜராத் இன அழிப்பு வழக்குகள் அதிவிரைவு நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டது. இன அழிப்பில் நரேந்திர மோடியினுடைய பங்கைக் குறித்து விசாரிக்கத் தனி விசாரணை குழுவிடம் நீதிமன்றம் உத்தரவிட்டது. மாயா கொட்னானி, ஜய்தீப் பட்டேல் போன்றோர் உட்பட பாஜக, விஷ்வ ஹிந்து பரிசத் ஆகியவற்றின் மூத்தத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்" என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக