திங்கள், 13 ஏப்ரல், 2009

மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் டாக்டர் ராமதாஸ் திடீர் சந்திப்பு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் என்ற சமுதாய அமைப்பு சமீபத்தில் மனிதநேய மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியல் இயக்கத்தை உருவாக்கியது.
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று இருந்த இந்த கட்சி 2 தொகுதிகளை கேட்டது. ஆனால் ஒரு தொகுதி மட்டும் தான் தர முடியும் என்று தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் தி.மு.க.வுடன் தேர்தல் உடன்பாடு ஏற்படவில்லை. இதை தொடர்ந்து அ.தி. மு.க. தரப்பில் இருந்து பேசப்பட்டது. இதிலும் உடன்பாடு ஏற்படவில்லை.

இதை தொடர்ந்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி புதிய தமிழகத்துடன் இணைந்து போட்டியிட மனித நேய மக்கள் கட்சி முடிவு செய்தது.

முதல் கட்டமாக மத்திய சென்னை, மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடுவதாக மனித நேய மக்கள் கட்சி அறிவித்தது.

மத்திய சென்னையில் ஹைதர் அலியும், மயிலாடுதுறையில் பேராசிரியர் ஜவா கிருல்லாவும், ராமநாதபுரத்தில் சலிமுல்லாகானும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதற்கு ஏற்றவாறு தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் பதவியில் இருந்து ஹைதர் அலி விலகினார்.

இந்த நிலையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் இன்று மதியம் 12.30 மணியளவில் சென்னை மண்ணடியில் உள்ள மனித நேய மக்கள் கட்சி அலுவலகத்துக்கு வந்தனர்.

அவர்களை மனித நேய மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஜவா கிருல்லா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக செயலாளர் ஹைதர்அலி ஆகியோர் வரவேற்றனர். அப்போது டாக்டர் ராமதாஸ் அவர்களிடம் உங்கள் நட்பு நீடித்த நட்பாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று கூறினார்.

பின்னர் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் டாக்டர் ராமதாஸ் தனியாக பேசினார். அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தருமாறு அவர்களிடம் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: