1947ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி இந்தியத் துணைக்கண்டம் மதக் கலவரங்களுக்கிடையே சுதந்திரம் அடைந்தது அனைவரும் அறிந்ததே. முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பாகிஸ்தான் ஒரு பகுதியாகவும் இந்துக்கள் அதிகமாக வாழும் ஒரு பகுதி இந்தியாகவும் பிரிந்தது. இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ்வதா? பாகிஸ்தானுக்கு இடம் பெயர்வதா? என்ற முடிவெடுக்கும் பொறுப்பு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினைச் சார்ந்திருந்தது.
அதுவும் தமிழ் மொழி பேசும் தமிழ்நாடு முஸ்லிம்கள், உருது மொழி பேசும் பாகிஸ்தானுக்கு இடம்பெயர முடியுமா? என்ற பதைபதைப்பு ஏற்பட்டபோது அனைத்துக் கட்சித்தலைவர்களும் ஆச்சரியப்படக்கூடிய ஒரு தீர்மானத்தைக் கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களால் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிறைவேற்றியது. அது என்ன தீர்மானம்?
"இந்தியா தான் எங்கள் தாய் நாடு! இஸ்லாம் எங்கள் மார்க்கம்!", என்று உரத்த குரலில் முழக்கமிட்டதன் மூலம் இந்திய நாட்டின்மேல் முஸ்லிம்களுக்கு உள்ள பற்றினை உலகிற்கு எடுத்துக்காட்டியவர் காயிதே மில்லத் அவர்கள். ஆகவேதான் அவர் உயிரோடு வாழும் வரை அனைத்துத் தலைவர்களாலும் கண்ணியமிகு காயிதே மில்லத் என்று அழைக்கப்பட்டார். இந்திய முஸ்லிம்களின் நட்சத்திரமாக விளங்கினார்.
ஆனால் அவர் மறைவிற்குப் பின்னர் அந்த ஒற்றுமை முஸ்லிம் தலைவர்களிடையே தேய் பிறையாகி விட்டது. எப்படி கம்யூனிஸ்டுகள், மார்க்சிஸ்ட் என்ற இடதுசாரிகள் நம்பூதிபாட் தலைமையிலும் வலதுசாரிகள் மும்பையைச் சார்ந்த டாண்டன் தலைமையிலும் பிரிந்து செயலாற்றினார்களோ அதேபோன்று பனத்வாலா தலைமையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் சுலைமான் சேட் தலைமையில் தேசிய லீக் கட்சியும் இயங்கி வந்தன. இரண்டு தலைவர்களுமே பாராளுமன்றத்தில் சிறந்த பேச்சாளர்கள். மற்ற கட்சித் தலைவர்களாலும் மதிக்கப் பெற்றவர்கள். ஆனால் அவர்கள் இருவரும் பிரியாமல் இருந்திருந்தால் அவர்களே பாராளுமன்றத்தில் நுழைவதற்காக மற்றக் கட்சிகளின் கதவுகளைத் தட்ட வேண்டிய நிலையும் சில தகுதி இல்லாத தலைவர்களின் வீடுகளில் சீட்டுக்காக காத்து இருந்த வேதனையான நிகழ்ச்சிகளெல்லாம் நடந்திருக்காது.
அதேபோன்ற அவல நிலைதான் இடது-வலதுசாரி கம்யூனிஸ்ட்களுக்கும் ஏற்பட்டது! அவர்களால் தனித்தன்மையுடன் முழு பலத்துடன் பாராளுமன்றத்திலோ சட்டசபையிலோ நுழைய முடியவில்லை. வலதுசாரிகளிடமிருந்து பிரிந்து அரசியல் நடத்திய யு.சி.பி.ஐக்கும் அதேநிலைதான். அதன் பின்பு தங்கள் தவறை உணர்ந்து கம்யூனிஸ்டுகள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டதால் மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் திரிப்புரா மாநிலங்களிலும் ஆட்சி அமைத்தும் பாராளுமன்றத்திலும் அதிக எண்ணிக்கையுடன் நுழைய முடிந்தது.
அதேபோன்ற கூட்டணி ஒன்றை இந்தியாவில் வாழும் முஸ்லிம்களும் ஏன் உருவாக்கக்கூடாது? 100 கோடி ஜனத்தொகை கொண்ட இந்தியாவில் ஓட்டுப்போட உரிமை உள்ளவர்கள் 71 கோடி மக்கள். இதனில் 15 சதவீத மக்கள் முஸ்லிம்கள் ஆவர். 543 மக்கவையில் முஸ்லிம் உறுப்பினர்கள் வெறும் 34 பேர்கள்தான். முஸ்லிம்கள் ஏன் பிற கட்சிகளின் ஓட்டு வங்கியாக மாற வேண்டும்? இந்தியாவில் சுதந்திரம் அடைந்தபோது இருந்த அரசியல் கட்டுக்கோப்பு இன்று இல்லாததால்தானே? 1991ஆம் வருடம் நடந்த தமிழக சட்டசபைத்தேர்தலில் முஸ்லிம் அமைப்புகள் பிரிந்து இருந்ததால் சட்டசபையில் சோபிக்க முடியவில்லை. அது மட்டுமல்லாமல், 1992ஆம் வருடம் டிசம்பர் 6இல் பாபர்மசூதி இடிக்கப்பட்ட பிறகு சென்னையில் நடத்திய மீலாது ஊர்வலத்தில், மூன்று முஸ்லிம்கள் கொல்லப்பட்ட துயர சம்பவத்தில் நாம் வாய்பொத்திய ஊமையாக மாறினோம். அதன் பிறகு சிராஜுல் மில்லத் அப்துல்சமது அவர்களும் அப்துல்லத்தீப் அவர்களும் ஒற்றுமையின் அவசரத்தை உணர்ந்து இணைந்தார்கள்.
அவர்களின் கூட்டு முயற்சிற்குப்பின், நான் சென்னை பைக்கிராப்ட்ஸ் ரோட்டில் இருக்கும் ஜம்ஜம் ரியல் எஸ்டேட்ஸ் ஸ்தாபனம் நடத்திய ஈத் மிலான் நிகழ்ச்சியில் இருவருக்கும் வாழ்த்துச் சொன்னேன். அதனைத் தொடர்ந்து அவர்கள் 1993ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்திலிருந்து மெரினா கடற்கரைவரை மிக பிரமாண்டமான ஊர்வலம் ஒன்றையும் மெரினாவில் வைத்து பொதுக்கூட்டம் ஒன்றையும் நடத்தினர். அதன் பாதுகாப்புப் பணியினை நான் டி.சியாக இருந்த போதுக் கவனித்தேன். அதன் பின்பு ஜனாப். அப்துல்லத்தீப் அவர்கள் 1996ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழகத்தில் காங்கிரஸ்கூட தேசிய காங்கிரஸ், தமிழ் மாநிலக் காங்கிரஸ் என்று போட்டி போட்டது; சோபிக்க முடியவில்லை. அதன்பின்பு இரண்டு காங்கிரஸும் இணைந்து போட்டி போட்டு கூடுதல் எம்.பீ, எம்.எல்.ஏக்களைப் பெற்றது. ஆனால் தமிழகத்தில் முஸ்லிம் கட்சிகள் பல இருப்பதால் மே மாதம் 13ந்தேதி நடக்கவிருக்கின்ற மக்களவைத் தேர்தலில் சொந்த சின்னத்தில்கூட போட்டிப் போட முடியாத பரிதாப நிலை உள்ளது. பேராசிரியர் காதர் முகைதீனைத் தலைவராகக் கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் தேசிய லீக்க்கும் இரு பிரிவுகளாகி கோனிகா பசீர் தலைமையிலும் இனாயத்துல்லா தலைமையிலும் தமிழ் மாநில லீக் என்ற கட்சி சேக் தாவூத் தலைமையிலும் இயங்கி வருகின்றன.
5.5.1970 அன்று நள்ளிரவில் உத்திரப்பிரதேசத்தில் உள்ள அலிகார் முஸ்லிம்களிடையே கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள் பேருரை நிகழ்த்தியபோது கீழ்கண்டவாறு கூறினார்கள்: |
"நாம் சிறுபான்மை மக்களாக வாழ்ந்து வருகிறோம். சிறுபான்மை மக்களுக்கு ஒற்றுமை மிக மிக அவசியம். பெரும்பான்மை சமூகத்தினர் எத்தனைக் கட்சியில் வேண்டுமானாலும் பிரிந்து இருக்கலாம்; ஆனால் சிறுபான்மை முஸ்லிம்கள் அப்படி பிரிந்து வாழ முடியாது. அவர்கள் சேர்ந்து வாழக் கடமைப்பட்டிருப்பது குர்ஆனின் கட்டளையாகும். இறைவனின் போதனையை முஸ்லிம்கள் ஏற்று நடந்து ஒற்றுமையாக வாழ்ந்து வந்த காலம் வரை சிறப்பாகவே வாழ்ந்தார்கள். முஸ்லிம்களின் இன்றைய தாழ்ந்த நிலைக்குக் காரணம் என்ன? எப்போது நாம், "இறைவனின் கயிறை ஒற்றுமையுடன் பற்றிப் பிடித்துக் கொள்" என்ற வசனத்தை மறந்தோமோ, அப்போதே தரம் தாழ்ந்து விட்டோம். ஜனநாயகத்தில், அரசியலில் பங்கு பெறாமல் நாம் எப்படி வாழ முடியும்? பிற சமுதாயத்தினருக்கு வேண்டுமானால் அரசியல் வேறு, மதம் வேறு என்றிருக்கலாம்! ஆனால் முஸ்லிம்களுக்கோ மதமும் அரசியலும் ஒன்றாக இணைந்தே இருக்கின்றன. இந்திய சுதந்திரத்திற்குப் பின் முஸ்லிம்லீக் பணியைத் தொடர்ந்து செய்து வந்த மாநிலங்களில் முஸ்லிம்களின் நிலை திருப்திகரமாக இருக்கிறது. முஸ்லிம்கள் ஸ்தாபன ரீதியில் இயங்காத மாநிலங்களில்தான் அவர்கள் வாழ்வு அவலநிலை அடைந்துள்ளது. மாற்றம் காண வேண்டுமென்றால் இறைவனின் போதனைப்படி ஒன்று சேர வேண்டும்…" |
1998ஆம் ஆண்டு கோவைக் கலவரத்தில் பாதிக்கப் பட்ட இஸ்லாமிய சமுதாயத்திற்காக குரல் எழுப்பிய சமுதாயத் தொண்டு நிறுவனம் ஜனாப். ஜெயினுலாப்தீன் தலைமையில் த.மு.மு.க என்று இயங்கி வந்தது. அந்த அமைப்புதான் பெண்கள் தெருவிற்கு வந்து முஸ்லிம்களுக்காகக் குரல் எழுப்பிய முதல் இஸ்லாமிய இயக்கமாக இருந்து வந்தது. துரதிஷ்டமாக அந்த இயக்கம் மூன்றாக உடைந்து ஒரு இயக்கத்திற்கு ஜெயினுலாபுதினும் மற்றொரு இயக்கத்திற்கு பேரா. ஜவாஹிருல்லாஹ்வும் மூன்றாவது இயக்கத்திற்கு எஸ்.எம். பாக்கரும் தலைவர்களாக இருக்கின்றனர். பேரா. ஜவாஹிருல்லாஹ் தலைமையிலான இயக்கம் அரசியல் சார்ந்த 'மனிதநேயக் கட்சி'யினை பிப்ரவரி மாதம் தொடங்கியது. காயிதே மில்லத் பேரன் தாவூத் மியாகான் ஓர் அரசியல் கட்சியினை நடத்தி வருகிறார்.
மே மாதம் 13ஆம் தேதி நடக்கவிருக்கும் மக்களவைத்தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, வேலூர் மக்களவைத் தேர்தலில் தி.மு.க. சின்னத்தில் தன் வேட்பாளரை நிறுத்தி உள்ளது. மற்ற முஸ்லிம் இயக்கங்கள் அ.இ.அ.தி.மு.க. தங்களை வெற்றிலை பாக்கு வைத்து மரியாதையோடு அழைத்து ஆதரவு தரவேண்டும் என எதிர் பார்த்தன. ஆனால் எப்போதுமே முஸ்லிம் சமுதாய மக்களை அலட்சியப் படுத்தும் அஇஅதிமுக அந்தக்கட்சிகளை கண்டு கொள்ளவில்லை எனப் பத்திரிகை செய்திகள் சொன்னதில் தவறில்லை என்றபடி ஜெயினுலாபுதினும் கோனிகா பசீரும் தாவூத் மியாக்கானும் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் 10 சதவீத மக்கள் தொகை கொண்ட முஸ்லிம் அமைப்புகள் நமக்கென பிறைச்சின்னத்தில் அல்லது வேறு தனிச்சின்னத்தில் வேட்பாளரை நிறுத்த முடியவில்லையே என்ற ஆதங்கம் ஒவ்வொரு முஸ்லிம்களுக்கும் இல்லாமலில்லை.
நேற்று முளைத்த கட்சிகள் எல்லாம் தனிச்சின்னத்தில் போட்டி போடும்போது நமக்கு மட்டும் முடியவில்லையே அது ஏன்? உதாரணத்திற்கு நடிகர் விஜயகாந்த் தே.மு.தி.க.வும் நடிகர் சிரஞ்சீவி பிரஜா சமாஜம் கட்சியும் உச்சநீதி மன்றம்வரை சென்று தனிச்சின்னத்தில் போட்டியிட உத்தரவு பெற்றுப் போட்டியிடுகின்றன. வட தமிழகத்தில் மட்டும் பிடிப்புள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தி.மு.க. கூட்டணியில் இருந்தாலும் கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு 2 இடங்களைப் பெற்றாலும் மக்களவைத்தேர்தலில் 2 இடங்களை திமுக கூட்டணியிலிருந்து பெற்றதோடல்லாமல் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதற்காக உச்சநீதிமன்றத்தில் தனிச் சின்னம் ஒதுக்கீடு செய்ய மனு செய்திருக்கிறதே! ஏன் முஸ்லிம் அமைப்புகளின் செல்வாக்கு தமிழகமெங்கும் பரவியிருக்கும்போது நாம் தனிச்சின்னத்தில் விடுதலை சிறுத்தை கட்சி போல 2 சீட்டுகள் பெற்று, தனிச் சின்னத்தில் போட்டி போட முடியவில்லை? நமது அமைப்புகளிடையே ஒற்றுமை இன்மை முதல் காரணமாகும் என்றால் யாராலும் மறுக்க முடியுமா?
காயிதே மில்லத் அவர்களது சொற்பொழிவு தொலை நோக்குப் பார்வையில்லையா? தமிழகத்தில் உள்ள கட்சிகளின் நிலைப்பாடு பற்றி சற்று ஆராய்ந்து பார்க்கலாம்.
எந்தக் கட்சியில் தலைவரின் வழிக்காட்டலும் அரவணைப்பும் ஒற்றுமையும் இல்லையோ அந்தக் கட்சியில் பிளவு ஏற்பட்ட சில செய்திகளை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர ஆசைப் படுகிறேன்:
விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 சட்டசபை உறுப்பினரைக் கொண்டிருந்தது. ஆனால் அக்கட்சித் தலைவர் ஒதுக்கியதால் ஒரு எம்.எல்.ஏ விலகினார்.
மதிமுகவில் 4 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். தலைவருடன் கொள்கை வேறுபாட்டால் இருவர் விலகினர்.
அஇஅதிமுகவில் தலைவர் உதாசீனம் செய்வதாக முஸ்லிம் பெண் எம்.எல்.ஏ உள்பட இருவர் குற்றம்சாட்டி ஒதுங்கி இருப்பதாக பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன.
ஆனால் பா.ம.கவிலோ 20 எம்.எல்.ஏக்களில் ஒருவர்கூட ஊசலாடவில்லையே அது ஏன்? அதன் தலைவர் வன்னியர் சமுதாய உரிமைக்காகவும் ஒற்றுமைக்காகவும் பாடுபட்டு, கடும் போராட்டத்திற்குப் பின் 20 சதவீத ஒதுக்கீடு வாங்கிக் கொடுத்ததன் மூலம் 10 ஆண்டுகளாகத் தன் வன்னிய சமுதாய மக்களை பலவேறு துறையிலும் அமர்த்தி அழகு பார்க்கிறார். ஆகவேதான் 1991ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் பண்ருட்டி ராமச்சந்திரன் என்ற ஒரே ஒரு எம்.எல்.ஏவைப் பெற்றிருந்த பாமக, ராமதாஸின் ராஜதந்திரத்தின் மூலம் 2006ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் 20 எம்.எல்.ஏக்களைப் பெற்று பல்வேறு சலுகைளையும் தன் சமூகத்தினருக்குப் பெற்றுத் தந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையே.
ஆனால் முஸ்லிம் சமூதாயம் 2 அல்லது 3 எம்.எல்.ஏக்களுக்கு தவமிருப்பதேனோ? ஏனென்றால் நம் சமுதாய தலைவர்களிடையே ஒற்றுமைக் குறைவும் "நானா? நீயா? பெரியவன்" என்ற ஈகோதானேக் காரணம்.
சகோதர யுத்தத்தில் பதவியிழந்த மகாபாரதக் கதையை நாம் படிக்கவில்லையா? காட்டில் தனித்தனியாக
|
ஆகவே இஸ்லாமிய சமுதாயமும் அதன் தலைவர்களும் விழித்துக் கொண்டு வருகிற 2011 சட்டசபைத் தேர்தலில் சமுதாயக் கூட்டணி ஏற்படுத்தி அதிக இடங்களைப் பெற்று, தனிச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி வாகை சூட என்ன வழி என இப்போதிருந்தே ஆராய வேண்டாமா? மத்தியில் 15 கொள்கை திட்டம் போட்டும் 27 சதவீடு ஒதுக்கீடு கொண்டு வந்தும் தமிழகத்தில் 3.5 சதவீத ஒதுக்கீடு தந்தும் எத்தனை முஸ்லிம்கள் பயனடைந்தார்கள்? என்ற வெள்ளை அறிக்கையினை நாம் பெற வழி செய்ய வேண்டாமா? அவ்வாறு கேட்டால்தானே அரசு தாராள மனதுடன் இருந்தும் அதனை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளைத் தோலுரித்துக் காட்ட முடியும்? சமுதாய மக்களிடையே ஆகிரத்துக் கல்வியுடன், அரசியல் கல்வியும் போதிக்க வேண்டும்.
நான் சென்னை செம்புதாஸ் தெருவில் இருக்கும் பள்ளிவாசலில் ஒரு வெள்ளி அன்று ஜும்மாத் தொழுகைக்குச் சென்றிருந்தேன். அங்கு, செயலாளர் சேக்தாவூது அவர்கள் ஓர் அறிவிப்பு வெளியிட்டார். அதில் வாக்காளர் பட்டியல் மாநகராட்சி அலுவலகங்களில் ஒட்டப் பெற்றுள்ளது. விடுபட்ட வாக்காளர்கள் விண்ணப்பிக்கவும் என்று அறிவுரை வழங்கினார். உண்மையிலே இதுபோன்ற அறிவிப்புகள்தான் நான் சொன்ன அரசியல் கல்வியாகும். 2004ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் இந்துக்கள் 60 சதவீதம் ஓட்டளித்தபோது முஸ்லிம்கள் 46 சதவீதமும்தானே ஓட்டளித்துள்ளார்கள்? நமது உரிமையை விட்டுக்கொடுக்கலாமா? ஆகவே ஒவ்வொரு முஹல்லாவிலும் பூத் கமிட்டிகள் அமைத்து, விடுபட்ட வாக்களர்களைச் சேர்க்கவும் தேர்தல் அன்று அனைத்து முஸ்லிம்களும் ஓட்டுப் போடவும் வழிவகை செய்ய வேண்டும். அனைத்து மக்களும் வாக்குச்சீட்டுகள் பெற்றிருக்கிறார்களா? என்று ஆய்ந்து அதனைப் பெற ஏற்பாடு செய்ய வேண்டும். ஏனென்றால் வாக்குச்சீட்டு அடையாள அட்டை பாஸ்போர்ட், குடும்ப அட்டை, ரயில் டிக்கட், விமான டிக்கட் ஆகியவைகளைத் துரிதமாகப் பெற உதவும்.
பெரும்பாலும் நமது சமுதாயப் பெண்கள் ஓட்டுப் போடுவது குறைந்தே இருக்கிறது. வருகிற மக்களவையில் நிச்சயமாகப் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க வழிவகை செய்யப்படும். அப்போது படித்த சமுதாயப் பெண்களும் அரசியலில் அங்கம் வகிக்க வாய்ப்புண்டு. அதனைப் பெண்களுக்கு எடுத்துரைத்து அவர்களையும் ஓட்டுப் போட அழைத்துச் செல்ல வேண்டும். சமீபத்தில் சென்னை பிராட்வேயில் வாக்கிங் சென்றபோது சுவரில் ஒரு போஸ்டர் விளம்பரத்தைக் கண்டேன். அதில் டாக்டர் ரசீத் கலிபா கடைசி நபி என்றும் அவர் வெளியிட்ட திருத்திய குர்ஆன் வெளியீட்டு விழா சென்னை பாவாணர் மாளிகையில் நடைபெறுவதாகவும் அறிவிக்கப் பட்டிருந்தது. நல்ல வேளையாக சுன்னத் ஜமாத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு போலீஸார் ஆயிரத்திற்கு மேலான பிரதிகளைப் பறிமுதல் செய்ய வழிவகை செய்தனர். இது போன்ற இஸ்லாத்திற்குப் புறம்பான காரியங்களில் யார் நடந்தாலும் உடனடி நடவடிக்கை எடுக்க ஆதம், ஹவ்வா (அலை) சந்ததியினர் ஒற்றுமையாக இருந்தால் தானே கிடைக்கும்?
சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட கவிக்குயில் சரோஜினி நாயுடு, “சமத்துவ-சகோதரத்துவத்தினை உலகத்திற்கு முதன் முதலில் போதித்தது இஸ்லாம்" என்றார். மஹாத்மா காந்தி, “ஜனநாயகத்தினை போதித்த முதல் மதம் இஸ்லாம்” என்றார். பேராசிரியர் ஹர்குரோன்சி, “ரசூலுல்லா மக்காவினை வென்று அங்குள்ள குரைசியருடன் செய்து கொண்ட ஹுதைபிய்யா உடன்படிக்கை தான் 1400 ஆண்டுகளுக்குப் பின்பு அமைந்த ஐக்கிய நாடு சபைகளின் அடித்தளம்" என்றார்.
தொழுகைக்குச் செல்லும் போது தலையில் தொப்பி அவசியம் இல்லை என்று போதனை செய்தவர்கூட சென்னையில் வேட்பு மனு செய்யும் போது சமுதாய மக்களின் ஓட்டுக்களைப் பெறத் தலையில் தொப்பி அணிந்து சென்றதினைப் பத்திரிகை செய்தியாக வெளியிட்டிருந்தது. அவ்வாறு ஓட்டு வாங்க தொப்பி அணிந்து சென்றவர்களும் எல்லாம் வல்ல அல்லாவின் உம்மத்துக்கள் உயர்ந்த வாழ்க்கைப் பெறவும் வருகின்ற 2011ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் 10 எம்.எல்.ஏக்களாவது பெற அனைத்து சமுதாயத் தலைவர்களும் ஒன்றாகக்கூடி ஆலோசித்து கூட்டணி அமைத்து ஒரே சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். அவ்வாறு இல்லையென்றால் ஜனநாயகத்தில் சமுதாயத்திற்குத் தாழ்வு ஏற்படும். ஆகவே ஒற்றுமை என்ற பாசக்கயிறை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள சமுதாயத் தலைவர்கள் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நன்றி: டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்;.டி, ஐ.பி.எஸ்(ஓய்வு)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக