புதன், 15 ஏப்ரல், 2009

அனைத்து சமுதாய மக்களுக்கும் வட்டி இல்லாமல் கல்வி, மருத்துவ கடன்வசதி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் வாக்குறுதி

ராமநாதபுரம், ஏப்.15-

தேர்தலில் வெற்றி பெற்றால் அனைத்து சமுதாய மக்களுக்கும் வட்டி இல்லாமல் கல்வி, மருத்துவ கடன் வசதி செய்து தரப்படும் என்று ராமநாதபுரம் தொகுதி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் வாக்குறுதி அளித்துள்ளார்.

வேட்பாளர்

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளராக சலீமுல்லாகான் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் த.மு.மு.க.வின் மாவட்ட செயலாளராக உள்ளார். த.மு.மு.க. மூலம் அனைத்து சமுதாய மக்களுக்கும் கல்வி, சமூக சேவை, அம்புலன்சு வசதி மற்றும் ரத்ததான முகாம் நடத்தி வருகிறார். அவர் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது -

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சமுதாய இயக்கமாக விளங்கிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் மனிதநேய மக்கள் கட்சி என்ற அரசியல் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. மிகவும் பின்தங்கிய பகுதியாக உள்ள ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி அடைய தேவையான அனைத்து திட்டங்களையும் அனைவரின் ஒத்துழைப்புடன் நிறைவேற்ற பாடுபடுவேன். ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஆதாரமான வைகை தண்ணீர் முறையாக வந்து சேர வைகை ஆற்று பகுதியில் சிமெண்டு கால்வாய் அமைக்க நடவடிக்கை மேற்கொள்வேன்.

நீர்த்தேக்கம்

வெள்ளக் காலங்களில் வைகையில் இருந்து கடலுக்கு சென்று வீணாகும் தண்ணீரை தேக்கி வைக்க ராமநாதபுரம் பெரிய கண்மாய் மற்றும் சக்கரக்கோட்டை கண்மாய்களை ஆழப்படுத்தி நீர்த்தேக்கமாக மாற்ற அரசிடம் வலியுறுத்துவேன். இதேபோல ஆர்.எஸ்.மங்கலம் கண்மாயை சீரமைக்கவும், திருச்சுழி பகுதியில் கிருதுமால் நதி திட்டத்தை செயல்படுத்தவும் பாடுபடுவேன். ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலில் நிம்மதியாக மீன்பிடிக்க தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். மாவட்டத்தில் தொழில் வளம் வேலைவாய்ப்பு பெரு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

கல்விகடன்

தொகுதியில் உள்ள அனைத்து சமுதாயத்தை சேர்ந்த மாணவ – மாணவிகளுக்கு கல்விக்கடன் மற்றும் அனைத்து பிரிவினருக்கும் மருத்துவ கடன் வட்டி இல்லாமல் வழங்க மிகப்பெரிய திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: தினத்தந்தி

கருத்துகள் இல்லை: