திங்கள், 6 ஏப்ரல், 2009

மனித நேயக் கட்சி அதிமுகவில் இணையலாம்

சென்னை: திமுகவால் கைவிடப்பட்ட மனித நேய மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் சேரும் எனத் தெரிகிறது.

தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் கட்சியான மனித நேய மக்கள் கட்சி, திமுக கூட்டணியில்தான் இருந்தது.

திமுக, அக்கட்சிக்கு ஒரு சீட் தருவதாக கூறியது. ஆனால் 2 சீட் வேண்டும். அந்த 2 சீட்டிலும் நாங்கள் தனியான சின்னத்தில்தான் நிற்போம் என மனித நேய கட்சி கூறியது.

இதை திமுக ஏற்கவி்ல்லை. ஒரு சீட் தான் தருவோம். அங்கும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என கூறி விட்டது.

இதுகுறித்து மனித நேயக் கட்சி யோசித்துக் கொண்டிருந்த நிலையில் திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டை கருணாநிதி அறிவித்து, மனித நேயக் கட்சிக்கு கதவைச் சாத்தி விட்டார்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அக்கட்சியின் தலைவர்கள் ஆலோசனைகளைத் தொடர்ந்தனர். அது இன்னும் முடிவு பெறாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதையடுத்து அதிமுக கூட்டணிக்கு முயற்சித்து வருகிறு மனித நேயக் கட்சி. 2 தொகுதிகள் கொடுத்தால் வரத் தயார் என அதிமுகவுக்கு தூது அனுப்பியுள்ளனராம். அதிலும் மத்திய சென்னை மற்றும் மயிலாடுதுறை தொகுதிகளை அவர்கள் கேட்பதாக கூறப்படுகிறது.

இதில் மத்திய சென்னை தொகுதியைத்தான் மதிமுகவுக்கு ஒதுக்கி வைத்துள்ளது அதிமுக.

ஆனால் இத்தொகுதியை மதிமுக ஏற்க மறுத்து விட்டது. எனவே மனித நேய கட்சியை உள்ளே இழுத்து அவர்கள் கேட்கும் தொகுதிகளைக் கொடுக்க ஜெயலலிதா முன்வரக் கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இன்னும் ஓரிரு நாட்களில் மனித நேயக் கட்சி அதிமுகவில் இணையுமா, இல்லையா என்பது தெரிந்து விடும்.

கருத்துகள் இல்லை: