கோத்ரா கலவரத்தில் மோடியின் பங்கு : அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: குஜராத் கலவரத்தில் முதல்வர் நரேந்திர மோடியின் பங்கு குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2002ம் ஆண்டு குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட மிகப் பெரிய வன்முறையில் முதல்வர் மோடியின் பங்கு குறித்து ராகவன் கமிட்டி விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
தனது விசாரணை அறிக்கையை அடுத்த மூன்று மாதத்திற்குள் உச்சநீதிமன்றத்தில் வழங்க வேண்டும் எனவும் ராகவன் கமிட்டிக்கு அது உத்தரவிட்டுள்ளது.
இந்த விசாரணையில், மோடி அமைச்சரவையில் உள்ள ஒரு அமைச்சர், 3 எம்.எல்.ஏக்கள், 3 விஸ்வ இந்து பரிஷத் நபர்கள், பல்வேறு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆகியோரின் பங்கு குறித்தும் விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்ட முன்னாள் எம்.பி. இசான் ஜாப்ரியின் மனைவி மற்றும் சமூக சேவகர் டீஸ்தா செட்லவாத் ஆகியோர் தொடர்ந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை இன்று பிறப்பித்தது.
உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து டீஸ்தா கூறுகையில், இது மிகப் பெரிய வெற்றி. கடந்த ஆறு வருடங்களாக மோடியை நாங்கள் குற்றம் சாட்டி வருகிறோம். அது தற்போது நியாயப்படுத்தப்பட்டுள்ளது.
முறையான விசாரணை வேண்டும் என நாங்கள் கோரி வந்தோம். தற்போது அதற்கு விடிவு கிடைத்துள்ளது.
இதுதொடர்பான விசாரணையை மோடியின் செல்வாக்கு காரணமாக போலீஸார் வேண்டுமென்றே தாமதப்படுத்தி வந்தனர். தற்போது நீதித்துறை மீதான நம்பிக்கையை உச்சநீதிமன்றம் புதுப்பித்து விட்டது.
பத்து நாட்களுக்கு முன்புதான், என்னைப் பற்றியும், எனது அமைப்பின் பெயரையும் கெடுக்கும் விஷமப் பிரசாரத்தில் மோடி அரசு இறங்கியது.
தேர்தலைக் கருத்தில் கொண்டு நாங்கள் இந்த வழக்கை தொடுக்கவில்லை. அதை அரசியல் கட்சிகள்தான் செய்யும். எங்களுக்கு அது தேவையில்லை.
2002ம் ஆண்டு முதலே நாங்கள் இடையறாது போராடி வருகிறோம். எங்களது போராட்டம் கடைசி வரை தொடரும். மனித உரிமைகளையும், நீதியையும் நிலை நாட்டும் வரை நாங்கள் போராடுவோம் என்றார்.
பதில் சொல்ல மறுத்த மோடி:
இந் நிலையில் மோடியுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள என்டிடிவியின் நிருபர், மோடியிடம் குஜராத் கலவரம் விஷயத்தில் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா என்று கேட்டதற்கு, நான் இதற்கு முன்பே இது விஷயமாக பல இன்டர்வியூக்களை தந்துவிட்டேன் என்றார்.
சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கைக்குப் பின் நீ்ங்களும் பாஜகவும் இந்த விஷயத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா என்று கேட்டதற்கு, இது விஷயமாக பல இன்டர்வியூக்களை தந்துவிட்டேன் என்று கூறிவிட்டு ஜன்னல் வழியே வெளியே பார்க்க ஆரம்பித்துவிட்டார்.
இதையடுத்து மீண்டும் இதே கேள்வியை நிருபர் கேட்டபோது, பதிலே சொல்லாமல் எதிரே அமர்ந்திருந்த உதவியாளரிடம் தண்ணீர் குடு என்று கேட்டு வாங்கி குடித்துவிட்டு பேசாமல் அமர்ந்துவிட்டார். கடைசி வரை பதிலே சொல்லவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக