சனி, 4 ஏப்ரல், 2009

மீண்டும் முருங்கை மரமேறும் பா.ஜ.க.எனும் வேதாளம்!


நம் இந்திய தேசத்தில் தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட தேசியகட்சிகள் எண்ணிக்கை;6 , மாநில கட்சிகளின் எண்ணிக்கை;55. பதிவு செய்யப்பட்ட ஆனால் இன்னும் அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் எண்ணிக்கை; 827. இந்த கட்சிகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய கட்சிகள் மட்டுமே கடவுள் நம்பிக்கையற்றவர்களால் நடத்தப்படுபவையாகும். பெரும்பாலான கட்சிகள் கடவுள் நம்பிக்கையுடைய அதிலும் குறிப்பாக இந்து மத நம்பிக்கையுடையவர்களால் நடத்தப்படும் கட்சிகளாகும். இக்கட்சிகளில் பாரதீய ஜனதா உள்ளிட்ட அதன் நேசக்கட்சிகள் நீங்கலாக, மற்ற கட்சிகள் எவையும் மதத்தை முன்னிறுத்தி தேர்தலை சந்திப்பதுமில்லை. மதஉணர்வை வாக்காக மாற்ற நினைப்பதுமில்லை.

இந்நிலையில், தேர்தல் நேரத்தில் மதத்தை முன்னிருத்தி வாக்குகளை அள்ளுவதும் பின்பு மதத்தை வனவாசம் அனுப்புவதும் பி.ஜே.பி. யின் வழமையான நடவடிக்கையாகும். அதே பாணியில் இந்த தேர்தலுக்கும் மதத்தையும், ராமரையும் துணைக்கு அளித்துள்ளது பாரதீய ஜனதா. அக்கட்சியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள சில பலவிசயங்களில் சில துளிகள்;

*நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கஷ்மீருக்கென்று வழங்கப்பட்டுள்ள சிறப்பு சலுகையான 370 வது பிரிவை ரத்து செய்வோம்.

காஷ்மீரில் முழுக்க,முழுக்க நூறு சதவிகிதம் முஸ்லிம்கள் மட்டுமே வாழ்வதுபோலவும், மேற்கண்ட பிரிவின் சலுகைகளை முஸ்லிம்கள் மட்டுமே அனுபவிப்பது போலவும் ஒரு தோற்றத்தை பா.ஜ.க. உருவாக்க முயல்கிறது. காஷ்மீரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், அங்கே இந்துக்கள் உள்ளிட்ட பல்வறு மதத்தவரும் வாழ்வதும், அனைவருக்கும் மேற்கண்ட பிரிவின் சலுகை பொருந்தும் என்பதும் பா.ஜ.க.வுக்கு தெரியாததேன்..?

*பொடாவை மேம்படுத்தி தீவிரவாதத்திற்கு எதிரான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பொடா சட்டம் அமலில் இருந்தபோதுதானே நாட்டின் இதயமான பாராளுமன்றம் தாக்கப்பட்டது. பொடாசட்டம் அமலில் இருந்தபோதுதானே குஜராத்தில் மூவாயிரம் முஸ்லிம்கள் கருவருக்கப்பட்டார்கள். இவர்கள் மீதெல்லாம் பொடா பாய்ந்ததுண்டா? இன்றும் குஜராத்தில் பொடாவின் கீழ் அதிகமாக கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் முஸ்லிம்கள்தானே! ஆக பொடா சட்டம் சிறுபான்மையினரை 'சிறை'பான்மையினராக மாற்றுவதற்கும், அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்கும்தான் பயன்பட்டுள்ளது என்பதை பச்சிளம் குழந்தையும் அறிந்துள்ள நிலையில் பாரதீய ஜனதா அறியாததேன்? தீவிரவாதிகளுக்கு மதமோ, சட்டமோ அவர்களை தடுத்துவிடாது. இருக்கும் சட்டத்தை வைத்து தீவிரவாதிகளை எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் தாட்சன்யமின்றி தன்டித்தாலே தீவிரவாதம் திரும்பிப்பார்க்காமல் போய்விடும்.

*பசுக்கள்-கன்றுகள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.அவற்றை பாதுகாக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும்.

இதை தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க. சொல்வதின் நோக்கம் முஸ்லிம்கள் மற்றும் பிராமணரல்லாத சமூக மக்கள் பசுவை இறைச்சியாக பயன்படுத்துவதாலும், முஸ்லிம்கள் தியாகத்திருநாளின்போது குர்பானி கொடுப்பதாலும், இதை தடுக்கும் நோக்கில்தான் தனிச்சட்டம் கொண்டுவர பா.ஜ.க. நினைக்கிறது. தனிசட்டம் கொண்டுவருவது எல்லாம் அப்புறம், அதுக்குமுன்னாடி கோவில்களில் பக்தர்களால் காணிக்கையாக தரப்பட்டு சிலகோவில்களில் உரிய பராமரிப்பின்றி பசுக்கள் செத்து மடிவதாகவும், திருட்டுத்தானமாக 'கசாப்பு' கடைக்கு விற்பதாகவும் சிலமாதங்களுக்கு முன் ஒரு இதழ் செய்தி வெளியிட்டது. இந்த பசுநேசர்கள் முதலில் கோவில் பசுக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கட்டும்.

*ராமர் கோயில் கட்டப்படும். நமது நாட்டின் பாரம்பரிய சின்னமான ராமர்பாலம் பாதுகாக்கப்படும்.

இரண்டுமுறை ஆட்சியில் இருந்தபோது ராமர்கோயிலை கட்டாதது ஏன்? வாக்கு வங்கிகாகவே ராமர்கோயில் பற்றி பேசுவீர்கள் என்று நடுநிலை இந்து சமுதாயமக்கள் என்றோ உணர்ந்து கொண்டார்கள். எனவே ராமர்கோயில் அஸ்திரம் பா.ஜ.கவுக்கு நிச்சயம் கைகொடுக்காது. மேலும் கடலுக்கடியில் உள்ள இயற்கையாக உருவாகிய ஒரு மணல்திட்டை பாரம்பரிய சின்னமாக கருதுபவர்கள், அதை பாதுகாப்போம் என்று சூளுரைப்பவர்கள் 450 ஆண்டுகால வரலாற்று சின்னமான பாபர் மஸ்ஜிதை தரைமட்டமாக்கியது ஏன்?

*முஸ்லிம்களிடையே குறிப்பாக முஸ்லீம் பெண்களிடையே கல்வியை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

நீங்க நடவடிக்கை எடுத்துத்தான் எங்க சமுதாய பெண்கள் படிக்கணும்கிற நிலைமை எங்க சமுதாய பெண்களுக்கு இல்லை. கல்வியில் காவியை கலந்த நீங்கள் எப்படிப்பட்ட 'கல்வி'யை எங்கள் பெண்களுக்கு வழங்குவீர்கள் என்று எங்களுக்கு தெரியாதா?

ஆக மதவாத பா.ஜ.க 'மதமெனும்' ரதமேறி தேர்தல் பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த பயணத்தை தோல்வியுறவைத்து,அனைத்து சமுதாய மக்களுக்கும் பாதுகாப்பான ஆட்சி அமைய முஸ்லிம்கட்சிகள்/இயக்கங்கள் முயற்சிக்கவேண்டும்

கருத்துகள் இல்லை: