சனி, 25 ஏப்ரல், 2009

அன்று ஓட, ஓட அடித்து விரட்டப்பட்ட இன்றைய மத்திய சென்னை ம.ம.க. வேட்பாளர்

1999 ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது இன்று மத்திய சென்னையில் போட்டியிடும் மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளர் ஹைதர் அலி அவர்களுடன் சேர்ந்து களப்பணியாற்றிய சகோதரர் அபூ சுமையா அவர்கள் சத்தியமார்க்கம்.காம் தளத்தில் கருத்து பதிவு பகுதியில் பதிவு செய்துள்ள தகவலை நன்றியுடன் பதிவு செய்திள்ளேன்.
Blog Editor
____________________________________________________________________

இன்று மத்திய சென்னை தொகுதியில் சகோ. ஹைதர் அலி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்துப் போட்டியிடுபவர்களில் திமுக வேட்பாளர் மட்டுமே அவர் கண்ணுக்கு எதிரியாக தெரியும்; தெரிய வேண்டும். சகோதரர் ஹைதர் அலி, எப்படிப்பட்ட மோசமானவராக இருந்தாலும் சகோதரர் பிஜேக்கு எவ்வளவு பெரிய துரோகம் இழைத்திருந்தாலும்...... தேர்தல் என்று வரும் போது, அதுவும் மத்திய சென்னை தொகுதி என்று வரும் போது, அதிலும் சகோ. ஹைதர் அலி போட்டியிடுகிறார் என வரும் போது சகோதரர் பிஜே கொஞ்சமாவது நன்றியுள்ளவராக இருந்தால்......... சகோ. ஹைதர் அலி வெற்றி பெற தன் ஆதரவைக் கொடுத்து, வீதியில் இறங்கி உழைக்க வேண்டும்.

இதற்கான காரணம் ஒன்று உள்ளது. அதில், நேரடியாக நான் தொடர்பு கொண்டவன் என்பதால், அல்லாஹ்வுக்காக இவ்விடத்தில் அதனை நினைவுகூர கடமைபட்டுள்ளேன்.

1999 பாராளுமன்ற தேர்தல் என நினைக்கிறேன். அத்தேர்தலில் துரோகி கருணாநிதி, பாஜகவுடன் கூட்டணி வைத்து களம் கண்டார். இதன் காரணமாக அப்போது பிஜே உடனிருந்த தமுமுக பாப்பாத்தி செயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. அதிலும் அதிமுக சார்பில் போட்டியிடும் முஸ்லிம்களை வெற்றி பெற வைக்க முழு மூச்சாக இறங்கி வேலை செய்ய வேண்டும் என தீர்மானம் போட்டு களமிறங்கியிருந்தது.

இதே மத்திய சென்னை தொகுதியில் அப்பொழுது அதிமுக சார்பில் சகோ. லத்தீப் சாகிப் அவர்கள் போட்டியிட்டார்கள். சென்னை திமுகவின் கோட்டை என்பதாலும் அப்பொழுது திமுக ஆட்சியில் இருந்ததாலும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதாலும் கள்ள ஓட்டு கொடிகட்டிப் பறக்கும் எனவும் கள்ள ஓட்டை மட்டும் நாம் தடுத்து விட்டாலே சகோ. லத்தீப் அவர்களின் வெற்றியை உறுதிபடுத்தி விடலாம் என்ற எண்ணத்தில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கள்ள ஓட்டு நடக்காமல் இருப்பதை உறுதிபடுத்தும் வகையில் தமுமுகவினர் உழைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி, எல்லா வாக்கு சாவடியிலும் தமுமுக தொண்டர்கள் ஒவ்வொரு தலைவர்கள் தலைமையில் நியமிக்கப்பட்டனர்.

இப்பணிக்காக சகோதரர்கள் உயிரைக் கொடுத்து உழைக்க வேண்டும் என பீஜே பேசிய பேச்சைக் கேட்டு, அரசியலில் எவ்வித நாட்டமும் இல்லாத நானும் தேர்தல் பணிக்காக தமுமுக சகோதரர்களுடன் களமிறங்கியிருந்தேன்.

இதே மத்திய சென்னை தொகுதியில், அண்ணா நகர் பகுதியிலுள்ள ஒரு அரசு மேல் நிலைபள்ளியில், இப்பொழுது இதே மத்திய சென்னையில் போட்டியிடும் சகோதரர் ஹைதர் அலி தலைமையில் நான் உட்பட சில சகோதரர்களுக்குக் கள்ள ஓட்டு நடைபெறாமல் கண்காணிக்க தமுமுக பொறுப்பு தந்திருந்தது.

கள்ள ஓட்டு நடப்பது தெரிய வந்தால் எவ்விதம் யார், யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் எங்களுக்குக் கிடைக்கப்பெற்றிருந்தன.

அப்போதைய தேர்தல், தமிழகத்தில் இரு கட்டங்களாக நடைபெற்றன. அது இரண்டாம் கட்ட தேர்தல். முதல் கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்திருந்த கும்பகோணம், தஞ்சாவூர் பகுதிகளிலிருந்து சுமார் 20க்கு மேற்பட்ட ஸ்டாண்டர்ட் வேன்களும் சுமார் 10க்கு மேற்பட்ட பஸ்களும் அண்ணாநகர் வாக்குச்சாவடி பகுதிகளில் பார்க் செய்யப்பட்டிருந்ததையும் பூத்தினுள் அதிகாரிகளின் துணையுடன் முழு பூத்தையுமே திமுக+பாஜகவினர் கைப்பற்றி கள்ள ஓட்டு போட்டுக் கொண்டிருந்ததையும் திமுக+பாஜகவினர் அல்லாத வேறு யாரையுமே ஓட்டு போட விடாமல், உரிய அடையாள அட்டைகள்/ரேசன் கார்டுகள் இருந்தும் அதிகாரிகளை வைத்து அவர்கள் பெயர் பட்டியலில் இல்லை என்றும் ஓட்டு போட்டாகி விட்டது என்றும் விரட்டப்பட்டுக் கொண்டிருந்ததையும் அடுத்த ஒரு மணி நேரத்தில் கண்டறிந்தோம்.

எங்களுக்குத் தரப்பட்டிருந்த அறிவுரைபடி உடனடியாக தகவலைச் சகோதரர் ஹைதர் அலிக்குக் கைப்பேசியில் தொடர்பு கொண்டு சொன்னோம்.

சம்பவ இடத்திற்கு நாங்கள் கூறியது சரிதானா? என்பதைச் சோதிப்பதற்காக விரைந்து வந்தச் சகோதரர் ஹைதர் அலி அவர்கள், நாங்கள் கூறியது முற்றிலும் உண்மை என்பதைக் கண்டவுடன் பூத் தேர்தல் அதிகாரியிடம் அப்போது அங்கு திரண்டிருந்த(ஓட்டு போட விடமால் தடுக்கப்பட்ட கோபத்தில் இருந்த) அதிமுகவினர் புடைசூழ வாக்குவாதம் செய்தார்.

வெறும் 5 நிமிடம் தான் ஆகியிருக்கும். எங்கிருந்து அத்தனை பெரிய கூட்டம் வந்தது என்று தெரியாது. சுமார் 2000 பேருக்குக் குறையாமல் இருப்பர். சகோதரர் ஹைதர் அலியோடு இணைத்து நாங்கள் துரத்தி், துரத்தி அடிக்கப்பட்டோம். தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த போது சகோ. ஹைதர் அலிக்கு ஆதரவாக திரண்டிருந்த அதிமுகவினரில் ஒருவரைக் கூட அந்த இடத்தில் காணோம். தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்த நாங்களும் சகோதரர் ஹைதர் அலியும் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் விரட்டி அடிக்கப்பட்டோம். அந்நேரத்தில், சகோ. ஹைதர் அலிக்குப் பாதுகாப்பாக அரசாங்கம் ஏகே47 துப்பாக்கியுடன் ஒருவரை நியமித்திருந்தது. கூட்டத்தின் அடி பொறுக்க முடியாமல், பாதுகாப்புக்கு வந்திருந்தவரிடம் வானத்தை நோக்கிச் சுட சகோ. ஹைதர் அலி பலமுறை வேண்டுகோள் விடுத்தார். ம்ஹூம். துரோகி கருணாநிதி நியமித்த ஆளல்லவா??.. சிறிது நேரத்தில் அவனும் எங்கு சென்றான் என்பது தெரியவில்லை.

அன்று நாங்கள் அடி வாங்கிக் கொண்டு ஓடிய ஓட்டம், 10 ஆண்டுகள் ஆன பின்னரும் இன்றும் பசுமையாக மனதில் உள்ளது. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடி, வழியில் கண்ட ஒரு டாக்டரின் காரை மறித்து ஏறி, பின்னர் சிறிது தூரம் சென்று வேறு ஆட்டோ பிடித்தூ....எப்படியோ எம்.எல்.ஏ ஹாஸ்டல் வந்து சேர்ந்தோம். அங்கு அறையினுள் சகோ. லத்தீப் தலைமையில் தலைவர்கள் தேர்தல் நிலவரம் குறித்து உரையாடிக் கொண்டிருந்தனர்.

நடந்தச் சம்பவத்தைச் சகோ. லத்தீப் சாகிப்பிடம் தெரிவித்ததும், உடனடியாக ஏதாவது செய்தே ஆக வேண்டும், உங்கள் தலைவரிடம் பேசி சொல்லுங்கள் என்றார்.

சகோ. ஹைதர் அலி , சகோ. பிஜேயை அழைத்துத் தகவல் கூறி, உடனடியாக கருணாநிதி வீட்டை முற்றுகை இடும் போராட்டம் அறிவித்து, தொண்டர்களை அங்கு வர வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். தேர்தல் முறைபடி நடைபெறாததை மத்திய அரசுக்கும் தேர்தல் கமிசனுக்கும் கொண்டு செல்ல இதுவே உகந்த வழி என்றும் போராட்டம் அறிவித்தால் எதிர்கட்சிகளும் உடன் இறங்கும் என்றும் கூறினார்.

'தற்போது நமக்குக் கிடைக்கும் தகவல்படி சுமார் ஒன்றரை இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சகோ. லத்தீப் வெற்றிபெறுவது உறுதி(அத்தேர்தலில் சுமார் ஒரு இலட்சம் என நினைக்கிறேன், வாக்கு வித்தியாசத்தில் சகோ. லத்தீப் தோல்வியடைந்தார்) என்றும் நாம் இப்போது அவ்வாறான போராட்டம் ஒன்று நடத்தினால் மத்திய சென்னை தேர்தல் நிறுத்தி வைக்கப்படலாம் என்றும் அது நமக்குத் தான் இழப்பை ஏற்படுத்தும் என்றும் எனவே, சமுதாய நலனுக்காக நாம் வாங்கிய அடியைப் பொறுத்துக் கொள்வோம். வெற்றி பெற்றபின் மற்றவற்றைப் பார்த்துக் கொள்ளலாம். நீங்கள் அலுவலகம் திரும்புங்கள்' என சகோ. பிஜேயிடமிருந்து பதில் கிடைத்தது.

களத்தின் நிலவரம் என்ன என்பதை அறியாமல் அவரே ஒரு கற்பனை உலகிலிருந்து கொண்டு இப்படி தீர்மானம் எடுக்கிறாரே என மனம் நொந்து சகோ. ஹைதர் அலி தளர்ந்து போய் அமர்ந்தார்.

அப்பொழுது அவர் கூறிய ஒரு வாசகம்:

'மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியது தவறாகி விட்டது!'

அன்று இறைவன் பாக்கியத்தால் நாங்கள் உயிர் பிழைத்தோம் என்று தான் சொல்ல வேண்டும். ஹைதர் அலியுடன் நாங்கள் பெற்றிருந்த அடியினைக் கண்டிருந்த சகோ. ஹைதர் அலி, அலுவலகத்தில் கூறி எங்களுக்கு மருத்துவ சிகிட்சைக்கு ஏற்பாடு செய்து தரக் கூறி, அதனையாவது செய்யுங்கள் என்றிருந்தார்.

இப்படிப்பட்ட சகோ. ஹைதர் அலி மற்றும் ஜவாஹிருல்லாஹ்வைத் தான் இதே சகோ. பிஜே, தனது 'மனம் திறந்த மடலில்' , தன்னலம் பாராமல் உழைக்கும் சேவகர்கள் என்றும் சிறைக்குச் செல்லவும் அடியும் உதையும் கொள்ள தயாரானவர்கள் என்றும் இவர்களைச் சமுதாயம் முழுக்க நம்பலாம் என்றும் ஒருமுறை வானளாவ புகழ்ந்திருந்தார்.

இதனை எல்லாம் நான் இங்கு எடுத்துக் கூற நான் ஒன்றும் தமுமுகவோ அல்லது மமக அனுதாபியோ அல்ல. அன்று தேர்தல் பணிக்குச் சென்றதும் தமுமுகவுக்காக அல்ல. பிஜே அன்று அங்கு இருந்ததால் தான் அவரின் அழைப்புக்குச் செவி சாய்த்துத் தேர்தல் பணியாற்றச் சென்றேன். இதனைப் படிப்பவர்கள் நான் தமுமுகவிற்கு அனுதாபம் தேட இதனைக் கூறுவதாக நினைக்கலாம்.

எல்லாம் இறைவன் அறிவான். நான் நேரடியாக அனுபவப்பட்ட இந்தச் சம்பவத்தில், அன்று ரோட்டில் சமுதாயத்துக்காக ஓட, ஓட அடித்து விரட்டப்பட்டவர் தான் இன்று அதே மத்திய சென்னையில் போட்டியிடுகிறார்.

சகோ. பிஜே நன்றாக மனதில் கை வைத்து யோசிக்கட்டும். நாளை மறுமையில் இதற்கான சாட்சியாக நான் நிற்பேன்.

அன்று பிஜே சொல் கேட்டு அடி வாங்கியவருக்குத் தார்மீக ஆதரவு கொடுக்கச் சகோ. பிஜே கடமைபட்டுள்ளார். சமுதாய நன்மைக்காகத் தான் துரோகி கருணாநிதியை ஆதரிக்கிறோம் என கதையளக்கும் சகோ. பிஜே, தான் எதிர்த்து பிரச்சாரம் செய்யப்போகும் சகோதரர் ஒருகாலத்தில் தன் பேச்சைக் கேட்டு சமுதாயத்துக்காக இன்று தான் ஆதரிக்கும் கருணாநிதி+பாஜக கூட்டத்தால் அடி வாங்கியவர் என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ளட்டும்!

(இங்கு நான் குறிப்பிட்டுள்ள விஷயம் பொய் என எந்தத் ததஜ அனுதாபியாவது மாமிசம் உண்ண வருவாரானால், வருவதற்கு முன்னர் ஒருமுறையாவது சகோ. பிஜே அவர்களிடம் இந்தச் சம்பவத்தை எடுத்துக் கூறி உண்மையா?? இல்லையா? என்பதைக் கேட்டு விட்டு வரவும்)

--
அன்புடன்
சகோ. அபூ சுமையா.
*****************************************************
"நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்."(49:10)

கருத்துகள் இல்லை: