செவ்வாய், 7 ஏப்ரல், 2009

நான் ஏன் பி.ஜே.பி.யை எதிர்க்கிறேன்?

சி.சரவணகார்த்திகேயன்

பி.ஜே.பி.யும் நானும்

முன்குறிப்பு :

நீங்கள் ஓர் இந்து மத வெறியராக இருந்தால் தயவு செய்து இப்பதிவை மேற்கொண்டு படிக்க வேண்டாம்; நான் விளையாட்டுக்குச் சொல்லவில்லை; நிஜமாகவே சொல்கிறேன். மீறிப்படிப்பது நம் இருவருக்குமே பயனளிக்கப் போவதில்லை என்பதால்.
Image

நான் ஏன் பி.ஜே.பி.யை எதிர்க்கிறேன்?

பி.ஜே.பி. என்றழைக்கப்படும் பாரதிய ஜனதா பார்ட்டியின் நிறம் காவி. அவர்களிடம் ஒற்றை வார்த்தையில் அக்கட்சியின் கொள்கையை சொல்லச் சொன்னால் "இந்துத்துவம்" என்று பெருமை பொங்கச் சொல்வார்கள். தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரையிலான அதன் உறுப்பினர்களில் கணிசமானோர் முன்னாள் ஆர்.எஸ்.எஸ். காரர்கள்.

1992ல் நடந்த‌ பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தில் முதன்மைக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட லால் கிருஷ்ண‌ அத்வானி அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர். எல்லாவற்றுக்கும் மேலாக, பி.ஜே.பி.யின் 2009 பாரளுமன்றத் தேர்தல் அறிக்கை மறைமுகமாக‌ அயோத்தியில் பிரச்சனைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டித் தருவதாகச் சொல்கிறது. இவையெல்லாம் சில உதாரணங்கள்.

"மக்களின் பாவங்களினால் சாமி குத்தம் ஆகி விட்டது, அதனால் தான் சரியான‌ மழை இல்லை" என்று சொல்லி கடவுளை சாந்தப்படுத்த மாநிலத்தின் ஆண்டு பட்ஜெட்டில் - அதாவது பொது மக்களின் வரிப்பணத்தில் - ரூபாய் 130 கோடி கோயில்களுக்கும் மடங்களுக்கும் ஒதுக்கியவர் பி.ஜே.பி. கட்சியைச் சேர்ந்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா.

ஒரு மாநிலத்தில் ஆட்சியைக் கொடுத்ததற்கே, நியூட்டனின் மூன்றாம் விதியை துணைக்கு அழைத்துக் கொண்டு முஸ்லிம்களைக் கொன்று குவித்தவர் நரேந்திர மோடி. அவர் திறமையான ஆட்சியைக் கொடுத்திருக்கலாம். ஆனால் ஒரு நல்ல தலைவனுக்குத் தேவை நிர்வாகத்திறன் மட்டுமல்ல; பாரபட்சமற்ற நீதி வழங்கும் மனசாட்சியும் கூட. அதில் தான் பிரச்சனை.
Image

கடந்த மாதம், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் நட‌த்துவது பற்றி சர்ச்சை எழுந்த போது, நரேந்திர மோடி மட்டும் போட்டிகளை எந்தப் பிரச்சனையுமின்றி பாதுகாப்புடன் நடத்தித் தர‌ குஜராத் மாநிலம் தயாராக இருப்பதாக அறிவித்தார். இது கூட முஸ்லிம்களுக்கு எதிரான பி.ஜே.பி.யின் அறைகூவலாகவே எனக்குப் படுகிறது.

"If anyone raises a finger towards Hindus or if someone thinks that Hindus are weak and leaderless, if someone thinks that these leaders lick our boots for votes, if anyone raises a finger towards Hindus, then I swear on the Gita that I will cut that hand" என்று பொதுக்கூட்ட‌ மேடையில் முழங்குகிறார் பி.ஜே.பி. கட்சியின் இளம் உறுப்பினரான வருண் காந்தி. என்ன திமிர் பாருங்கள்?

Imageஇதற்காக பேச்சுக்காக சிறையிலிருக்கும் வருண் காந்தியை தேர்தலில் வேட்பாளராக நிறுத்த‌க்கூடாது என்று தேர்தல் ஆணையம் சொல்வது துரதிர்ஷ்டவசமாது என்று புலம்புகிறார் கட்சியின் தலைவரான வெங்கையா நாயுடு. இது கட்சியின் தலைவரே அப்பேச்சை வெளிப்படையாக நியாயப்படுத்துவதாக இருக்கிறது.

ஆயிரம் ஆண்டுகளாக இம்மண்னில் குடிமக்களாக‌ வாழ்ந்து வரும் ஒரு மதத்தினரைப் பற்றி இப்படிப் பேசுவதற்கு என்ன நியாயம் இருக்கிறது? இதற்கும் இலங்கையில் சிங்களர்கள் தமிழர்களை கொன்று குவிப்ப‌தற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? அவர்கள் இன்று அங்கே செய்கிறார்கள்; இவர்கள் நாளை இங்கே செய்வார்கள். அவ்வளவு தான்.

பதினைந்து கோடி இந்திய முஸ்லிம்களின் ரத்தம் ஆறாய் ஓடுவதைக் காணும் மனவலிமை உண்டா உங்களுக்கு? யோசித்துக் கொள்ளுங்கள்.

பின்குறிப்பு :

நீங்கள் ஓர் இந்து மத வெறியராக இருந்தும் நான் சொன்னதைக் கேட்காமல் இது வரை வந்து விட்டீர்கள் என்றால், நீங்கள் மனிதனென்ற ஞாபகம் எங்கோ ஓரமாய் உங்களிடம் மிச்சமிருக்கிறது என அர்த்தம். இந்தத் தேர்தலிலாவது அதைத் தேடிக் கண்டுபிடியுங்கள்.

சி.சரவணகார்த்திகேயன், பெங்களூர்


கருத்துகள் இல்லை: