வியாழன், 16 ஏப்ரல், 2009

ஆர்.எஸ்.எஸ்ஸின் விஷ வளையத்திற்குள் நுழைந்த சோக அபிமன்யூ!

முஸ்லிம்களை கருவறுக்க முயன்ற சஞ்சய் காந்தியின் அன்றைய கருத்தடை மத துவேஷமும் முஸ்லிம்களின் கரங்களை வெட்டுவது குறித்த வருண் காந்தியின் மத வெறுப்பு அரசியலும் இரு வேறு வரலாற்றுக் கட்டங்களை, இரு வேறு நூற்றாண்டுகளைச் சார்ந்தவை. இவற்றுக்கிடையில் பல ஒற்றுமைகளும் உள்ளன பல வேற்றுமைகளும் உள்ளன. ஆனால் எவ்வாறு மதவாதம் சமூகத்தை பிளவுபடுத்தும், ஒருங்கிணைந்த தேசமாக இந்தியாவை வழிநடத்த அரசுகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதில் இவை இரண்டும் ஒரே தராசில் நிற்கின்றன.

சஞ்சயின் மரணத்திற்குப் பிறகு இந்திராவின் அரசியல் வாரிசுப் போட்டியில் ராஜீவ் காந்தியிடம் தோற்றுப் போய், ஜனதா தளமும் பா.ஜ.கவும் காங்கிரசுக்கு எதிராகப் பயன்படுத்த முயன்ற துருப்புச் சீட்டாக சுருங்கிப் போன மேனேகா என்ற மேனகா காந்தி நடத்தும் இரண்டாவது அரசியல் அதிகார யுத்தம் இது. இந்த முறை ஆர்.எஸ்.எஸ்ஸின் பின்னணி உதவியுடன் ராஜீவின் மகனுக்கு எதிரான யுத்தத்தில் தனது மகனை களமிறக்கியிருக்கிறார் மேனகா. "என்னைத் தோற்கடித்தவனின் மகனைவிட நீ அரசியலில் சூராதி சூரனாகிக் காட்ட வேண்டும்" என்று வெற்றித் திலகமிட்டு அனுப்பிய அவரின் வீர மகன் இப்போது ஈடா சிறையில் அம்மாவை தினமும் தேடும் பாலகனாகக் காட்சி தருகிறார். வீர அபிமன்யூ என்று அவர் சித்தரிக்கும் நபர் போர்க் களத்திற்கு சற்றும் பொருந்தாத பருத்த தேகம், அமுல் பேபி கன்னங்களுடன் தினமும் வீட்டுச் சாப்பாட்டுக்காகக் காத்திருக்கிறார்.

காலத்தின் கோலம் இன்று இந்திய அரசியலில் எதிரிகளை இடம் மாற்றியிருக்கிறது. முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பில் அப்பாவி சேரி முஸல்மான்களைக்கூட விட்டு வைக்காத சஞ்சயின் செருப்பைத் தூக்கிக்கொண்டு பின்னால் சென்று சேவகம் செய்த காங்கிரஸ்காரர்கள் இன்று வருண் காந்திக்கு சகிப்புத்தன்மை குறித்து பாடம் எடுக்கிறார்கள். சஞ்சய் காந்தியின் அட்டூழியங்களைக் கண்டித்த அன்றைய ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் கும்பல் இன்று வருண் காந்திக்கு மத துவேஷ பாடமெடுத்து, பிணங்களின் வேட்டைக்கு நாக்கினைக் கூர் தீட்டி அனுப்புகிறது. ஒரு பக்கம் அத்வானி வெளிநாட்டுக் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டு வருவதை கோஷமாக வைத்து சகல மதத்தவர் ஓட்டுகளையும் ஈர்க்கட்டும், நாம் வருண் காந்தியின் முஸ்லிம் எதிர்ப்பு அரசியலை வைத்து நமக்கு ஓட்டும் சோறும் குரூர சுகமும் தரும் இந்து வெறியர்களின் ஓட்டுகளை ஈர்ப்போம் என்ற பா.ஜ.கவின் பல பரிமாணங்கள் கொண்ட முகமூடி அரசியலின் வெளிப்பாடுதான் இது.

வருண் காந்தியின் குரூர பேச்சுகளை வைத்து அரசியல் செய்ய நினைத்த ஆர்.எஸ்.எஸ் கும்பலும் மனேகாவும் நினைக்கும் எண்ணம் ஈடேற மாயாவதியின் அதிரடி உதவும் என்று நம்புகிறவர்கள் இருக்கிறார்கள். தேசிய பாதுகாப்புச் சட்டத்தை பிரயோகித்திருப்பதை வைத்து வருணை தியாகியாக, நாயகனாக, பழிவாங்கப்படுபவராகக் காட்ட முயல்கிறார்கள். மதவாதம் எப்போதும் செய்வது போல இது மக்களைப் பிளவுபடுத்துவதோடு அல்லாமல் இந்த முறை இந்திய சிந்தனையாளர்களைக்கூட பிளவுபடுத்தியிருக்கிறது. பா.ஜ.க ஆதரவாளராக அதிகம் தோற்றமளிக்கும் என்.டி.டி.வி செய்தியாளர் பர்கா தத் வருண் மீதான தே.பா சட்டத்தை அதீத நடவடிக்கை என்கிறார். "வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசுவது அரசியல்வாதிகளின் வியூகம். அதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவது பொருத்தமானது அல்ல" என்று சொல்கிறது இந்துத்துவ ஆதரவாளராக அறியப்படாத டைம்ஸ் ஆப் இந்தியாவின் தலையங்கம்.

மதக் கலவரங்களைத் தூண்டக்கூடிய இத்தகைய வெறுப்புப் பேச்சுகளின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை பிரயோகிக்கலாம் என்பதற்கு நீதித் துறையில் எந்த முன்னுதாரணமும் இது வரை இல்லை. ஆனால் இந்தியாவில் பா.ஜ.க போன்ற மதவாதிகள் நடத்திய குஜராத் போன்ற இன அழித்தொழிப்புகளுக்குப் பிறகு, அத்தகைய கொடுமைகளுக்குப் பிறகு உருவான இந்திய முஸ்லிம்களின் அதிருப்திகளை எவ்வாறு பயங்கரவாதக் குழுக்கள் பயன்படுத்திக்கொண்டன என்பதைப் பார்த்த பிறகு இது போன்ற பேச்சுகள் முற்றிலும் ஏற்க முடியாதவை என்பது தெளிவாகிறது. இந்தப் பின்னணியில் பார்க்கும் போது வருண் உண்மையிலேயே தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்தான், அவர் மீது அந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டது சரிதான் என்கிறார் பிரபல வழக்குறைஞரான ஹரீஷ் சால்வே. தேசிய பாதுகாப்புச் சட்டம் மிக கொடூரமானது, முந்தைய காலங்களில் பல மனித உரிமை மீறல்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதால் இதை இறுதி வாதமாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. எனினும் தேசிய விவாதத்திற்குட்படுத்த இது ஒரு முக்கியமான தலைப்பு. வருண் காந்தி போன்ற மதவாத கைப் பாவைகளின் அல்லது மதவாதிகளின் பேச்சுகள் நாட்டைத் துண்டாடக்கூடியவை.

மாயாவதியின் நடவடிக்கை மதவாதத்திற்கு சாதகமாகப் போய்விடக்கூடாது என்ற எண்ணம் இருந்தாலும் அவரின் துணிவான, கடுமையான நடவடிக்கை என்னை கவராமல் இல்லை. எல்.கே.அத்வானியின் விஷம் தோய்ந்த ரதத்தின் சக்கரங்களுக்கு முட்டுக் கட்டை போட்ட லாலூவின் துணிவிற்கு இணையானது இது. இவர்கள் இருவருமே சிறுபான்மை முஸ்லிம் ஓட்டுகளுக்காகத்தான் இதைச் செய்தார்கள் என்றாலும் அதே முஸ்லிம் வாக்குகளின் பொருட்டுக்கூட பாபர் மசூதி இடிப்பை நரசிம்ம ராவ் தடுத்து நிறுத்தாதது வித்தியாசத்தைக் காட்டுகிறது. தான் போட்டியிடும் பிலிபிட் தொகுதியிலுள்ள சிறையிலேயே வருண் காந்தியை வைத்திருப்பது அவரின் "தியாக" அரசியல் பிரச்சாரத்திற்கு உதவுவதை உணர்ந்த மாயாவதியின் அரசின் உத்தரவின் பேரில் நடு நிசியில் 300 கி.மீ தொலைவிலுள்ள ஈடா சிறையில் கொண்டு போய் அடைக்கப்பட்டார் வருண். இதைக் கேட்கும் போது பொடாவில் அடைக்கப்பட்ட வைகோவுக்கும் வருணுக்குமான ஒற்றுமைகள் சட்டென நினைவுக்கு வருகின்றன.

மாயாவதி, ஜெயலலிதா இருவருமே தங்களின் எதிரிகள் செய்த தவறைவிட மிகையான தண்டனை கொடுத்தவர்களாக, சர்வாதிகாரிகளாக, ஊழல் மிக்கவர்களாக அறியப்படுகிறார்கள். வைகோவும்கூட வேண்டுமென்றே பல நூறு கி.மீ தூரமுள்ள சிறைகளுக்கும் நீதிமன்றத்திற்கும் இடையில் கொடுமையான சாலைப் பயணங்களில் அலைக்கழிக்கப்பட்டார். ஒருவர் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசினார், மற்றொருவர் முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசினார் என்பதுதான் வித்தியாசம். இதில் ஜெயலலிதாவுக்கு எதிராகவும் மாயாவதிக்கு ஆதரவாகவும் பேசுவது முரண்பாடானதாகத் தெரியலாம். ஆனால் இன்னொரு கொடூரமான தேசப் பிரிவினைக்குப் பாதை போடும் ஆர்.எஸ்.எஸ் மதவாதிகள் மற்றும் அவர்களின் கைப்பாவைகளின் பேச்சும் விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் பேச்சுகளும் ஒன்றல்ல. புலிகளை ஆதரிப்பதால் கோவை பற்றி எரியாது, ஆர்.எஸ்.எஸ் கும்பலின் பேச்சுகளோ கோவையும் மேலப்பாளையம்களும் பற்றி எரிவதற்காகப் பேசப்படுபவை. நிச்சயமாக வருண் மற்றும் மனேகாவைவிட மாயாவதி எவ்வளவோ சிறந்தவர்.

வருண் விஷயத்தை மையமாக வைத்து யார் உண்மையான தாய் என்று மாயாவதி-மேனகா இடையே வார்த்தைப் போர் நடக்கிறது. தினமும் சிறைக்குச் சென்று தனது மகனைப் பார்க்க முடியவில்லை என்ற கோபத்தில் மாயாவதியுடனான வார்த்தை மோதலைத் தொடங்கி வைத்திருக்கிறார் மேனகா. அந்தப் பேச்சுக்களின் வழியாக மேனகா ஒரு மதவாதி மட்டுமின்றி, உயர் சாதி மனோபாவம் கொண்டவர் என்பதையும் நிரூபிக்கிறார். ’கல்வியும் கலாச்சாரமும் நாகரிகமும் கொண்ட’ தனது குடும்பத்தைப் பற்றிப் பேச மாயாவதிக்கு அருகதை இல்லை என்கிறார் மேனகா. கல்லூரிப் படிப்பையே முடிக்காத சஞ்சய் காந்தியின் மனைவி என்ற கல்விப் பின்புலம் கொண்டவர் இவர். காந்தே என்ற பார்சி சமூகத்தைச் சேர்ந்த வருணின் தந்தை வழி கொள்ளுப் பாட்டியின் குடும்பப் பெயரை காந்தி என்று மாற்றி வைத்துக்கொண்டு பெயர் மோசடி செய்யும் நாகரிகம் படைத்த வம்சத்தின் பகுதியும்கூட இவர்தான். திருமணத்தை மீறிய செக்ஸ் லீலைகளும் அதில் பிறந்த குழந்தைகளும் பற்றி கதை கதையாகப் பேசப்படும் நேரு பரம்பரையின் கலாச்சார ’செருக்கில்’ இதையெல்லாம் பேசுகிறார் அவர்.

மாயாவதி என்ற சந்தவதி தேவி சட்டக் கல்வியும் கல்வியியல் கல்வியும் முடித்தவர். பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கன்ஷிராம் இவரை அரசியலுக்கு இழுத்திருக்காவிட்டால் ஐ.ஏ.எஸ் அதிகாரியாவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்திருக்கக்கூடியவர். பள்ளி ஆசிரியையாக இருந்தவர். மாறாக மேனகா காந்தி வெறும் ஐ.எஸ்.சி (தமிழ்நாட்டில் முன்பிருந்த பி.யு.சி போல) மட்டுமே முடித்தவர். ஐ.எஸ்.சி இல்லாத யுகத்தில் சொல்வதானால் அவர் கல்லூரியில் கால் பதிக்காதவர். மனேகா சொல்வதற்கு மாறாக மாயாவதி ஜாதி நல்லிணக்கத்திற்கு வழி வகுத்து வருகிறார். ஜாதிக் கட்சியாகத் தொடங்கி எல்லா ஜாதிகளையும் அரவணைக்கும் கட்சியாக மாறிய ஒரே கட்சி மாயாவதியினுடையது. தமிழகத்தில் அதைச் செய்ய முடியாத அளவுக்கு ஜாதியில் ஊறிய பா.ம.கவுக்கு மாறாக உ.பியிலும் இப்போது பிற இடங்களிலும் ஜாதியை இணைக்கும் சக்தியாக்கி வருபவர் மாயாவதி. உண்மையில் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த மனேகாவின் தலித் விரோத ஜாதி மனோபாவம்தான் இந்த விவகாரத்தில் வெளிப்படுகிறது. தலித்துகளை படிப்பறிவற்றவர்கள், நாகரிகமற்றவர்கள், கலாச்சாரமற்றவர்கள் என்று சொல்வதுதானே உயர் சாதி பார்வை.

பார்சி, பண்டிட் மற்றும் சீக்கிய ரத்தத்துடன் முஸ்லிம்* ரத்தத்தையும் தன்னுள் கொண்ட வருண், முஸ்லிம்களுக்கு எதிராக நடந்துகொள்வது, தந்திரமான அரசியல் கணக்குகளுக்கு அத்தகைய வித்தியாசங்கள் இல்லை என்பதைக் காட்டுகிறது. சொல்லிக் கொடுத்தவர்கள் சொன்னபடியெல்லாம் செய்துவிட்டார் வருண். ஆனால் சிறைக்குள் என்ன செய்வது என்று அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சிறைகளில் அமர்ந்து மிக முக்கியமான புத்தகங்களை எழுதினார் இந்திய மதசார்பின்மையின் சிற்பியான வருணின் கொள்ளுத் தாத்தா நேரு. லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸில் கற்காத தாராளவாதத்தை அவர் இங்கு நேருவின் நூல்களைப் படித்துக் கற்பாரா எனத் தெரியவில்லை. ஏனெனில், தனது அரசியல் வளர்ச்சிக்காக இவ்வாறு திட்டமிட்டுப் பேசுபவர்கள் கற்றுக்கொள்ள ஏதுமில்லை; அவர்கள் தெரிந்துதான் எல்லாவற்றையும் பேசுகிறார்கள்.

ஆனால் சிறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டபோது தெரிந்த 29 வயது வருணின் வெளிறிய முகத்தையும் அதில் தெரிந்த பயம் கலந்த இறுக்கத்தையும் பார்த்த போது உண்மையிலேயே அபிமன்யூவின் நினைவும் கொஞ்சம் பரிதாப உணர்வும் ஏற்பட்டது. அரசியல்வாதிகள் கைதாகி கேமரா முன்பு செல்லும் போது கைகளை ஆட்ட வேண்டும், புன்னகைக்க வேண்டும் அல்லது ஆவேச உரையாற்ற வேண்டும் என்பது அவருக்கு சொல்லித் தரப்பட்டிருக்கக்கூடும் என்றாலும் அதைச் செய்யும் மனநிலையில் அவர் இருந்ததாகத் தெரியவில்லை. அபிமன்யூ சக்கர வியூகத்தை உடைத்து உள்ளே நுழைந்துவிட்டு பிறகு வெளியேறும் வழி தெரியாமல் திணறினான். வருண் ஆர்.எஸ்.எஸ் வகுத்த விஷ வளையத்திற்குள் முழு விருப்பத்துடன் புகுந்துவிட்டு அதிலிருந்து வெளியேறுவதை விரும்பாமல் சிறைக் கம்பிகளுக்குள் ஏக்கத்துடன் காத்திருக்கிறான், தினந்தோறும் தனது தாய் வரும் சேதியைக் கேட்டு...

*இந்திராவின் கணவர் பெரோஸின் உண்மையான பெயர் பெரோஸ் கான் என்று கூறப்படுகிறது. அவரின் தந்தை ஒரு முஸ்லிம், தாய் பார்சி சமூகத்தைச் சேர்ந்தவர் (குடும்பப் பெயர் காந்தே-Ghandy). ஆனால் அரசியல்-குடும்ப சந்தர்ப்பவாதத்திற்காக பெரோஸ் கான் என்பதை பெரோஸ் காந்தே என்று மாற்றுகிறார்கள். அதைப் பிறகு காந்தி என்றே மாற்றிவிடுகிறார்கள். நேரு தம்பதிகளின் கடும் எதிர்ப்பைச் சந்தித்த இவர்களின் திருமணத்திற்கு உதவியவர் மோகன்தாஸ் காந்தி.

நன்றி: உயிரோசை

கருத்துகள் இல்லை: