செவ்வாய், 7 ஏப்ரல், 2009

வருண் காந்தியை ரோலர் ஏற்றி கொன்றிருப்பேன்

லாலு பிரசாத் ஆவேசப் பேச்சு

கிஷண்கஞ்ச்: "நான் மட்டும் உள்துறை அமைச்சராக இருந்திருந்தால் வருவது வரட்டும் என்று, முஸ்லிம்களுக்கு விரோதமாகப் பேசிய வருண் காந்தி மீது ரோலரை (ரோடு என்ஜின்) ஏற்றி அழித்திருப்பேன்' என்று ஆவேசமாகப் பேசினார் மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத்.

பிகார் மாநிலத்தின் கிஷண்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் அவருடைய ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர் தஸ்லிமுதீனை ஆதரித்து திங்கள்கிழமை பொதுக்கூட்டத்தில் பிரசாரம் செய்தபோது இப்படி ஆவேசமாகப் பேசினார்.

"பிலிபிட் மக்களவைத் தொகுதி பொதுக்கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசிய பாரதிய ஜனதாவின் வருண் காந்தியை, நான் உள்துறை அமைச்சராக இருந்திருந்தால் அப்படியே ரோலர் ஏற்றிக் கொன்றிருப்பேன்; அதனால் வருவது வரட்டும் என்று துணிந்து அப்படிச் செய்திருப்பேன்.

2004 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு வகுப்புவாத பாரதிய ஜனதா அரசு மீண்டும் பதவிக்கு வராமல் தடுத்தது நாங்கள்தான்; இத்தாலிக்காரர் என்பதால் சோனியா காந்தியைப் பிரதமராகவிடமாட்டோம் என்று பேசிய மதவாதிகளை எதிர்த்து குரல் கொடுத்தது நாங்கள்தான்.

முஸ்லிம்களின் நண்பன் நான், மதச்சார்பற்ற கொள்கையில் முழு நம்பிக்கை உள்ளவன் என்று நாடகமாடுகிறார் பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார். பாபர் மசூதியை இடித்த அத்வானியின் மடியில் உட்கார்ந்துகொண்டு, பாரதிய ஜனதாவின் ஆதரவில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் நிதீஷ் குமார் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இந்தியப் பிரதமராகிவிட வேண்டும் என்று அத்வானி கனவு காண்கிறார், அது ஒரு நாளும் நடக்காது' என்றார் லாலு பிரசாத்.

1 கருத்து:

kama சொன்னது…

உங்களின் வருகைக்காக நெல்லைத்தமிழ் புக்மார்க் தளம் காத்திருக்கிறது...

தளமுகவரி...
nellaitamil