புதன், 22 ஏப்ரல், 2009

உலகின் பெரிய பணக்கார நாடுகள் வாங்கியிருக்கும் கடன் ?!

கஷ்டப் பட்டு சம்பாதித்து பணக்காரர்கள் ஆகிறவர்களும் உண்டு. இப்படி கடன் வாங்கியே பணக்காரர்கள் ஆகிறவர்களும் உண்டு. நான் யாரைச் சொல்கிறேன் என்று உங்களுக்கு இந்நேரம் புரிந்திருக்கும்.

நம்மூரில் கூட பார்க்கலாம். துளியும் கடன் சுமை இல்லாத பலர் சாதாரண சைக்கிள்களில் செல்வார்கள். ஆனால் வங்கிகளில் பல கோடி கடன் வாங்கிய தொழில் அதிபர்கள் (அதில் வாராக் கடன் அதிபர்களும் அடக்கம்) மிகப் பெரிய கார்களில், ஏன் சில சமயங்களில் தனியார் ஜெட்டில் கூட செல்வார்கள்.

அதே போல, இந்தியா போன்று குறைவாக கடன் வாங்கிய நாடுகள் எல்லாம் ஏழை நாடுகளாக அறியப்படும் வேளையில், உலகிலேயே அதிக கடன் வாங்கிய நாடு ஒரு வலுவான பணக்கார நாடாக அறியப் படுகிறது.

ஒவ்வொரு நாளும் பில்லியன் டாலர் கணக்கில் அதிகரித்து செல்லும் அமெரிக்காவின் கடன் தொகை கடைசியாக கிடைத்த தகவலின் படி 11 டிரில்லியன் டாலர் அளவையும் தாண்டி விட்டது. இந்திய மதிப்பில் இது எவ்வளவு தெரியுமா? ஏறத்தாழ ரூ. 55,00,00,00,00,00,000.00.

தலை சுற்றுகிறதா? அதாவது ஐநூத்தி ஐம்பது லட்சம் கோடி ரூபாய். (இந்தியாவின் ஒரு ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவே கிட்டத்தட்ட நாற்பது லட்சம் கோடி ரூபாய் மட்டுமே) இந்த கடன் தொகை அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 75 சதவீதத்திற்கும் மேலே. நூறு சதவீதத்திற்கும் மேலே போனால் இந்த நாடு தாங்குமா என்று தெரியாது. ஆனால் கண்டிப்பாக உலகம் தாங்காது என்று சொல்ல முடியும்.

அமெரிக்க அரசின் மொத்த கடன் தொகையை ஒரு டாலர் நோட்டாக ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்தால், பூமியிலிருந்து சந்திரன் வரை போய் விட்டு வரும் அளவுக்கு உயரமாக இருக்கும். (கிட்டத்தட்ட 7,50,000௦௦௦ மைல்கள்). இதே தொகையை பரவலாக அடுக்கி வைத்தால் மூன்று கால்பந்து மைதான பரப்பளவிலும் உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் துபாய் கட்டிடத்தின் உயரத்திற்கு அடுக்க முடியும். சரி ஒரு டாலர் நோட்டு வேண்டாம், நூறு டாலர் நோட்டாக பரப்பி வைக்கலாம் என்று பார்த்தால், அதன் பரப்பளவு வாஷிங்டன் பரப்பளவில் நான்கில் மூன்று பங்கு பிடிக்கும்.

இன்னுமொரு வேடிக்கையான விஷயம், இப்படி நோட்டுக்களாக கடனை அளக்கும் அல்லது அடைக்கும் அளவுக்கு அமெரிக்காவில் போதுமான கரன்சி நோட்டுக்களே இல்லை. புழக்கத்தில் உள்ள மொத்த கரன்சிக்களின் மதிப்பே ஒரு டிரில்லியன் டாலர் அளவுக்கும் குறைவுதான். (அதே சமயம் கடன் அளவு சுமார் 11 டிரில்லியன் டாலர் அளவு)

இந்த கடன் தொகை அரசாங்கத்துடையது மட்டும்தான். அமெரிக்காவில் வாழும் மக்களிலும் மிகப் பலர் கடன் பொருளாதாரத்தை மட்டுமே நம்பி வாழ்கின்றனர். அமெரிக்காவின் மொத்த கடன் தொகை அதன் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியைப் போல (கிட்டத்தட்ட) மூன்றரை மடங்கு என்று சொல்லப் படுகிறது.

தனது சொந்த உழைப்பில் இல்லாமல் இப்படி உலக நாடுகளிடம் கடன் வாங்கியே வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அமெரிக்காவை ஒரு மிகக் கவர்ச்சியான மற்றும் பெரிய (மோசடி) பைனான்ஸ் கம்பெனி (A Big Ponzi Scheme) என்றும் உலக நாடுகள் எல்லாம் அதில் பணம் போட்டு ஏமாந்து கொண்டிருக்கின்றன என்றும் ஒரு பொருளாதார நிபுணர் கூறினார்.

அவர் சொன்னது போல இருக்குமானால், வெகு சீக்கிரம் இந்த நீர்க் குமிழியும் வெடிக்கும் என்று எதிர்பார்க்கலாம். அப்படி அமெரிக்கா திவாலானால் பாதிக்கப் படுவது (பைனான்ஸ் கம்பெனியில் பணியாற்றி வேலை இழக்கும்) அமெரிக்க மக்கள் மட்டுமல்ல, அங்கு முதலீடு செய்துள்ள இந்தியா, சீனா போன்ற வளம் குறைந்த நாடுகளும் அந்த நாடுகளில் உள்ள நம் போன்ற ஏழை மக்களும்தான்.

எப்போதும் போல இந்த விஷயத்திலும் நம்மை முந்திக் கொண்ட சீனா அரசு தனது அந்நிய செலவாணியை டாலர் கணக்கிலிருந்து வேறு கரன்சிகளுக்கு மற்றும் இதர வகை முதலீடுகளுக்கு மாற்றத் தொடங்கி விட்டது. சீனாவைப் போலவே தனது சேமிப்பில் பெரும்பகுதியை அமெரிக்க டாலரில் முதலீடு செய்திருக்கும் இந்தியா என்ன செய்யப் போகிறது? அமெரிக்க அரசு தவறாக எடுத்துக் கொள்ளும் என்று மாற்றம் செய்யத் தயங்கினால் நஷ்டம் நமக்குத்தான்.

கருத்துகள் இல்லை: