ஆம்பூர்: மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகியவற்றுடன் இணைந்து 16 தொகுதிகளில் போட்டியிடுவதாக இந்திய தேசிய லீக் கூறியுள்ளது.
இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் ஆம்பூரில் நடந்தது. கூட்டத்திற்குப் பின்னர் கட்சித் தலைவர் இனாயதுல்லா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த எங்களுக்கு வேலூர் மற்றும் மத்திய சென்னை தொகுதியை கேட்டு இருந்தோம். இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தோம். திடீரென அ.தி.மு.க.வில் வேட்பாளர்களை அறிவித்து விட்டனர்.
இது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது. இதனால் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை ஆதரிக்க போவதில்லை.
தமிழ்நாடு ஐக்கிய முன்னணி...
இந்திய தேசிய லீக், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், கொங்குவேளாளர் பேரவை ஆகியவை இணைந்து தமிழகத்தில் 16 தொகுதிகளில் போட்டியிட உள்ளோம்.
எங்கள் கூட்டணிக்கு தமிழ்நாடு ஐக்கிய முன்னணி என்று பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
எங்கள் கூட்டணிக்கு பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா, இஸ்லாமிய விழிப்புணர்வு கழகம், சுன்னத் ஜமாஅத் உள்ளிட்ட அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் ஆதரவு தந்துள்ளன.
இந்திய தேசிய லீக் தேனி, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளிலும், மனித நேய மக்கள் கட்சி மத்தியசென்னை, மயிலாடுதுறை, இராமநாதபுரம், பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளிலும், புதிய தமிழகம் தென்மாவட்டங்களில் 2 தொகுதியிலும் என 16 தொகுதியில் போட்டியிடுகிறோம்.
வேட்பாளர் தேர்வு மற்றும் கூட்டணி கட்சி தொகுதிகள் குறித்து சென்னையில் புதன்கிழமை முடிவு செய்து வேட்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்படும்.
பாமகவுக்கு ஆதரவு..
எங்கள் கூட்டணி வேட்பாளர் இல்லாத தொகுதியில் நாங்கள் பா.ம.க. மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு ஆதரவு அளிப்போம்.
பா.ம.க மதுவிலக்கு, புகைபிடித்தலுக்கு எதிரான பிரச்சாரம் ஆகியவற்றில் எங்களது கொள்கையை ஒத்துள்ளனர்.
தே.மு.தி.க.வில் வடமாநிலத்தை சேர்ந்த முஸ்லிமை வேட்பாளராக அறிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் பற்றி அத்தலைமைக்கு தெரியவில்லையா? வடமாநிலத்தவரை வேட்பாளராக நிறுத்த வேண்டியதன் அவசியம் என்ன? அதனால் வேலூர் தொகுதியில் தே.மு.தி.க.வின் வெற்றி கேள்விக்குறிதான். வேட்பாளருக்கு என்று இங்கு தனிப்பட்ட செல்வாக்கும் கிடையாது என்றார் இனாயதுல்லா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக