வியாழன், 9 செப்டம்பர், 2010

எகிப்து:தேர்தலைப் புறக்கணிக்க எதிர்கட்சி வேண்டுகோள்

கெய்ரோ,செப்.9:எகிப்தில் வருகிற நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் அரசு மோசடியில் ஈடுபடுவது தெளிவாகயிருக்கவே அத்தேர்தலை புறக்கணிக்குமாறு முக்கிய எதிர்கட்சித் தலைவரான முஹம்மது அல்பராதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேர்தலில் பங்கெடுப்பது எகிப்தில் ஜனநாயகத்தை கொண்டுவர வேண்டும் என்ற தேசிய விருப்பத்திற்கு எதிரானதாகும். வரும் ஆண்டிலும், மாதங்களிலும் தேசத்தில் மாற்றத்தின் சூறாவளி வீசும் என முன்னாள் சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவராக பணியாற்றிய அல்பராதி தெரிவித்துள்ளார்.

2011 ஆம் ஆண்டில் அதிபர் தேர்தலில் அல்பராதி பங்கேற்பாரா என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. 30 ஆண்டுகள் பதவியில் தொடர்ந்த ஹுஸ்னி முபாரக் இந்தத் தேர்தலோடு பதவி விலகுவார் என ஊகமானச் செய்திகள் கூறுகின்றன.

82 வயதான முபாரக் தனது மகன் ஜமாலை தனது வாரிசாக நியமிப்பார் என பெரும்பாலோர் கருதுகின்றனர்.

1981 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட அவசரச்சட்டத்தை மாற்றவேண்டும், தேர்தலை நீதிபதிகளின் மேற்பார்வையில் நடத்தவேண்டும் என்பது உள்ளிட்ட 7 கோரிக்கைகளை அல்பராதி முன்வைத்துள்ளார். இக்கோரிக்கைகளை முன்வைத்து அல்பராதி பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.

தேசிய ஜனநாயகக்கட்சி ஆட்சிச் செய்வதில் தோல்வியடைந்துவிட்டதாக அல்பராதி குற்றஞ்சாட்டுகிறார். ஏழ்மையும், கல்வியின்மையும் அதிகரித்துவருவதாகவும், மனித உரிமைமீறல்கள் அதிகரித்து வருவதாகவும் அல்பராதி தெரிவிக்கிறார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: