திங்கள், 6 செப்டம்பர், 2010

காஸ்ஸாவில் இஸ்ரேல் விமானத்தாக்குதல்: 2 பேர் மரணம்

காஸ்ஸா,செப்.6:காஸ்ஸாவில் நேற்று முன்தினம் இஸ்ரேல் 3 தடவை நடத்திய விமானத் தாக்குதலில் 2 ஃபலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். ஒருவருக்கு கடுமையாக காயம் ஏற்பட்டுள்ளது.

தெற்கு காஸ்ஸா பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இஸ்ரேலின் இந்த அக்கிரமத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக போராளிகள் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதலை நடத்தினர்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸும் வாஷிங்டனில் பேச்சுவார்த்தையை துவக்கி 3 தினங்களுக்குள்ளாக இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஃபா எல்லையில் அமைந்துள்ள சுரங்கங்கள் இஸ்ரேலின் தாக்குதல் இலக்காகும். இந்த சுரங்கங்கள் வாயிலாகத்தான் இஸ்ரேலின் அராஜக தடையால் அவதியுறும் காஸ்ஸா மக்கள் எகிப்திலிருந்து அத்தியாவசியப் பொருட்களை தருவிக்கின்றனர். இச்சுரங்கம் தகர்ந்துதான் இரண்டு ஃபலஸ்தீனர்கள் மரணமடைந்துள்ளனர். மூன்று பேருக்கு காயமேற்பட்டுள்ளது.

ஹமாஸின் ராணுவப் பிரிவான இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாம் பிரிகேட்ஸின் முந்தைய தளத்தின் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

காஸ்ஸா மீது நடத்திய தாக்குதலை இஸ்ரேலின் ராணுவச் செய்தித்தொடர்பாளர் உறுதிச்செய்தார்.தெற்கு இஸ்ரேலை நோக்கி போராளிகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் இழப்புகள் ஒன்றும் ஏற்படவில்லை.

ஃபலஸ்தீனின் நலன்களை விட்டுக்கொடுத்துவிட்டு இஸ்ரேலுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பேச்சுவார்த்தையை காஸ்ஸாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் எதிர்க்கிறது.

இஸ்ரேலுக்கெதிராக கூடுதலான தாக்குதல்கள் நடத்தப்படும் என ஹமாஸ் அறிவித்துள்ளது.

ஆக்கிரமிப்பு மேற்குகரையில் சட்டத்திற்கு புறம்பான யூதக் குடியேற்றக்காரர்கள் மீது இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாம் பிரிகேட்ஸ் நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் 4 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டிருந்தனர். இன்னொருத் தாக்குதலில் இரண்டுபேருக்கு காயம் ஏற்பட்டது. தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாகக் கைதுச் செய்யவேண்டுமென இஸ்ரேல் உள்துறை அமைச்சர் ஃபலஸ்தீன் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தார்.

இந்த வாரத்திலேயே இஸ்ரேலிலும், ஆக்கிரமிப்பு மேற்குகரையிலும் ஏராளமான தாக்குதல் அச்சுறுத்தல் இருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: