செவ்வாய், 28 செப்டம்பர், 2010

போபால் விஷ வாயு சம்பவம் -பாதிக்கப்பட்டோருக்காக கூடுதலாக ரூ.72 கோடி நிதி

டெல்லி,செப்.28:போபால் விஷ வாயு சம்பவத்தில் பலியானோரின் குடும்பங்களுக்கு கூடுதலாக ரூ.72 கோடி இழப்பீட்டை வழங்க, போபால் சம்பவம் தொடர்பான அமைச்சர்கள் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான போபால் விஷ வாயு சம்பவம் தொடர்பான அமைச்சர்கள் குழு நேற்று கூடி கூடுதல் இழப்பீடு குறித்து பரிசீலித்தது. இக்கூட்டத்தில் போபால் விஷ வாயு சம்பவ இழப்பீடு வழங்கும் பணிகள் குறித்தும், அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

மேலும் போபால் விஷ வாயு சம்பவத்திற்குப் பிந்தைய நிலை குறித்தும் ஆராயப்பட்டது.

வாரன் ஆன்டர்சனை நாடு கடத்திக் கொண்டு வரும் பிரச்சினை குறித்தும் ஆராயப்பட்டது.

முன்னதாக, போபால் விஷ வாயு சம்பவம் தொடர்பான தீர்ப்பு வெளியானதும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பான நிலைமை ஏற்பட்டது. வாரன் ஆன்டர்சன் மீது ஒரு சுண்டு விரல் கூட படாமல் வழக்கை முடித்த கொடுமையை நாட்டு மக்கள் பெரும் அதிருப்தியுடன் எதிர்நோக்கினர்.

இதையடுத்து அவசரம் அவசரமாக மத்திய அரசு ப.சிதம்பரம் தலைமையில் ஒரு அமைச்சர்கள் குழுவை நியமித்தது. இந்தக் குழு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு அரசுக்கு 22 பரிந்துரைகளை அளித்தது. அதில் முக்கியமானதாக ஆன்டர்சனை நாடு கடத்திக் கொண்டு வர முயற்சிக்கலாம் எனக் கூறப்பட்டிருந்தது. மேலும், இழப்பீடு மற்றும் மறு வாழ்வு நடவடிக்கைகளுக்காக ரூ.1265.56 கோடியை விடுவிக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.

இந்தப் பின்னணியில் நேற்று நடந்த கூட்டத்தில் கூடுதலாக ரூ.72 கோடியை விடுவிக்க முடிவு செய்யப்பட்டது. நேற்றைய கூட்டத்தில் வீரப்பமொய்லி, குலாம் நபி ஆசாத், ஜெயபால் ரெட்டி, கமல்நாத், குமாரி செல்ஜா, மு.க.அழகிரி, ஜெயராம் ரமேஷ், பிருத்விராஜ் சவான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


thatstamil

கருத்துகள் இல்லை: