ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

கஷ்மீரில் ஆயுதப்படைகளுக்கான சிறப்பு சட்டத்தை தயக்கமின்றி வாபஸ் பெற வேண்டும்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் திருமாவளவன்

புதுடெல்லி,செப்.19:ஜம்மு-கஷ்மீரில் ஆயுதப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை எந்தவித தயக்கமும் இன்றி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்தார்.

கஷ்மீர் பிரச்சனை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டெல்லியில் நடந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில் திருமாவளவனும் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:- "ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, ஜம்மு-கஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் நமது மக்களே என்று கூறினார். இது மிகவும் பாராட்டுக்குரியதாகும்.

ஜம்மு-கஷ்மீர் மாநிலத்தில் மக்களிடையே உள்ள உண்மை நிலவரம் என்ன என்பதைச் சுட்டிக்காட்ட நான் விரும்புகிறேன். ஜம்மு-கஷ்மீர் மாநில மக்களின் மனநிலை என்ன என்பதை இந்திய அரசு அறிந்துள்ளதா? இல்லையா? என்று எனக்குத் தெரியவில்லை. இந்திய அரசுக்கும் ஜம்மு-கஷ்மீர் குடிமக்களுக்கும் இடையே உள்ள முதன்மையான முரண்பாடு இதுதான்.

அந்த மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது எனும் கோணத்திலிருந்து தான் இந்தப் பிரச்சனையை இந்திய அரசு அணுக வேண்டும். அவ்வாறு இதனை அணுகாவிட்டால் இப்பிரச்சினைக்கு நிலையான தொரு தீர்வை நம்மால் காணவே முடியாது.

ஜம்மு-கஷ்மீர் மாநிலத்தைச் சார்ந்த மண்ணின் மைந்தர்களின் கோரிக்கையை மத்திய அரசு உரிய வகையில் பரிசீலிக்க வேண்டும். எனவே, ஆயுதப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை எந்தவித தயக்கமும் இன்றி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். அங்கு அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்கவும் பொது அமைதியை நிலை நாட்டவும் இதைத் தவிர வேறு வழியே இல்லை." இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை: