ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

செப்.17 பாப்ரி மஸ்ஜித் வழக்குத் தீர்ப்பு: 35000 துணை ராணுவப் படையினரை அனுப்ப உ.பி அரசு கோரிக்கை

புதுடெல்லி,செப்.4:பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த நிலத்தின் உரிமைத் தொடர்பான 125 ஆண்டுகள் பழமையான வழக்கின் தீர்ப்பை அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் 3 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்பு பெஞ்ச் வருகிற செப்.17 அன்று வழங்கவிருக்கிறது.

சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் பாதுகாப்பதற்காக துணை ராணுவப் படையினரை அனுப்ப உ.பி.அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

35000 துணைராணுவப் படையினரை(400 கம்பெனி) அனுப்ப உ.பி.அரசு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கோரியிருக்கிறது.முன்னர் உ.பி.கவர்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு இவ்வளவு ராணுவத்தினர் தேவை என அறிவித்திருந்தார். இந்த கோரிக்கையை முதல்வர் மாயாவதி ஆதரித்துள்ளார்.

அயோத்தியா, ஃபாஸியாபாத் ஆகியவை மட்டுமின்றி வாராணாசி, கான்பூர், லக்னோ, மாத்துரா, அலஹபாத், கோண்டா, அலிகர், மொராதாபாத், மீரட் உள்ளிட்ட நகரங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செயல்படவேண்டும் என மாநில அரசு கருதுகிறது.

கேபினட் செகரட்டரி சசாங்க் சேகரின் தலைமையில் நடந்த போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளின் கூட்டத்தில்தான் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

நேற்று முன் தினம் எ.டி.ஜி.பி ப்ரிஜ்லால் மீரட் பகுதியில் போலீஸ் அதிகாரிகளுடன் சந்திப்பை நடத்தினார். காமன்வெல்த் போட்டிக்கும், பாப்ரி மஸ்ஜித் வழக்கின் தீர்ப்பிற்கு பிறகும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எ.டி.ஜி.பி அறிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: