புதன், 22 செப்டம்பர், 2010

சிறப்பு ஆயுதச் சட்டத்தை உடனடியாக வாபஸ்பெற வேண்டும்-எஸ்.டி.பி.ஐ

புதுடெல்லி,செப்.21:ஜம்மு-கஷ்மீர், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் அமுலில் உள்ள சிறப்பு ஆயுதச் சட்டத்தை உடனடியாக வாபஸ்பெற வேண்டுமென சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.

கஷ்மீர் மக்களின் எதார்த்த பிரதிநிதிகளாக அனைத்துக்கட்சி பிரதிநிதிக்குழு பேச்சுவார்த்தையை நடத்தவேண்டும். இவ்விவகாரத்தில் நேர்மையான எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் தீர்வை காண தொடர்புடையவர்கள் தயாராகவேண்டும் என எஸ்.டி.பி.ஐ செயற்குழு வலியுறுத்தியது.

கஷ்மீரிலும், மணிப்பூரிலும் ராணுவத்திற்கு சிறப்பு அதிகாரத்தை வழங்கும் கொடூரச்சட்டம்தான் அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கான முக்கியக்காரணம் என செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

கஷ்மீர் மற்றும் இதர அனுபவங்கள் உணர்த்துவதுபோல் மக்கள் போராட்டங்களை ராணுவத்தையும், போலீசையும் கொண்டு அடக்கி ஒடுக்க இயலாது என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

மூன்று மாதத்திற்குள் கஷ்மீரில் 100 க்கும் மேற்பட்டோர் துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளனர். கஷ்மீரின் அமைதியை நாசமாக்கிய ராணுவத்தின் மீது ஏற்பட்ட மக்களின் எதிர்ப்புதான் அங்கு தொடரும் போராட்டங்கள் உணர்த்துகின்றன.

பாப்ரி மஸ்ஜித் வழக்கில் எவ்வகையிலான தீர்ப்பு வெளியானாலும் அங்கீகரிக்க தயாரான முஸ்லிம் சமூகத்தை எஸ்.டி.பி.ஐயின் செயற்குழு பாராட்டியுள்ளது. பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான தீர்ப்பின் பின்னணியில் தேசத்தின் அமைதியைக் கெடுக்க திட்டமிடும் ஹிந்துத்துவா பாசிஸ்டு சக்திகளின் முயற்சியை கடுமையான நடவடிக்கைகள் மூலம் தடுப்பதற்கு ஆட்சியாளர்களை வலியுறுத்தும் தீர்மானம் செயற்குழுவில் இயற்றப்பட்டது.

இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு செயற்குழு கவலையை தெரிவித்தது. பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிட முன்வந்த இந்திய அரசையும், அதனை ஏற்றுக்கொள்ளத் தயாரான பாக். அரசையும் பாராட்டியது எஸ்.டி.பி.ஐயின் செயற்குழு.

இ.அபூபக்கர், வழக்கறிஞர் ஸாஜித் சித்தீகி, முஹம்மது உமர்கான், பேராசிரியர் பி.கோயா, கெ.எம்.ஷெரீஃப், ஹாஃபிஸ் மன்சூர் அஹ்மத், எம்.கே.ஃபைஸி ஆகியோர் அடங்கிய பாராளுமன்ற போர்டை எஸ்.டி.பி.ஐயின் தேசிய செயற்குழு நியமித்தது.

அடுத்த பிப்ரவரி மாதத்தில் மேற்குவங்காளம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் கட்சியின் மாநில மாநாடுகள் நடத்தவும் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்திற்கு தேசியத் தலைவர் இ.அபூபக்கர் தலைமை வகித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: