திங்கள், 27 செப்டம்பர், 2010

ஈரான் அணு நிலையத்தின் செயல்பாட்டை தடுக்க கனிணி வைரஸ் தாக்குதல்

டெஹ்ரான்,செப்.27:ஈரான் அணு நிலையத்தின் செயல்பாட்டை தடுக்க 'ஸ்டக்ஸ்நெட் வார்ம்' என்ற சக்திவாய்ந்த வைரஸ் ஈரானின் முதல் அணு நிலையமான புஷேஹ்ர் நிலையத்தின் கணினிகளை தாக்கியுள்ளதாக ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அணு நிலையம் போன்ற தொழில் நிறுவனங்களை வைரஸ் தாக்குவது இதுவே முதல் முறையாகும்.

ஸ்டக்ஸ்நெட் வைரஸ் கணினிகளை மட்டுமே பாதித்துள்ளதாகவும் இன்னும் ஓரிரு வாரங்களில் செயல்பாட்டிற்கு(Go Live) வரவுள்ள இந்த அணு நிலையத்தின் இயங்கு தளத்திற்கு(Operating System) இந்த வைரசால் எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் அணு நிலைய அதிகாரி மஹ்மூத் ஜெப்ரி தெரிவித்தார்.

தங்களது தொழில்நுட்ப குழு வைரஸ் பாதித்த கணினிகளை கண்டறிந்தது அதனை நீக்கும் பணியில் முழு வீச்சாக செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அடுத்த மாதம் முதல் செயல்படவிருக்கும் அணு நிலையத்தை நிறுவும் தங்களது திட்டத்தில் இதனால் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

ஈரானின் மீது தொடுக்கப்பட்ட தொழிநுட்ப போர் ('Electronic war') என்றே இந்த வைரஸ் தாக்குதலை ஈரானின் தொழிற்துறை அமைச்சகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரி முஹம்மத் லியி தெரிவித்துள்ளார், தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் கடந்த வாரம் அத்துறை தலைவர் முஹம்மத் லியி தலைமையில் கூடி இந்த வைரஸ் தாக்குதலை சமாளிப்பது குறித்து ஆலோசித்தனர், இதுவரை ஈரானில் 30,000 கணினிகளை தாக்கியுள்ளதாக முஹம்மத் லியி தெரிவித்தார்.

ஸ்டக்ஸ்நெட் வார்ம் வைரஸ் ஜெர்மனியின் சீமன்ஸ்(Siemens) நிறுவன தயாரிப்புகளை இலக்காக வைத்தே வடிவமைக்கப்பட்டுள்ளது இது மின் நிலையம், தண்ணீர் தேக்கிகள்,எரிவாயு மட்டும் எண்ணெய் குழாய்களின் வால்வுகளை கட்டுப்படுத்தும் கருவிகள் போன்ற சீமன்ஸ் நிறுவனத்தின் பெரும் தயாரிப்புகளில் உள்ள கட்டுமான மற்றும் வடிவமைப்பு குறைபாடுகளை கண்டறிந்து அவற்றை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரும் திறம் வாய்ந்தது என்றும் மேற்கத்திய வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் இந்த ஸ்டக்ஸ்நெட் வார்ம் வைரசை வடிவமைத்திருக்கக் கூடும் என்றும் மேற்கத்திய வல்லுனர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: