ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரை அடுத்துள்ள ஷெய்க் ஜர்ராஹ் பிரதேசத்திலிருந்து அனேகமான பலஸ்தீன் குடும்பங்களை வெளியேற்றும் வகையில் உத்தரவு பிறப்பித்துள்ள இஸ்ரேலிய உயர் வழக்குமன்றத்தின் செயல் முழுக்க முழுக்க இனக் காழ்ப்புணர்வுடையதும் பாரதூரமானதுமாகும் என பலஸ்தீன் நாடாளுமன்ற உறுப்பினர் முஸ்தஃபா அல் பர்கோதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (28.09.2010) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலிய உயர் வழக்குமன்றத்தின் உத்தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மண்ணின் மைந்தர்களான பலஸ்தீனர்களைத் தமது சொந்த இருப்பிடங்களை விட்டும் பலவந்தமாக வெளியேற்றுவதை சட்டபூர்வமாக்கிக்கொள்ள முயன்றுவரும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களின் இத்தகைய நடவடிக்கைகள் மிகப் பாரதூரமானவை என்றும் புனித ஜெரூசல நகரில் வாழும் ஏனைய பலஸ்தீனர்களின் எதிர்கால இருப்புக்கு விடுக்கப்பட்டுள்ள மிகப்பெரும் அச்சுறுத்தலாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவதான போர்வையின்கீழ் தமது சட்டவிரோதக் குடியேற்றங்களை விரிவாக்குவதிலும் புனித ஜெரூசல நகரினை யூதமயப்படுத்துவதிலும் ஈடுபட்டுவரும் இஸ்ரேலிய சதித்திட்டத்தை முறியடிக்கும் வகையில், இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தைகள் உடனடியாக இடைநிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக