"Dr ஆபியா சித்திகாவை விடுதலை செய்து தாய்நாட்டிற்கு கொண்டு வர எல்லாவித முயற்சிகளும் எடுக்கப்படும்" என்று கூறிய பிரதமர் கிலானி, Dr ஆபியா சித்திகா அவர்களை ஒரு போர் கைதியாக கருதி விடுதலை செய்ய அமெரிக்காவைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
பாகிஸ்தானில் பல்வேறு அரசியல் மற்றும் ஆன்மீக அமைப்புக்கள் Dr ஆபியா சித்திகா அவர்களை விடுதலை செய்யகோரியும், அமெரிக்க அரசியல் சட்டத்தை கண்டித்தும் நடத்திய நாடுதழுவிய தொடர் பிரச்சாரமே அரசின் இந்த முடிவிற்குக் காரணம்.
Dr ஆபியா சித்திகா முந்தைய அரசாங்கத்தின் ஆட்சியில் அமெரிக்காவால் கைதுசெய்து கொண்டு செல்லப்பட்டார் என்றாலும் அவரை விடுவிக்க தனது அரசு எல்லாவித முயற்சியும் எடுத்துவருகின்றது, மேலும் ஒவ்வொரு முறையும் அமெரிக்க தலைவர்கள் பாகிஸ்தான் வரும் போதும், குறிப்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலரி கிளிண்டன், ஜேம்ஸ் ஜோன்ஸ் ஆகியோரின் வருகைளின்போது ஜனாதிபதியும் பிரதமர் கிலானியும் இதனை பேசியதாகவும், தங்களின் வெளிநாட்டு பயணங்களிலும் வலியுறுத்தியதாகவும், கூறிய பிரதமர் Dr ஆபியா அவர்களுக்கு சட்டரீதியான உதவிகள் செய்வதற்காக 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கியிருப்பதாக தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "பாகிஸ்தான் அரசின் முயற்சியால் Dr ஆபியாவின் இரண்டு குழந்தைகளும் பத்திரமாக பாகிஸ்தான் கொண்டுவரப் பட்டுள்ளனர். அவரின் மற்றொரு குழந்தையைத் தேடும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது" என்றார்.
உள்துறை அமைச்சர் தனது சமீபத்திய அமெரிக்க பயணத்தின் போது பிரதமரின் சார்பாக அமெரிக்க அதிகாரிகளை சந்தித்து Dr ஆபியாவை விடுதலை செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார். மேலும் Dr ஆபியா மீதான வழக்கின் தீர்ப்பிற்கு முன்பே அவரை தன் தாய்நாட்டிற்கு அனுப்பும்படி கோரி ஒரு கடிதமும் அமெரிக்க அரசிடம் கொடுக்கப்பட்டது என்றும் கிலானி தெரிவித்தார்.
பிரதமருடனான இந்தச் சந்திப்பிற்கு பின் உள்துறை அமைச்சர் தனது துறை அதிகாரிகளுடன் இதற்கான வெவ்வேறு வழிகளைக் கலந்தாலோசனை செய்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு உள்துறை, வெளியுறவுத்துறை, சட்டம் மற்றும் நீதித்துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் இரு திறமையான வழக்கறிஞர்களும் அடங்கிய குழு ஒன்றை அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் இவ்வழக்கை அமெரிக்க நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து நடத்திட அமெரிக்க வழக்கறிஞர்களை அமர்த்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அரசியல் ரீதியான முயற்சிகளுக்கு அனைத்துக்கட்சி பெண்கள் குழு அமைத்து, அவர்கள் அமெரிக்கா சென்று அதன் பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை அதிகாரிகள், அரசியல் வாதிகள், வழக்கறிஞர்கள், மற்றும் அமெரிக்க மனித உரிமை ஆர்வலர்களையும் சந்தித்து பாகிஸ்தான் மக்களின் உணர்வுகளை எடுத்துக்கூறி Dr ஆபியாவின் விடுதலையை வலியுறுத்துவார்கள் என்றும் முடிவுசெய்யப்பட்டது.
வெளியுறவு அதிகாரி ஒருவரிடம் எந்த அடிப்படையில் Dr ஆபியா விடுதலை செய்யப்பட வாய்ப்பு உள்ளதென்று கேட்கையில், "அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்கள் Dr ஆபியாவை மன்னித்து விடுதலை செய்யலாம் அல்லது Dr ஆபியா தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையைக் குறைந்த அளவாக பாகிஸ்தானிலே நிறைவேற்ற வேண்டுமென்ற ஒப்பந்த அடிப்படையிலும் விடுவிக்கப்படலாம்" என்று கூறினார்.
டாக்டர் ஆஃபியாவிற்கு 86 ஆண்டு கால சிறைத்தண்டனை தீர்ப்புக்கு, பாகிஸ்தான் மனித உரிமை கழகம் தனது பயம் கலந்த அதிருப்தியை தெரிவித்துள்ளது. மேலும் பாகிஸ்தான் அமெரிக்கா அரசுகளிடம் Dr ஆபியாவைத் தாய்நாட்டிற்கு திரும்ப கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியும் உள்ளது. மேலும் இந்தத் தீர்ப்பானது பாகிஸ்தானில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு தீவிரவாதத்திற்கெதிரான பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவின் கூட்டு முயற்சியை மிக கடினமாக்கி விடுமோ என்றும் அதன் சேர்மன் மேஹ்டி ஹசன் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக