திங்கள், 6 செப்டம்பர், 2010

ஐ.நா. தலையிடும் வரை காஷ்மீரில் அனாதைகளின் எண்ணிக்கை உயரும்!

மைதியின்றி வளர்ச்சியில்லை என்பது அடிக்கடி அமைச்சர்களும் அதிகாரிகளும் பேசுகிற குத்து வசனங்கள் (பஞ்ச் டயலாக்). இவர்கள் எதை அமைதி என்கிறார்கள் ? எதை வளர்ச்சி என்கிறார்கள். முதலில் தெளிய வேண்டிய பித்து இதுதான்.

காஷ்மீரில் கடந்த ஜுன் 11 அன்று தெருவில் இறங்கி போராடிய கூட்டத்தைக் குறிவைத்து கண்ணீர்புகைத் தோட்டாவை சுட்டதில் சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டான். வானைநோக்கி சுடுவதுதான்வழக்கம்.

இந்தப் படுகொலையைக் கண்டித்து போராடியவர்கள் மீது மேலும் மேலும் துப்பாக்கிச்சூடு. 25 வயது பெண், சிறுவர்கள் உட்பட கடந்த 7 வாரங்களில் 30 க்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.



காஷ்மீர் தேசத்து மக்களெல்லாம் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த முதல்வர் உமர்அப்துல்லா ஞாயிற்றுக்கிழமைகளில் டெல்லிக்கு வந்து ஷாப்பிங் செய்யாமல் இருக்கமாட்டார். தலைநகரில் பணப்புழக்கம் குறைந்துவிடுமோ என்ற கவலையாக இருக்கலாம்.


அவர், முதலில் வன்முறையின் சுழற்சியை தடுத்து அமைதியை உருவாக்க வேண்டும். பிறகு அரசியல் பிரச்சனைகளைப் பார்க்கலாம்” என்கிறார். இங்கே அமைதியின் எதிரியாக பொதுமக்களைக் காட்டுகிறார். அது தொலைக்காட்சி வழியாக நாடெங்கும் செல்கிறது. பயங்கரவாதிகள் போராட்டக்காரர்களோடு ஊடுருவியிருக்கிறார்கள்.


பெரிய ஆயுதக் குவியல் கண்டுபிடிப்பு என்றெல்லாம் (தமிழகத்தில் 2 மாதத்தில் திடீரென்று 10 ரயில்கவிழ்ப்பு சதிகளுக்கு மேல் காட்டப்பட்டது போல்) தொலைக்காட்சிகள் காட்டிக் கொண்டே இருக்கின்றன. நாமும் அப்படியே நம்பினோம். கலவரக்கார்களை கண்டதும் (மேலும்) சுட உத்தரவு போடப்பட்டது. அமைதிக்காத்தோம். இது தான் அமைதி!.


காஷ்மீரில் கடந்த 19 ஆண்டுகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 80,000 குழந்தைகள் அநாதைகளாக்கப்பட்டுள்ளனர். இன்னும் ஐந்து காஷ்மீரிகளுக்கு எதிராக ஒரு இந்திய சிப்பாய் துப்பாக்கி துணை நீட்டிக் கொண்டு நிற்கிறது. தினமும் சுடுவதற்கு ஒரு கலகக்காரனோ ஒரு தீவிரவாதியோ கிடைத்து விடுகிறான். இந்த கணக்குகள் ஊடுறுவல்காரர்கள் பட்டியலில் சேராது. அது தனிப்பட்டியல்.



இதுவரை போராட்டத்தில் கல்லெறிந்தார்கள் என்று சொல்லி 2000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 ஆண்டு விசாரணையில்லாமல் சிறைதண்டனையளிக்கும் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தில், பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீர் வீதிகளெங்கும் மக்கள் கூட்டம். வீதிகளெங்கும் இளைஞர்களின் ஆட்சி. அவர்களின் முழக்கக்குரல் விண்ணைப் பிளக்கிறது. இந்திய அரசே காஷ்மீரை விட்டு வெளியேறு! .


காஷ்மீர் இந்தியாவுக்குச் சொந்தம் என்று வசனம் பேசும் தமிழ்படங்களும் இந்திப்படங்களும் நிறைய காசுப்பார்த்து விட்டன. ஆனால் நமது முதல்பிரதமர் நேரு அப்படிச் சொல்லவில்லை.


ஒரு நெடுங்கதை சீக்கிய மன்னன் ஹரிசிங்கிடம் விசுவாசம் காட்டி ஜம்மு பகுதியைப் பரிசாகப் பெற்றான் குலாப்சிங். டோக்ரா வம்சத்தைச் சேர்ந்த இவன் ஆங்கிலேயருக்கும் சீக்கியருக்கும் இடையில் மூண்ட போரில் ஆங்கிலேயேருக்கு உதவினான்.


அதாவது அன்றைய கருணா பலனாக ஆங்கிலேயர் காஷ்மீரை அவனிடம் கையளித்தார்கள். இந்து மன்னனான இவன் 87 சதவீதம் முஸ்லீம் மக்களின் ஆட்சியாளராக முடிசூடிக் கொண்டான். அதாவது காஷ்மீர் மக்களால் எவ்விதத்திலும் தேர்ந்தெடுக்கப்படாத தான் தோன்றித் தனமான மன்னராட்சி. இதன் வாரிசுதான் மன்னன் ஹரிசிங்.

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு இரு நாடுகளோடும் இணைவதில்லை என்ற நிலை எடுத்தான் மன்னன் ஹரிசிங். மன்னனின் கொடுங்கோலாட்சியை எதிர்த்து பூஞ்ச் (ஜம்மு) பகுதியைச் சேர்ந்த இப்ராஹிம்கான் தலைமையில் ஆயுத எழுச்சி நடத்தப்பட்டது. இவர்களை ஒடுக்கமுடியாமல் மன்னன் திணறினான்.


இந்நிலையில் இவர்களுக்கு ஆதரவாக பாகிஸ்தானிலிருந்து சுமார் 3000 பழங்குடியினர் படையெடுத்து வந்தனர். அவர்களை ஒடுக்கமுடியாமல் மன்னன் திணறினான்.. மன்னர் இந்திய அரசிடம் ஓடினான். இந்தியராணுவம் அவர்களை விரட்டியடித்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவத்துடன் போர் மூண்டது. 1949 ஜன 1-ல் போர் முடிவுற்றது. இரு ஒப்பந்தங்களுக்கு அந்தப்போர் வழிவகுத்தது.


மன்னன் ஹரிசிங் - பாகிஸ்தான் இடையே 1948 டிச -31ல் அசையாநிலை ஒப்பந்தமும், மன்னனுக்கும் இந்தியாவுக்கும் இணைப்புக்கான ஒப்பந்தமும் போடப்பட்டன.


பாகிஸ்தான் ஆக்கிரமித்த பகுதியை இந்தியா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (ஆஸாதி காஷ்மீர் எனப்படுவது) என்றது. ஜம்மு – காஷ்மீர் பகுதியை இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று பாகிஸ்தான் சொன்னது. இருவர் சொன்னதும் உண்மைதான்.


இந்தியாவுக்கும் மன்னனுக்கும் இடையிலான ஒப்பந்தம் சொல்வதென்ன?


1. பாதுகாப்பு, வெளியுறவு, தகவல் தொடர்பு சம்மந்தமான அதிகாரங்கள் மட்டுமே இந்தியாவுக்குரியது மற்ற அதிகாரங்கள் காஷ்மீருக்கு உரியது.


இதன்படி அரசியல் சட்டம் 370-வது பிரிவு உருவாக்கப்பட்டு சுயாட்சி உரிமைகள் கொண்ட ஜம்மு – காஷ்மீர் மாநிலம் அமைக்கப்பட்டது.

2. ஜம்மு – காஷ்மீர் மக்கள் மத்தியில் இந்தியாவோடு சேர்ந்திருப்பதா பிரிந்து போவதா என முடிவு செய்ய பொது வாக்கெடுப்பு நடத்துவது. இதனை ஐ.நா. அவை மேற்பார்வை செய்யும் காஷ்மீர் மக்களின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே இந்திய அரசுடன் இணைக்கப்படும்.


இந்த இரு கூறுகளையும் நமது முதல் பிரதமர் நேரு வானொலியில் அறிவித்தார். இதை ஐ.நா. அவைக்கும் எடுத்துச் சென்றார். ஐ.நா. அவை இதை ஏற்று இந்தியா பாகிஸ்தான் ஐ.நா. ஆணையம் ஒன்றை அமைத்தது.


இந்நிலையில் காஷ்மீர் தேசிய இன உரிமையை முன்னிறுத்திப் போராடிய அப்துல்லா 1948, மார்ச் 17 பிரதமராக பதவியேற்கிறார். காஷ்மீருக்கு தனிப் பாராளுமன்றம் அமைக்கப்படுகிறது. இளவரசர் கரண்சிங் காஷ்மீரின் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இந்திய அரசோடு நட்பான ஒரு சுயாட்சிக் குடியரசின் ஆட்சி மலர்ந்தது.


பிரதமர் பரூக் அப்துல்லா டோக்ரா அரசர்களின் பரம்பரை ஆட்சி உரிமையை ரத்து செய்தார். ஒடுக்கப்பட்டோருக்கான இடஒதுக்கீடு, ஜாகிர்தாரி முறை ஒழிப்பு, நிலச்சீர்திருத்தம் ஆகிய முற்போக்கான சீர்திருத்தங்களைச் செய்தார். மிகக் குறுகிய காலமே இது நீடித்தது.

இனி இந்திய அரசின் துரோகப் பட்டியல் :-


1. இன்றுவரை பொதுசனவாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.


2. 1949, அக்-17ல் உருவான அசியல் சாசனப்பிரிவு 370ன் கீழான உரிமைகள் படிப்படியாக ரத்து செய்யப்பட்டன.


3. ஆக, 8 1953ல் பிரதமர் அப்துல்லா பதவி நீக்கம் செய்யப்பட்டு கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவர்மீது காஷ்மீர் சதி வழக்கு போடப்பட்டது.


4. அக் 30 1956ல் காஷ்மீர் இந்தியாவோடு இணைந்த பகுதி என்று பிரகடனப்படுத்தப்பட்டது.


5. காஷ்மீர் அரசிடம் அதுவரை இருந்த மாநில உள் விவகாரங்கள் அனைத்திலும் சட்டமியற்றும் அதிகாரத்தை இந்திய அரசு எடுத்துக்கொண்டது.


பின் 1961ல் இந்தியா – பாகிஸ்தான் போரைத் தொடர்ந்து காஷ்மீர் தேசிய இனப்பிரச்சினை வெறும் எல்லைத் தகரான சிக்கலாகக் குறுக்கப்பட்டது. 1987க்கு பிறகு வெடித்த ஆயுதந்தாங்கிய காஷ்மீர் விடுதலைப் போராட்டம் ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டு வீழ்த்தப்பட்டது. தீவிரவாதம், பயங்கரவாதம் என்று முத்திரை குத்தப்பட்டு தேசிய இனப் பிரச்சனை முற்றாக திசை திருப்பப்பட்டது.


நமது பிரதமர் நேரு வானொலியில் ஆற்றிய உறுதியளிக்கும் உரைகளை வான்வெளியில் பறக்கவிட்டார். அவரது வாரிசுகளின் காலத்தில் கொல்லப்பட்ட லட்சம் காஷ்மீரிகளின் குழந்தைகள் தீவிரவாதிகளின் குழந்தைகள் என்பதால் அவர்களுள் 15000 குழந்தைகளுக்கு அரசு உதவிகள் கிடையாதாம்.


இப்போது நடைபெறும் போராட்டத்தில் மேலும் குழந்தைகள் அநாதைகளாகலாம். அவர்களுக்கும் அநாதை வாரிசுகள் பிறக்கலாம். அவர்களின் வாரிசுகள் எதிர்காலத்தில் தேசிய இன உரிமைகளின் மாபெரும் எதிரி இந்தியாவே எங்களின் தாய்மண்ணை விட்டு வெளியேறு என்று நாளை வீதியிலிறங்கி விண்ணதிரக் கத்தலாம். எவ்வளவு உரக்கக் கத்தினாலும் அதைத் தனிமைப்படுத்தும் சாதுரியம் இந்திய அரசுக்கு உண்டு.


காஷ்மீரிகளின் குரலை தமிழர்களும், தமிழர்களின் குரலை காஷ்மீரிகளும் எதிரொளிக்கும் ஒரு நன்னாளில் அமைதி ஏற்படும். அப்போதுதான் வளர்ச்சி சாத்தியம்.

காஷ்மீரில் அமைதி இழந்து கலவரம் வெடிக்க காரணம் என்ன?

இயற்கையாகவே சுற்றுலா தளங்கள் நிறைந்த, குளுமையான பிரதேசம் காஷ்மீர். அதனால் தான் ஜவஹர்லால் நேரு முதல் ஆங்கிலேயர்கள் வரை இங்கு வந்து தங்கி ஓய்வு எடுத்தனர். இன்றைய அரசியல்வாதிகளும் ஓய்வுக்காக செல்லும் முக்கியமான இடம் இதுதான். அதே போல இங்குள்ள பெண்களும் இயற்கை அழகு கொண்டார்கள். காண்பவர்களை கவரும் அழகு இவர்களிடம் உள்ளது இந்த அழகை பார்க்க, ரசிக்க வந்தவர்கள் ருசிக்கவும் செய்து விட்டனர்.

பாதுகாப்புக்கு என்று வந்தவர்களும் பெண்களை சூரையாடிவிட்டனர். கோடை சுற்றுலா தளம் என்பதால் பெண்கள் கம்பளி போன்ற பொருட்களை விற்க வரும் போது தங்களின் கற்பையும் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். பாதுகாப்பு படைகள் சூரையாடியதை கேட்க செல்லும் இளைஞர்களை பாதுகாப்பு வீரர்கள் தாக்கி விசாரணை என்ற பெயரில் தூக்கிச் செல்வதுடன் சரி மீண்டும் அந்த இளைஞன் திரும்பி வரமாட்டான். இதுக்கு நியாயம் கேட்க போராடினால் நாங்கள் கலவரக்காரர்கள் ஆகிவிடுகிறோம். இப்படி பாதிக்கப்படாத குடும்பங்களே காச்ஷ்மீரில் இல்லை.


இதை பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் சாதகமாக்கிக் கொண்டு வேதனையில் இருப்பவர்களிடம் சாதகமாக பேசி கலவரம் தூண்டி அதில் அவர்கள் காய்வதுடன் ஊடுருவி இந்தியாவுக்குள்ளும் நுழைகிறார்கள். எப்படி ஆனாலும் பாதிப்பு காஷ்மீர் மக்களுக்குத்தான்.

எங்களின் இந்த துயர நிலைக்கு காரணம் இந்தியா, பாகிஸ்தான் இவர்களுடன் ஐ.நா.சபையும் தான். தொடக்க கால ஒப்பந்தப்படி பொது ஜன வாக்கெடுப்பு நடத்தி இருந்தால் நாங்களும் சுதந்திரமாக இருந்திருப்போம். இலங்கையில் நடந்த இன அழிப்பின் மோகமும் சரி எங்கள் இன அழிப்பின் மோகமும் சரி ஐநா மௌனம் காக்கும்வரை உயிர்பலிகள் நடந்தும், உயிர்களை காக்க ஐ.நா.தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐ.நா.வின் தலையீடு வரும் வரை காஷ்மீரில் அனாதைகளின் எண்ணிக்கை தான் உயரும்.

- தங்க பாண்டியன்
- இரா. பகத்சிங்

கருத்துகள் இல்லை: