வியன்னா,செப்.26:அணுசக்தி பரவல் தடை ஒப்பந்தத்தில் இஸ்ரேலை கையெழுத்திடக் கோரும் தீர்மானம் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் நிர்பந்தத்தின் மூலம் ஐ.நா தள்ளுபடிச் செய்தது.
அரபு நாடுகள் கொண்டுவந்த தீர்மானத்திற்கு எதிராக யூத மையம் கடுமையான பிரச்சாரம் மேற்கொண்டது. ஐந்து வாக்குகள் வித்தியாசத்தில் தீர்மானம் தோல்வியை தழுவியது.
மேற்காசியாவை அணு ஆயுதமில்லாத பிரதேசமாக மாற்றுவதற்கான முயற்சியையும், ஃபலஸ்தீன் - இஸ்ரேல் பேச்சுவார்த்தையையும் பாதிக்கும் எனக்கூறி இந்த தீர்மானத்தை எதிர்க்க இதர நாடுகளுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்தது.
தீர்மானத்திற்கு ஆதரவாக 46 வாக்குகளும், எதிராக 51 வாக்குகளும் கிடைத்தன. ரஷ்யாவும், சீனாவும் தீர்மானத்தை ஆதரித்தன.
மேற்காசியாவில் அணுஆயுதத்தை தன் வசம் கொண்ட ஒரே நாடு இஸ்ரேலாகும். அதேவேளையில் அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத ஒரே நாடும் இஸ்ரேலாகும்.
இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்ட அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் அரப் லீக்கின் தலைவர் அம்ரு மூஸா.
மேற்காசியாவை அணுஆயுதமில்லாத பகுதியாக மாற்றும் முயற்சியின் ஒருபகுதியாக இஸ்ரேல் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட கோருவதில் என்ன தவறு உள்ளது? என்று கேள்வி எழுப்பிய அம்ரு மூஸா, இஸ்ரேலுக்கு மட்டும் சிறப்பு அளிப்பதன் நோக்கம் புரியவில்லை என தெரிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக