வியாழன், 3 டிசம்பர், 2009

போலி என்கவுண்டர்: நீதிபதி தாமங்கின் அறிக்கையை நிறுத்தி வைத்த குஜராத் உயர் நீதிமன்ற விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை!


குஜராத் மாநில தீவிரவாத எதிர்ப்புப் படையினரால் போலியாக என்கவுண்டர் செய்யப்பட்ட இஸ்ரத் ஜஹானின் கொலை வழக்கு குறித்து குஜராத் மாநில உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

போலி என்கவுண்டர் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் குஜராத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று இஸ்ரத்தின் தாயார் ஷமீமா கெளசர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதர்சன் ரெட்டி மற்றும் தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு நீதிமன்றம், உயர் நீதிமன்ற விசாரணைக்குத் தடை விதித்தனர். மேலும் இதுதொடர்பாக டிசம்பர் 7ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த போலி என்கவுண்டர் குறித்து விசாரணை செய்த அகமதாபாத் மாஜிஸ்ட்ரேட் எஸ்.பி.தாமங், 19 வயதான இஸ்ரத் நரேந்திர மோடியைக் கொலை செய்ய முயன்றதால் அவரை என்கவுண்டர் செய்தோம் என்று காவல்துறையினர் கூறியதை ஏற்க மறுத்து, இஸ்ரத் சொந்தக் காரணங்களுக்காக காவல்துறையினரால் கொலை செய்யப்பட்டதாகக் கூறினார்.

மாஜிஸ்ட்ரேட் விசாரணையை எதிர்த்து குஜராத் மாநில அரசு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தாமங்கின் அறிக்கையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டு இருந்தது. இதனை எதிர்த்தே இஸ்ரத்தின் தாயார் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

source:inneram

கருத்துகள் இல்லை: