செவ்வாய், 22 டிசம்பர், 2009

கர்காரேயை நான் கொல்லவில்லை: அஜ்மல் கஸாப்

மும்பை:மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலின் போது ஏ.டி.எஸ் தலைவர் கர்காரே உட்பட மூத்த போலீஸ் அதிகாரிகளை தான் கொல்லவில்லை என்று அஜ்மல் கஸாப் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

சிறப்பு விசாரணை நீதிமன்றத்தில் நீதிபதி எம்.எல்.தஹலியானி முன்பாக நேற்று வாக்குமூலம் அளித்தபோது மும்பை தாக்குதலின் போது கைதுச்செய்யப்பட்ட ஒரேயொரு குற்றவாளி என்று காவல்துறையால் கூறப்படும் அஜ்மல் கஸாப் இதனை வெளியிட்டார்.

தாக்குதல் நடைபெற்ற செப்டம்பர் 26 அன்று இரவு நான் சி.எஸ்.டி ரயில்வே நிலையத்திலோ, காமா மருத்துவமனை அருகிலோ, காவல்துறை என்னை கைது செய்ததாக கூறும் கிர்கோம் சவ்பாட்டியிலோ நான் இல்லை. ஹேமந்த் கர்காரே, விஜய் சாலஸ்கர், அசோக் காம்தே ஆகிய போலீஸ் அதிகாரிகளுக்கு நேராக நான் துப்பாக்கியால் சுடவுமில்லை. தாக்குதல் நடைபெற்ற வேளையில் நான் போலீஸ் கஸ்டடியிலிருக்கும் போது நான் எவ்வாறு இதனைச் செய்வேன்? என்றும் கஸாப் வினவினார்.

மும்பை தாக்குதல் நடப்பதற்கு 20 தினங்களுக்கு முன்பே இந்தியாவுக்கு வந்த என்னை தாக்குதல் நடப்பதற்கு முன்தினம் ஜுஹு பீச்சில் வைத்து போலீஸ் என்னை கைது செய்தது என்று நேற்று முன்தினம் கஸாப் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருந்தார்.

தாக்குதல் நடைபெற்ற மும்பையிலுள்ள இடங்களெல்லாம் நன்றாக தெரியுமல்லவா? என்று நீதிபதி கேட்டதற்கு க்ரைம்பிராஞ்ச் வசமிருந்த என்னை மும்பை தாக்குதலுக்கு பின்னர் போலீஸ் அதிகாரிகள் இவ்விடங்களுக்கெல்லாம் என்னை வாகனத்தில் அழைத்துச்சென்றனர் என்று கஸாப் பதில் கூறினார். "அவர்கள் போலீஸ்காரர்கள் அவர்களுக்கு ஒரு நபர் தேவை. அதற்கு தன்மீது குற்றஞ் சுமத்துகின்றார்கள், என்று கூறிய கஸாபிடம் கையில் துப்பாக்கி குண்டடிப்பட்ட காயம் எவ்வாறு ஏற்பட்டது? என நீதிபதிக்கேட்டபொழுது, "கஸ்டடியிலிருந்த என்னை அனஸ்தீசியா(மயக்கமருந்து) தந்து மயக்கிய பிறகு போலீஸ் துப்பாக்கியால் எனது கையில் சுட்டது என்று கஸாப் பதில் கூறினார்.

நவம்பர் 26 அன்று இரவு 11.15 மணியளவில் தன்னை மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதித்ததாகவும் கஸாப் கூறினார். அரசு தரப்பு கோர்ட்டில் ஆஜராக்கிய ஆடைகளும், ஏ.கே.47 துப்பாக்கியும் புகைப்படங்களும் தன்னுடையதல்ல என்று கஸாப் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இரத்தகறை படிந்த கால் சட்டையும் நீல நிறச்சட்டையும் காண்பித்தபொழுது இவை தன்னுடையதல்ல என்றும் தனது இரத்தத்தை எடுத்து போலீஸ் அதில் தேய்த்துள்ளது என்று கூறிய கஸாப் இந்த ஆடை எனக்கு பொருந்தாது ஏனெனில் அவை சிறியவை என்று கூறினார்.

ஏ.கே.47 துப்பாக்கியுடன் சி.எஸ்.டி யில் தாக்குதல் நடத்துபவர்களின் புகைப்படத்தில் உள்ளது தான் அல்ல என்றும் கஸாப் கூறினார். புகைப்படத்தில் யாராக இருந்தாலும் அவர் துப்பாக்கியை பிடித்திருப்பது நிலத்தை நோக்கிய நிலையில் என்றும் அவர் எவருக்கும் நேராகவும் துப்பாக்கியால் சுடவில்லை என்றும் கஸாப் மேலும் தெரிவித்தார்.

டைம்ஸ் ஆப் இந்தியா என்ற நாளிதழின் அலுவலகத்தின் மூன்றாவது மாடியிலிருந்து புகைப்படமெடுத்த போட்டோகிராஃபரை நோக்கி கஸாப் துப்பாக்கியால் சுட்டதாக அரசுதரப்பு கூறுகிறது. ஏ.கே.47 துப்பாக்கி தன்னுடையதல்ல இதனை நான் முதன் முதலாகத்தான் பார்க்கிறேன் என்றும் கஸாப் கூறினார்.

உடல்நிலை சரியில்லாததால் வாக்குமூலம் அளிப்பதை வேறொரு தினம் மாற்றவேண்டும் என்ற கஸாபின் கோரிக்கையை நீதிமன்றம் தள்ளுபடிச்செய்தது. ஒன்றும் கூறாவிட்டால் அது கஸாபின் விருப்பத்தைப் பொறுத்தது என்று நீதிபதி பதிலளித்தார். இரண்டாவது நாளாக நீதிமன்றம் கஸாபின் வாக்குமூலத்தை பதிவுச்செய்கிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: