வியாழன், 31 டிசம்பர், 2009

காஸா நெடுகிலும் அமைக்கப்பட்டு வருகின்ற இரும்புச் சுவர்க் கட்டுமானத்தை எகிப்து உடனடியாக நிறுத்த வேண்டும்: ஹஸன் நஸ்ருல்லாஹ்

காஸா நெடுகிலும் அமைக்கப்பட்டு வருகின்ற இரும்புச் சுவர்க் கட்டுமானத்தை எகிப்து உடனடியாக நிறுத்த வேண்டுமென ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் தலைவர் செய்யித் ஹஸன் நஸ்ருல்லாஹ் அழைப்பு விடுத்துள்ளார்.அவ்வாறு நிறுத்துவது முற்றுகையிடப்பட்டுள்ள காஸா மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த உதவும் எனவும் அவர் தெரிவித்தார்.

காஸா மக்களுக்கு இருக்கின்ற மிகச் சிறிய நம்பிக்கையும் நிம்மதியும் இச்சுவரின் மூலமாக தகர்த்தெறியப்படும் என மேலும் அவர் தெரிவித்தார் என ரொய்டர் தெரிவிக்கின்றது.

எகிப்து இச்சுவர்க் கட்டுமானத்தை உடனடியாக நிறுத்தி முற்றுகையை வாபஸ் பெற வேண்டுமென நாம் அழைப்பு விடுக்கின்றோம். மறுக்கும் பட்சத்தில், அனைத்து அரபு முஸ்லிம் நாடுகளினாலும் இது கண்டித்து எதிர்க்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஆஷூரா நிகழ்வையொட்டி லெபனானில் இடம்பெற்ற பொது நிகழ்ச்சியொன்றில், ஒன்றுகூடியிருந்த பல்லாயிரக் கணக்கான லெபனானிய ஷியா முஸ்லிம்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இக்கருத்துக்களை வெளியிட்டார்.

அந்நிகழ்ச்சியின் போது, அங்கு குழுமியிருந்தவர்கள், அமெரிக்கா அழியட்டும், இஸ்ரேல் அழியட்டும் போன்ற கோஷங்களை எழுப்பினர்.

பிரபல முஸ்லிம் அறிஞரான யூசுப் கர்ளாவியும் கூட, எகிப்தின் இச்சுவர்க் கட்டுமானத்தை கண்டித்து, இது, இஸ்லாத்தினால் தடை செய்யப்பட வேண்டிய மிக அநீதியான செயல் என வர்ணித்துள்ளார்.

ரபா பகுதி காஸா மக்கள் வெளிச் செல்வதற்காக உள்ள ஒரேயொரு எல்லையாகும். இஸ்ரேலின் அழுத்தங்களுக்குக் கட்டுப்பட்டு அதனை எகிப்து மூடிவிட்டுள்ளது. இதனைத் திறந்து காஸா மக்களின் வாழ்வுரிமையைக் காக்க வேண்டுமெனவும் யூசுப் கர்ளாவி வேண்டியுள்ளார்.

அரபு லீக் மற்றும் இஸ்லாமிய மாநாட்டு அமைப்பு ஆகிய அமைப்புகள், இச்சுவர்க் கட்டுமானத்தைத் தடுக்கும்படி எகிப்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
source:iqna

கருத்துகள் இல்லை: