செவ்வாய், 15 டிசம்பர், 2009

இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - விருதுகள் வழங்கி ஆளுனர் உரை


சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் முகமது சதக் கலை அறிவியல் கல்லூரியில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய 2 வது மாநாடு நேற்று டிசம்பர் 13 அன்று நடைபெற்றது. இஸ்லாமிய இலக்கிய கழகப் பொதுச்செயலாளர் எஸ்.எம்.இதாயத்துல்லா இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.மேஜர் எம். ஜெய்லானி அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார். இந்த விழாவில் தமிழக ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலா கலந்துகொண்டு கவிஞர் மு.மேத்தாவுக்கு உமறுப்புலவர் விருதையும், ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொற்கிழியையும் வழங்கி பேசினார்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்குகொண்டு இந்திய நாட்டின் நாட்டு விடுதலைக்காக இஸ்லாமிய ஆண்களும், பெண்களும், அரும்பாடுபட்டதை நினைவு கூர்ந்த அவர் மதத்தின் பெயரால் நாட்டின் ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்கும், இடையூறு ஏற்படுவதற்கு நாம் ஒருபோதும் இடம்கொடுத்துவிடக்கூடாது என்றார்.

பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி தாளாளர் டி.எஸ்.பத்ஹூர் ரப்பானி , முகமது சதக் கல்வி நிறுவனங்களின் தலைவர் எஸ்.எம்.அமீது அப்துல் காதர் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், திருச்சி ஜமால் முகமது கல்லூரி செயலாளர் எம்.ஜே.எம். அப்துல் கபூர், யுசிமாஸ் நிர்வாக இயக்குனர் பகீர் அகமது உள்பட 11 பேருக்கு சமுதாய சுடர் விருதும் வழங்கப்பட்டது. சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி, எழுத்தாளர் துபாஷ் தாஜூதினுக்கு கவிக்கோ அறக்கொடை நிதி ரூ.20 ஆயிரத்தை வழங்கினார். இஸ்லாமிய இலக்கிய கழக துணைத் தலைவர் பிரெசிடென்ட் அபுபக்கர் சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. மகளிர் கல்லூரியில் இஸ்லாமிய ஆய்வு இருக்கை தொடங்குவதற்கு ரூ.1 லட்சம் வழங்கினார்.

இந்த மாநாட்டில், சிறுபான்மையினர் மொழிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும், ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், முஸ்லிம் மாணவர்கள் அதிகம் படிக்கக்கூடிய கல்வி நிலையங்களில் அரபி மொழி கற்க வாய்ப்பு வழங்கப் பட வேண்டும், சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர தகுதிச்சான்றிதழ் வழங்கவேண்டும் போன்ற தீர்மானங்கள் உள்பட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
source:inneram

கருத்துகள் இல்லை: