பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக எழுச்சி மாநாட்டுக்கான பிரச்சார துவக்கப் பொதுக்கூட்டம் டிசம்பர் 13 அன்று மாலை 6.45 மணியளவில் சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் நடைபெற்றது.
மாநிலச் செயலாளர் ஹாலித் முஹம்மது வரவேற்புரை நிகழ்த்தினார். கூட்டத்திற்கு மாநில தலைவர் மு.முஹம்மது அலி ஜின்னா தலைமை தாங்கினார்.
அவர் தனது தலைமை உரையில் இந்தியா பொருளாதார பலத்திலும் ராணுவ பலத்திலும் மெச்சத்தக்க வளர்ச்சியடைந்து வருகின்றது. ஆனால் வணிக வளாகங்கள் மட்டுமே ஒரு தேசமாகாது. இந்தியா ஒருபுறம் வளர்ந்து கொண்டிருக்கும் பொழுது மறுபுறம் இந்தியக் குடிமக்களின் முக்கிய சமூகங்களான முஸ்லிம்கள் தலித்துகள் பழங்குடியினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோர் ஒடுக்கப்படுகின்றனர். இந்த உண்மைகள் பெரிதாகக் காட்டப்படாமல்; வளர்ச்சிக் குறியீடுகளால் மறைக்கப்படுகின்றன. இதற்கு தேசிய வளங்களில் ஒவ்வொரு சமுதாயமும் தனக்கு உரிய பங்கைப் போராடி பெற வேண்டும். அத்தோடு தனது சொந்த வளங்களைப் பயன்படுத்தி முன்னேற வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் விரும்புகின்றது. இந்த சமூக எழுச்சி மாநாட்டிற்கு மக்கள் அலைகடலென திரண்டு வரவேண்டும் என்று கூறினார்.
பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய துணைத் தலைவர் ஏ. சயீது தனது துவக்க விழா உரையில் இந்தியாவில் மிகவும் பின்தங்கிய பாதுகாப்பற்ற மற்றும் ஒருங்கிணைக்கப்படாத சமூகமாக முஸ்லிம்கள் உள்ளார்கள். மதவாத சக்திகள் முஸ்லிம்களின் கலாச்சாரம் பொருளாதாரம் மற்றும் உயிருக்கு எதிராக ஒரு போரை தொடுத்துள்ளார்கள். அரசு இயந்திரங்களிலும் ஊடகம் மற்றும் பிற துறைகளிலும் முஸ்லிம்களுக்கு எதிராக அறிவிக்கப்படாத போர் தொடுக்கப்பட்டுள்ளது. இதனால் முஸ்லிம்கள் கல்வி சுகாதாரம் மின்சார வசதி குடிதண்ணீர் போக்குவரத்து வசதி போன்ற அடிப்படை வசதிகள் கூட பெறப்படாத நிலையில் உள்ளார்கள். இந்த மோசமான சூழ்நிலையில் இருந்து முஸ்லிம்களை விடுவிக்க நாம் முயற்சிகள் செய்ய வேண்டும் என்று கூறினார்.
தேசிய செயற்குழு உறுப்பினர் மௌலவி உஸ்மான் பெய்க் ரஷாதி மௌலவி எம்.எம். முஹம்மது இப்றாஹீம் பாகவி தமிழக மக்கள் உரிமைக் கழகத்தில் இருந்து வழக்கறிஞர் பா. புகழேந்தி சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாநில பொருளாளர் எஸ்.எம். ரஃபீக் அஹமது மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொதுச் செயலாளர் ஏ. அஹமது ஃபக்ருதீன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
கூட்டத்திற்கு 3000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக சென்னை மாவட்ட தலைவர் J.முஹம்மது நாஜிம் நன்றியுரையாற்றினார். கூட்டம் இரவு 9.30 மணியளிவில் முடிவுற்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக