பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் இல. கணேசன் பாபரி மஸ்ஜித் குறித்து இன்று வெளியிட்டுள்ள அவதூறு அறிக்கையை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிக்கின்றது. பாபரி மஸ்ஜித் என்பது பாபர் இந்தியாவை வெற்றிக் கொண்டதின் நினைவாக ராமர் கோயிலை இடித்து விட்டு கட்டப்பட்டது என்று தனது அறிக்கையில் பச்சை பொய்யை அவிழ்த்துள்ளார் இல. கணேசன். பாபர் 1526ல் இந்தியாவிற்கு படையெடுத்து வந்த போது டெல்யில் ஆட்சி செய்துக் கொண்டிருந்தது இப்றாகிம் லோடியாகும்.
பாபர் மற்றும் இப்றாகிம் லோடி தலைமையிலான படைகளும் பானிபட் யுத்தத்தில் மோதிக் கொண்ட போது இரு படைகளிலும் ஹிந்துக்களும் போர்வீரர்களாக போரிட்டார்கள். இந்த போரில் வெற்றி பெற்று டெல்யில் தனது ஆட்சியை நிறுவினார் பாபர். பாபரி மஸ்ஜிதிற்கான அடிக்கல்லை நாட்டி அதனை 1523ல் கட்ட ஆரம்பித்தவர் இப்றாகீம் லோடி தான். அந்த பள்ளிவாசல் லோடி மஸ்ஜித் என்றும் கோட்டை மஸ்ஜித் என்றும் தான் முதல் அழைக்கப்பட்டது. முகலாய அரசு அயோத்தி பகுதியில் பரவிய போது, அப்பகுதிக்கு ஆளுநராக நியமிக்கப்பட்ட மீர் பாகி இந்த பள்ளிவாசலை முழுமைப் படுத்தி அதற்கு தனது அரசரின் பெயரைச் சூட்டினார். அயோத்தியில் ஸ்ரீராமருக்கு கட்டப்பட்டிருந்த ஆலயத்தை இடித்து விட்டு தான் பாபரி மஸ்ஜித் கட்டப்பட்டது என்பதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை என்று ஆர்.எஸ். சர்மா, சுசில் ஸ்ரீவத்ஸவா, ஷேர் சிங் போன்ற அப்பழுக்கற்ற வரலாற்று ஆசிரியர்கள் ஆதாரத்துடன் விளக்கியுள்ளார்கள். இது மட்டுமல்ல ராமயணத்தை ஹிந்துஸ்தானியில் மொழிபெயர்த்த துளசிதாசர் பாபரி மஸ்ஜித் கட்டப்பட்ட காலத்தில் அயோத்தியில் வாழ்ந்தவர். ஸ்ரீராமசந்திர மனாஸ் என்ற தனது காப்பியத்தியில் ஸ்ரீராமருக்கு கட்டப்பட்ட ஆலயத்தை இடித்து விட்டு பாபர் ஆட்சியின் போது பள்ளிவாசல் கட்டப்பட்டது என்று எந்த ஒரு குறிப்பையும் அவர் தரவில்லை. பாபரி பள்ளிவாசல் வளாகத்தில் பள்ளிவாசல் ஒரு பக்கம் இருக்க அதன் ஒரு மூலையில் திண்ணை ஒன்றை எழுப்பி அங்கு ஸ்ரீராமர் சிலை வைக்கப்பட்டு வழிபாடு 1870களில் ஆங்கிலேயேர்களின் சதியினால் ஏற்பட்டது. அயோத்தி பகுதியில் 1857ல் நடைபெற்ற முதல் விடுதலைப் போரில் ஹிந்துக்களும் முஸ்ம்களும் ஒன்றிணைந்து போரிட்டத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வெள்ளைக்காரர்கள் தங்கள் பிரித்தாளும் தந்திரத்தை நடைமுறைப்படுத்தவே இந்த சதிச் செயலைச் செய்தார்கள். இந்த உண்மை வரலாற்றை மறைத்து இல. கணேசன் பாபரி மஸ்ஜிதை கொச்சையாக விமர்சித்திருப்பது அவரது அறியாமையையும், வஞ்சகத்தையும் தான் வெளிப்படுத்துகின்றது. இந்தியா என்ற மாபெரும் மதசார்பற்ற நாட்டின் மதசார்பின்மைக்கு ஒர் எடுத்துக் காட்டாக பாபரி மஸ்ஜித் விளங்கியது. பன்முக பண்புள்ள இந்தியாவை சிதைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் உச்சநீதிமன்றத்தின் உத்தரவையும் உதாசீனப்படுத்தி டிசம்பர் 6, 1992ல் பாபரி மஸ்ஜிதை இடித்த பயங்கரவாதச் செயல் ஈடுபட்டு தேசத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியவர்கள் தான் இல. கணேசனின் கூட்டத்தினர். முஸ்ம்கள் தேசபற்றில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. நமது நாட்டின் உயிர் மூச்சாக விளங்கும் மதசார்பின்மை மற்றும் பன்முகத் தன்மைகளை கால் போட்டு மிதித்த இல. கணேசன் போன்றோர் லிபரான் ஆணையத்தின் அறிக்கையை படித்து திருந்தட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக