Thanks To :
இலங்கையிலே தற்போது முடிவுக்கு வந்துள்ள உள்நாட்டு யுத்தம் விடுதலைப்புலிகள் இயக்கத்தை மட்டுமல்ல அவர்களின் ஆளுகையின் கீழ் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கையையும் சிதறடித்துள்ளது. இரண்டு லட்சம் தமிழ் மக்கள் முகாம்களிலே தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தேவைகளை சிறப்பாக செய்து வருவதாகவும் சிறிது, சிறிதாக அவர்களை சொந்த ஊரில் குடியமர்த்துவதாகவும் இலங்கை அரசு கூறி வருகிறது.
இலங்கை முகாம்களில் தமிழ் மக்கள் கொடுமைக்குள்ளாக்கப்படுவதாக தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் குற்றம் சாட்டி போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்த அமைப்புகளின் அழுத்தம் காரணமாக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று சமீபத்தில் இலங்கைக்கு சென்று அங்குள்ள முகாம்களை பார்வையிட்டு வந்துள்ளனர். அங்கு சென்று வந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் பல்வேறு கருத்துகளை கூறினர். ஒரு தரப்பு முகாம்கள் சிறப்பாக செயல்படுவதாகவும், இன்னொரு தரப்பு ஏற்பாடுகள் சரியில்லை என்றும் கூறி வருகின்றனர்.
ஆனால் ஐ.நா.வின் மேற்பார்வையிலேயே அனைத்து ஏற்பாடுகளும் தொடர்ந்து வருவதை யாரும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.நா.வின் ஏற்பாடுகள் எப்போதும் சர்வதேச தரத்தில் தான் இருக்கும். இந்நிலையில் மத்திய அரசு இலங்கை தமிழர் நிவாரண நிதியாக ரூ.500 கோடியை அளித்துள்ளது. தமிழக முதல்வரும் தன் பங்குக்கு 100 கோடியை அளித்துள்ளார். இலங்கையில் உள்ள தமிழர்கள் ஏதோ ஒரு வகையில் இந்தியாவுடன் தொடர்பு உள்ளவர்கள் என்ற அடிப்படையில் இந்த உதவிகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. இலங்கைத் தமிழர் நிலை குறித்து பாராளுமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் தமிழக அரசியல் கட்சிகளால் நடத்தப்படுகின்றன.
எல்லாம் சரி, இலங்கையில் வாழும் தமிழர்களுக்காக ஓங்கி குரல் எழுப்பும் அரசியல் கட்சிகளும், நிதி ஒதுக்கும் மத்திய அரசும், இலங்கையின் வடக்கு பகுதியான யாழ்ப்பாணத்தில் இருந்து விடுதலைப்புலிகளால் 48 மணி நேர கெடு விதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட 1 லட்சம் தமிழ் முஸ்லிம்கள் குறித்து எவ்வித கவலையும் படுவதில்லை. வெறும் தட்டுமுட்டு சாமான்களோடு உயிரை கையில் பிடித்துக் கொண்டு தங்கள் பூர்வீக பூமியில் இருந்து, சொந்த வீடுகளை விட்டும், நிலங்களை விட்டும் விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்கள் 19 வருடங்களாக அகதி முகாம்களில் எவ்வித அடிப்படை வசதியுமின்றி வாடி வருகின்றனர். இவர்களை பற்றி யாரும் எவ்வித கவலையும் கொள்ளவில்லை.
இவர்களும் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் தான். இந்திய வம்சா வழியினர் தான். ஆனால் இவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை பற்றி இந்திய அரசோ, தமிழக அரசோ கூட கவலைப்பட்டதாக தெரியவில்லை. ஏனெனில் அது இலங்கை சம்பந்தப்பட்ட விஷயம் என்று இங்குள்ள முஸ்லிம் அமைப்புகள் அமைதியாய் இருந்து விட்டன. ஆனால் இன்று இலங்கை தமிழர்களுக்கு நிதி ஓதுக்கும் மத்திய, மாநில அரசுகள் தமிழ் முஸ்லிம்களுக்கு ஏன் ஒதுக்கவில்லை. ஏன் அங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்று அவர்களின் நிலையை ஆராயவில்லை என்று கேட்க வேண்டிய நேரம் வந்து விட்டது.
எதிலும் பாரபட்சம் காட்டும் அரசு நிர்வாகங்களுக்கு எதிராக முஸ்லிம் சமுதாயம் குரல் கொடுத்தே தீர வேண்டும். இது இலங்கையில் கவனிப்பாரற்று கிடக்கும் 1லட்சம் முஸ்லிம்களுக்கு சிறு ஆறுதலையாவது அளிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக