ஞாயிறு, 27 டிசம்பர், 2009

லஞ்ச ஒழிப்பு துறைக்கு மூக்கணாங்கயிரா?

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது வெளியிடும் அறிக்கை

தமிழகத்தில் கடந்த ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறையினரின் அதிரடி நடவடிக்கைகளால் சிறிய பெரிய அளவிலான ஊழல் பேர்வழிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 2008 மார்ச் முதல் 2009 மார்ச் மாதத்திற்குள் 400க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அப்பழுக்கற்ற நேர்மையான காவல்துறை அதிகாரி ஏ.டி.ஜி.பி. ராமானுஜம் அவர்கள் லஞ்ச ஒழிப்பு துறையின் தலைவராக இருந்த காலக்கட்டத்தில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.

வாக்காளர்களுக்கு அளிக்கப்படும் லஞ்சம் உள்பட தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெறும் லஞ்ச ஊழலை தடுத்து நிறுத்த முடியவில்லை என்ற நிலை மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

சிறிய அளவிலான ஊழல் குற்றங்கள் மட்டுமே கண்டு பிடிக்கப்படுவதும், மிகப்பெரிய அளவிலான ஊழல் குற்றங்கள் மறைக்கப்படுவதும் தமிழகத்தில் சர்வசாதாரணமான நிகழ்வுகளாக ஆகிவிட்டது.

லஞ்ச ஒழிப்பு துறைக்கு திரு. ராமானுஜம் (ஏ.டி.ஜி.பி) பொறுப்பில் இருந்த போது, பாரபட்சமின்றி நடவடிக்கைள் எடுக்கப்பட்டன. லஞ்ச ஊழல் முறைகேடுகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. ஆனால் திரு. ராமானுஜம் அவர்கள் அத்துறையில் இருந்து மாற்றப்பட்ட பிறகு தற்போது லஞ்ச ஒழிப்பு துறையின் செயல்பாடுகள் வீரியம் இழந்துள்ளன. லஞ்ச ஒழிப்பு துறையின் நடவடிக்கைகளுக்கு மூக்கனாங்கயிறு போடுவதற்காகவே திரு. ராமானுஜம் அத்துறையில் இருந்து மாற்றம் செய்துள்ளது போல் தெரிகின்றது. அவர் இடமாற்றம் செய்த பிறகு லஞ்ச ஒழிப்பு துறையின் நடவடிக்கைகள் திடீரென குறைக்கப் பட்டன. இந்த நடவடிக்கை குறைப்பு ஊழல் பேர்வழிகளுக்கு உதவி புரியும் படி அமைந்துள்ளது. லஞ்சம் பல்கி பெருக வழிவகுக்கும் வகையில் திமுக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கின்றது.

தமிழகத்தில் பெருகி வரும் லஞ்ச ஊழல்களை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என திமுக அரசுக்கு அக்கறை இருந்தால் மீண்டும் திரு. ராமானுஜம் அவர்களை லஞ்ச ஒழிப்பு துறையின் தலைவராக நியமிக்க வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். மேலும் இந்த நிலை தொடருமாயின் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கிறோம்.

கருத்துகள் இல்லை: