நெல்லை, டிச.23: கடையநல்லூர் வாலிபர் கீரிப்பாறையில் மாயமான வழக்கில் 12 போலீஸ் அதிகாரிகள் இன்று தென்காசி கோர்ட் டில் ஆஜராகின்றனர்.
கடையநல்லூரை சேர்ந்த முகம்மது மசூது (38) உட்பட 4 பேர் கடந்த 2005ம் ஆண்டு நவம்பரில் கடையநல்லூரிலிருந்து காரில் ஆரல்வாய்மொழிக்கு சென்றனர். அப்போது அங்கு காரில் வந்த விருதுநகரை சேர்ந்த தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தியை தாக்கி 10 லட்ச ரூபாயை பறித்து சென்றதாக வழக்குப் பதிவு செய்து அப்போதைய ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் லெட்சுமணராஜ் விசாரணை நடத்தி வந்தார்.
இது தொடர்பாக கடையநல்லூர் போலீசார் முகம்மதுமசூது உட்பட 4 பேரை பிடித்து கன்னியாகுமரி தனிப்படையிடம் ஒப்படைத்தனர்.
கீரிப்பாறை போலீஸ் ஸ்டேஷனில் வைத்து இவர்களிடம் அப்போதைய தனிப்படை டி.எஸ்.பி.பிரதாப்சிங், இன்ஸ்பெக்டர்கள் லெட்சுமணராஜ், ஈஸ்வரன், சந்திரபால், சப்&இன்ஸ்பெக்டர்கள் மாடசாமி, சத்யராஜ், ஏட்டுக்கள் முருகன், சிவன், ஸ்டீபன், மைக்கேல், முத்து உட்பட 15 பேர் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து முகம்மதுமசூது தரப்பிலிருந்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் நீதிபதிகளுக்கு தந்தி அனுப்பினர். இதனால் தனிப்படையினர் உயர் அதிகாரிகளிடம், முகம்மதுமசூது தப்பி சென்றதாகவும் மீதமிருந்த 3 பேர் விடுவித்து விட்டதாகவும் தெரிவித்தனர். ஆனால் முகம்மதுமசூது வீட்டிற்கு செல்லவில்லை.
இதனால் போலீஸ் விசாரணையில் முகம்மதுமசூது இறந்திருக்கலாம் என கருதிய அவரது உறவினர்கள் மதுரை ஐகோர்ட் டில் ஹேப்பியஸ் கார்பஸ் மனு அளித்தனர். இவ்வழக்கினை விசாரிக்குமாறு நெல்லை சி.பி.சி. ஐ.டி., போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இதனை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நெல்லை சி.பி.சி. ஐ.டி.போலீசார் விசா ரணை நடத்தினர்.
இதற்கிடையில் கடந்த மாதம் 10ம் தேதி நெல்லை சி.பி.சி.ஐ.டி.போலீசார் இவ்வழக்கு சம்பந்தமாக தென்காசி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 12 போலீஸ் அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
அதில் ஏற்கனவே இவ்வழக்கு தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏ.டி.எஸ்.பி.,பிரதாப்சிங், தர்மபுரியிலுள்ள டி.எஸ்.பி.,ஈஸ்வரன், க்யூ பிரிவு டி.எஸ்.பி.,சந்திரப் பால், ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் லெட்சுமணராஜ், இன்ஸ்பெக்டர் முருகன், சப்&இன்ஸ்பெக்டர்கள் மாடசாமி, சத்ய ராஜ், ஏட்டுக்கள் முருகன், சிவன், ஸ்டீபன், மைக்கேல், முத்து ஆகிய 12 பேர் மீது குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த 12 போலீஸ் அதிகாரிகளும் இன்று தென்காசி கோர்ட்டில் ஜாமீன்தாரோடு ஆஜராகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக