புதன், 5 ஆகஸ்ட், 2009

ஆசிரியைகள் ஜன்னல் வைத்த ஜாக்கெட் போட தடை!

சென்னை: ஜன்னல் வைத்த ஜாக்கெட்களைப் போட்டுக் கொண்டு பள்ளிக்கு வர ஆசிரியைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆண் ஆசிரியர்களும் உடைக் கட்டுப்பாட்டை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிக்கூட ஆசிரியர்கள், ஆசிரியைகளுக்கு ஏற்கனவே உடைக் கட்டுப்பாடு அமலில் உள்ளது. ஆசிரியை என்றால் புடவை, ஜாக்கெட்டில்தான் வர வேண்டும் என்று உள்ளது. அதேபோல ஆசிரியர்கள் வேட்டி-சட்டை அல்லது பேன்ட், சட்டையில் வரலாம். மாறாக டி சர்ட், ஜீன்ஸ் பேன்ட் போன்றவற்றில் வரக் கூடாது என்று தடை உள்ளது.

ஆனால் இந்த உடைக் கட்டுப்பாட்டை பல ஆசிரியர், ஆசிரியைகள் மீறி வருவதாக புகார் எழுந்தது.

குறிப்பாக மாணவ, மாணவியர் இணைந்து படிக்கும் கோ எட் பள்ளிகளில், ஆசிரியைகள் சிலர் ஜன்னல் வைத்த ஜாக்கெட்டுடன் வருவதாகவும், ஸ்லீவ்லெஸ் போன்ற ஜாக்கெட்டுகளில் வருவதாகவும் புகார்கள் எழுந்தன.

அதேபோல சில ஆசிரியகள், ஜீன்ஸ் பேன்ட், டேஞ்சர், டச் மீ, வான்னா மீ உள்ளிட்ட குண்டக்க மண்டக்க வார்த்தைகள் அடங்கிய டி-சர்ட்களில் வருவதாகவும் புகார்கள் எழுந்தன.

இதை தற்போது கட்டுப்படுத்த கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி உடைக் கட்டுப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள கல்வித்துறை அதிகாரிகள் அவற்றை கண்டிப்பாக ஆசிரியர், ஆசிரியைகள் கடைப்பிடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர்கள் ஆண்களாக இருந்தால் வேட்டி-சட்டை அல்லது பேண்ட்-சட்டை அணியலாம். ஜீன்ஸ் பேண்ட், பனியன் ஆடை குறிப்பாக டி.சர்ட் அணியக்கூடாது. வாசகங்கள் போடப்பட்ட ஆடைகளை அணியவே கூடாது.

ஆசிரியையாக இருந்தால் சேலை உள்ளிட்ட கவுரவமான ஆடைகளை அணியலாம். சேலைதான் எல்லோரும் அணிகிறார்கள். அதுவும் ஆபாசம் இன்றி கட்ட வேண்டும்.

ஜன்னல் வைத்த ஜாக்கெட் மற்றும் உடல் தெரியும் வகையிலான லேசான ஆடைகளைப் போட்டுக் கொண்டு உடல் தெரியும்படி வரக் கூடாது.

ஆடை கட்டுப்பாட்டை மீறி நடக்கும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை விடப்படும். அடிக்கடி கண்காணிக்கும்படியும் அவர்களுக்கு உத்தரவிடப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: