லண்டன்: முன்னாள் பிரதமர்கள் ஜவகர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தியின் திட்டங்கள் எத்தகைய தொலைநோக்குத் தன்மை கொண்டவை என்பதை இந்தியர்கள் புரிந்து கொள்ள இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இன்றைய மோசமான பொருளாதாரச் சூழல் உலகையே விழுங்க நேரம் பார்த்துக் கொண்டிருக்க, இந்தியப் பொருளாதாரம் மட்டும் இன்னும் தாக்குப் பிடிக்கக் காரணம், இந்தியாவின் பலமான பொதுத் துறை நிறுவனங்களே என சர்வதேச நிதி நிறுவனமான ஐஎம்எப் தெரிவித்துள்ளது.
மேலும் உலகில் இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வர மொத்தம் 11.9 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு பணம் தேவைப்படும் ஐஎம்எப் தெரிவித்துள்ளது. இந்தத் தொகை உலகின் மொத்த வருவாயில் 5-ல் ஒரு பகுதியாகும்.
அதாவது உலகில் உள்ள சிறு குழந்தைகள் உள்ளிட்ட ஒவ்வொருவருக்கும் ரூ. 140076 செலவழிக்கப்பட வேண்டும் என ஐஎம்எப் கூறுகிறது.
இந்த 11.9 ட்ரில்லியன் டாலர் நிதியில் பெரும்பகுதி வளர்ச்சியடைந்த நாடுகளால் செலவிடப்படக் கூடியதாக இருக்குமாம். 1.7 ட்ரில்லியன் டாலர்கள் மட்டுமே வளரும் நாடுகள் செலவிட வேண்டியிருக்கும் என இந்நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.
ஆனால் இந்தியா போன்ற நாடுகளின் பொருளாதாரம் பயப்படும் அளவுக்கு வீழ்ச்சியடையவில்லை என்றும், அதனைச் சீர்படுத்த குறைந்த அளவு தொகையே தேவை எனறும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் பொதுத் துறை நிறுவனங்கள், பொருளாதார வீழ்ச்சியைத் தடுக்கும் அளவு பலமானவை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக