சனி, 29 ஆகஸ்ட், 2009

அத்வானி கூறுவது முழுப் பொய்

வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 28, 2009, 9:53 [IST]

டெல்லி: ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகருக்குக் கடத்தப்பட்ட இந்திய விமானப் பயணிகளை மீட்க தீவிரவாதிகளை விடுவிக்கும் முடிவை அமைச்சரவை எடுத்தபோது அந்தக் கூட்டத்தில் அத்வானியும் இருந்தார். ஆனால், தனக்கு அந்த விஷயமே தெரியாது என்று அத்வானி கூறுவது முழுப் பொய் என்று பாஜக மூத்த தலைவரான யஷ்வந்த் சின்ஹாவும், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரிஜேஷ் மிஸ்ராவும் போட்டு உடைத்துள்ளது.

இதனால் அத்வானி மீதான மரியாதை மேலும் சரிந்துள்ளது.

1999ம் ஆண்டில் நேபாளத்தில் இருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் காந்தஹாருக்கு கடத்தப்பட்டதையடுத்து தீவிரவாதிகளை மத்திய அரசு விடுவித்து பயணிகளை மீட்டது.

தொடர்ந்து பொய்...

ஆனால், தனக்குத் தெரியாமலேயே தீவிரவாதிகள் விடுவிக்கப்பட்டதாகவும் தீவிரவாதிகளுடன் ஜஸ்வந்த் சிங் ஆப்கானிஸ்தான் செல்லப் போகிறார் என்பதே எனக்குத் தெரியாது என்று மீண்டும் மீண்டும் கூறி வருகிறார் அத்வானி. இதன்மூலம் வாஜ்பாய் மீது முழுப் பழியைப் போட்டுவிட்டு அவர் தப்ப முயன்று வருகிறார்.

ஆனால், அத்வானி சொல்வது பொய் என்பதை ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், ஜஸ்வந்த் சிங் ஆகியோர் போட்டு உடைத்தனர். இந் நிலையில் இப்போது வாஜ்பாயின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிரிஜேஷ் மிஸ்ராவும், நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹாவும் அத்வானி பொய் சொல்வதாகக் கூறி மானத்தை வாங்கியுள்ளனர்.

கசப்பான முடிவு:

இது குறித்து சி.என்.என்-ஐபிஎன் தொலைக்காட்சியில் கரன் தாப்பரின் டெவில்ஸ் அட்வகேட் நிகழ்ச்சியில் பிரிஜேஷ் மிஸ்ரா அளித்துள்ள பேட்டி:

இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தைப் பயணிகளுடன் பயங்கரவாதிகள் காந்தஹாருக்குக் கடத்திச் சென்றவுடன் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, பிரதமர் வாஜ்பாய் தலைமையில் 1999 டிசம்பர் 31ம் தேதி கூடியது. அப்போதைய உள்துறை அமைச்சர் அத்வானி, பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் ஆகியோருடன் நானும் அக் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.

பயணிகளை மீட்க அவர்கள் கேட்டபடி சிறையிலிருந்து 3 பயங்கரவாதிகளை உடனே விடுதலை செய்து அழைத்துச் சென்று ஒப்படைப்பதுதான் ஒரே வழி என்ற கசப்பான முடிவை எடுத்தோம்.

இந்த முடிவு அந்தக் கூட்டம் தொடர்பான குறிப்பேட்டிலும் இடம் பெற்றிருக்கிறது. அதை படித்துப் பார்த்தாலே உண்மை தெரியும். அந்தக் கூட்டத்தில் எடுத்த முடிவுகள் அனைத்துமே ஒரு மனதாக எடுத்தவைதான். அதை அத்வானி எதிர்க்கவும் இல்லை.

அத்வானியை வாஜ்பாய் நீக்கியிருக்க மாட்டார்...

பின்னர் பாகிஸ்தான் சென்ற அத்வானி, ஜின்னாவை புகழ்ந்து பேசினார். அதை ஆர்எஸ்எஸ் தலைமை கடுமையாகச் சாடியது. ஆனாலும் வாஜ்பாய் அத்வானியைக் கண்டிக்கவில்லை. கட்சியின் தலைவராக வாஜ்பாய் இருந்திருந்தால் ஜஸ்வந்த் சிங்கைக் கட்சியிலிருந்து இப்படி நீக்கி இருக்க மாட்டார்.

ராஜஸ்தானிலும் கட்சித் தலைமைக்கே சவால்விடும் வகையில் வசுந்தரா ராஜே இப்போது நடந்துகொள்வதைப் போன்ற நிலைமை ஏற்பட விட்டிருக்க மாட்டார். வசுந்தராவை அழைத்து, கட்சித் தலைமை என்ன நினைக்கிறது என்பதைக் கூறி, வசுந்தராவை கட்சியின் நலனில் அக்கறை கொண்டு உரிய முடிவை எடுக்க வைத்திருப்பார்.

கட்சிக்குள் வாஜ்பாய் கோஷ்டிகளை வளர்க்கவில்லை. ஆனால், இப்போதுள்ள தலைமை அப்படி பக்குவமாகச் செயல்படத் தவறிவிட்டது என்றார் பிரிஜேஷ் மிஸ்ரா.

அத்வானிக்கு எல்லாம் தெரியும்-யஷ்வந்த்:

இந் நிலையில் யஷ்வந்த் சின்ஹா அளித்துள்ள பேட்டியில்,

பிரிஜேஷ் மிஸ்ரா சொல்வது முழுக்க முழுக்க உண்மை தான். காந்தஹாருக்கு விமானத்தில் பயங்கரவாதிகளை ஏற்றிச் செல்கிறார் ஜஸ்வந்த் சிங் என்பது அத்வானிக்கு முழுமையாகவே தெரியும். இதில் பொய் சொல்லிப் பயனில்லை.

ஜஸ்வந்த் சிங் எழுதிய புத்தகத்தில் ஜின்னாவைப் புகழ்ந்தும் நேரு, வல்லபாய் படேல் ஆகியோரை விமர்சித்தும் எழுதிய கருத்துகள் தனக்கோ கட்சிக்கோ உடன்பாடல்ல என்று தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். ஆனால், அதற்கு விளக்கம் கூட கேட்காமல் அவரை கட்சியிலிருந்து நீக்கியது சரியல்ல. அவரை நீக்கிய விதத்தை என்னால் ஏற்க முடியாது.

மிஸ்ரா-சின்ஹாவுக்கு நன்றி: ஜஸ்வந்த்

இவர்களது பேட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜஸ்வந்த் சிங்,

காந்தஹார் விவகாரத்திலும் கட்சியிலிருந்து நீக்கிய விஷயத்திலும் என் பழைய தோழர்கள் மிஸ்ராவும் சின்ஹாவும் எனக்காகப் பரிந்து பேசியிருப்பது மகிழ்ச்சியையும் தெம்பையும் அளித்திருக்கிறது.

அதே சமயம் அத்வானி சொல்வது உண்மை அல்ல என்று அவரோடு இருந்தவர்களே சொல்ல ஆரம்பித்திருப்பது வேதனையாக உள்ளது. இதைத்தான் நான் ஆரம்பத்திலிருந்தே சொல்லி வந்தேன். நிலைமை இந்த அளவுக்கு வரும் வகையில் அத்வானி நடந்திருக்கக் கூடாது.

சில பேருக்கு நினைவு தவறலாம், நடந்தவை மறந்து போகலாம். அதற்காகத் தொடர்ந்து ஞாபக மறதிக்காரரைப் போலவே பேசுவதன் மூலம் அத்வானி எதைச் சாதிக்க விரும்புகிறார் என்று தெரியவில்லை. (இதைத் தான் செலக்டிவ் அம்னீசியா என்றாரோ ஜெயலலிதா!)

காந்தஹாருக்கு நான் போவது பற்றி ஏதுமே தெரியாது என்று ஒரு முறை அல்ல, பலமுறை கூறினார் அத்வானி. பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னது வருத்தமானது. இப்போது உண்மை வெளியில் வந்துவிட்டது என்றார் ஜஸ்வந்த்.

ஜஸ்வந்த் பாக். போகமாட்டார்...

இந் நிலையில் தனது ஜின்னா குறித்த புத்தக விற்பனைக்காக ஜஸ்வந்த் பாகிஸ்தான் போக இருப்பதாக வெளியான செய்திகளை அவரது மகன் மன்வேந்திர சிங் மறுத்துள்ளார்.

அவர் கூறுகையில், எனக்கு தெரிந்து அவர் பாக்கிஸ்தான் செல்ல விசா எதற்கும் விண்ணப்பிக்கவில்லை. இந்த புத்தகத்தின் பாகிஸ்தான் பிரதியை வெளியிடும் எண்ணமும் இல்லை என்றார்.

அத்வானி மன்னிப்பு கோர வேண்டும்:

இதற்கிடையே அத்வானி பொய் சொன்னது அம்பலமாகிவிட்டதால் அவர் முதலில் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது.

விலக மறுப்பு-ராஜே டெல்லிக்கு அழைப்பு:

இதற்கிடையே பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கின் உத்தரவை ஏற்று ராஜஸ்தான் மாநில எதிர்க் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக மறுத்து வரும் வசுந்தரா ராஜேவை வரும் 31ம் தேதி டெல்லிக்கு வந்து கட்சியின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடுவை சந்திக்குமாறு கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

பதவி விலக அவருக்கு 30ம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தட்ஸ்தமிழ்

கருத்துகள் இல்லை: