சனி, 1 ஆகஸ்ட், 2009

ஜனாதிபதிக்கு ஆபாச இ-மெயில் அனுப்பிய என்ஜினீயர் கைது

ஜனாதிபதி பிரதீபா பட்டீலுக்கு கடந்த பிப்ரவரி மாதம் இ-மெயில் ஒன்று வந்தது. அந்த இ-மெயிலை ஜனாதிபதி மாளிகை அதிகாரிகள் பார்த்தபோது, அதில் ஆபாச வார்த்தைகள் இடம் பெற்று இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.


உடனடியாக இது குறித்து டெல்லி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டனர்.

கர்நாடகத்தில் உள்ள ஒரு இன்டர்நெட் மையத்தில் இருந்து அந்த இ-மெயில் அனுப்பப்பட்டு இருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் விசாரணையை மேலும் முடுக்கி விட்டபோது மைசூரில் உள்ள இன்டர்நெட் மையம் மூலமாக இ-மெயில் வந்தது புலனாகியது.

உடனே, டெல்லி போலீசார் மைசூருக்கு வந்தனர். மைசூரில் உள்ள குறிப்பிட்ட இன்டர்நெட் மையத்துக்கு சென்று அதன் உரிமையாளரிடம் ரகசிய விசாரணை மேற்கொண்டனர். இன்டர்நெட் மையத்தில் இருந்த வாடிக்கையாளர் பதிவேட்டை ஆய்வு செய்தனர். அப்போது ஜனாதிபதிக்கு இ-மெயில் அனுப்பியவரின் விலாசம் கிடைத்தது.

அவினாஷ் கஷ்யப் என்ற அந்த நபர், மைசூர் விஜயநகரில் வசித்து வருகிறார். அவருடைய வீட்டுக்கு போலீசார் சென்று பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவினாஷ் கஷ்யப் பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து பட்டம் பெற்றவர் என்றும், தற்போது பெங்களூரிலேயே எம்.டெக் படித்து வருவதும் அப்போது தெரியவந்தது. அவரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

இந்த தகவலை தெரிவித்த போலீசார் மேற்கொண்டு எந்த விவரத்தையும் தெரிவிக்க மறுத்து விட்டனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

கருத்துகள் இல்லை: