சனி, 8 ஆகஸ்ட், 2009

முஸ்லிம் மாணவர்களை அவமரியாதை செய்ததாக பாதிரியாரை கண்டித்து முஸ்லிம்கள் போராட்டம்

சென்னை, ஆக.5-

கல்வி உதவித்தொகை விண்ணப்பம் கொடுக்க சென்ற முஸ்லிம் மாணவர்கள் மற்றும் பெற்றோரை அவமரியாதை செய்ததாக பள்ளி தாளாளர் பாதிரியாரை கண்டித்து முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதிரியார் மீது புகார்

சென்னை மண்ணடி முத்தியால்பேட்டையில் டாமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள். இந்த பள்ளியில் படிப்பவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள் ஆவர். பள்ளியின் முதல்வர் மற்றும் தாளாளராக பாதிரியார் அந்தோணி இருந்து வருகிறார்.

நேற்று சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பம் கொடுக்கச் சென்ற சில மாணவர்களையும், உடன் சென்றிருந்த பெற்றோர்களையும் பாதிரியார் அந்தோணி அவமரியாதையாக பேசியதாக கூறப்படுகிறது. இதை கேள்விப்பட்டவுடன் அந்த பகுதியை சேர்ந்த முஸ்லிம்களும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் உள்பட பல்வேறு முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்களும் பள்ளி முன்பாக குவிந்து விட்டனர்.

போலீஸ் நிலையம் முற்றுகை

அவர்கள் பாதிரியாரை கண்டித்தும் அவர்மீது கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக் கோரியும் கோஷமிட்டனர். பிராட்வே சாலையில் மறியலில் ஈடுபட தயாராகி கொண்டிருந்த நிலையில், முத்தியால்பேட்டை போலீசார் அவர்களை பேச்சுவார்த்தைக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். நூற்றுக்கணக்கானோர் போலீஸ் நிலையத்தில் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட 2 மாணவர்களின் பெற்றோர், பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இன்ஸ்பெக்டர் ராஜேஷிடம் புகார் கொடுத்தனர். இதற்கிடையில், துணை கமிஷனர் பெரியய்யா, உதவி கமிஷனர் மரிய ஜார்ஜ் ஆகியோர் போலீஸ் நிலையத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு திரண்டு நின்ற முஸ்லிம் பிரமுகர்களை அமைதிப்படுத்தினர். சம்பவம் குறித்து புகார் செய்யுமாறு பாதிக்கப்பட்ட பெற்றோர்களிடம் கூறினர். போலீசார் புகார் பெற்றுக் கொண்ட பின்னரே அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

நடவடிக்கை

அவமரியாதை செய்த பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் புகார் செய்யப்போவதாகவும், முதல்வர் மற்றும் தாளாளர் பணியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

நன்றி: தினதந்தி

கருத்துகள் இல்லை: