புதன், 5 ஆகஸ்ட், 2009

கொலை: அப்பாவிகள் கைது-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!

திருச்சி: திருச்சி அருகே பெண் கொலை வழக்கை முறையாக விசாரிக்காமல் அப்பாவிகள் மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம் வையம்பட்டியை அடுத்த டி. இடையபட்டியைச் சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம். இவரது மனைவி லட்சுமி (38); கடந்த மாதம் அங்குள்ள காட்டுப் பகுதியில்கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இந்த சம்பவம் குறித்து வையம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரவேல் பிணத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

அப்போது, லட்சுமி கொலை வழக்கில் தொடர்புடையதாகக் கூறி, அதே பகுதியைச் சேர்ந்த தங்கராசு, நாகராசு, கோபு ஆகியோரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.

இந் நிலையில், எட்டு பெண்களை கற்பழித்து கொன்றதாக, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை அடுத்த கொண்டையன் பேட்டையைச் சேர்ந்த குப்புசாமி என்பவர் கைது செய்யப்பட்டார்.

குப்புசாமியிடம் நடத்திய விசாரணையில், லட்சுமியை கற்பழித்து கழுத்தை நெரித்து கொன்றதாக வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து இந்தக் கொலை வழக்கில், சம்பந்தம் இல்லாத அப்பாவிகள் மூன்று பேர் சிறையில் அடைக்கப்பட்டது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து வழக்கை முறையாக விசாரணை நடத்தாத வையம்பட்டி இன்ஸ்பெக்டர் குமாரவேல் மீது நடவடிக்கை எடுக்க திருச்சி மாவட்ட எஸ்.பி. கலியமூர்த்தி பரிந்துரைத்தார்.

இதையடுத்து, குமாரவேலை திருச்சி டி.ஐ.ஜி. ராமசுப்பிரமணி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

அப்பாவிகள் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து தகுந்த நேரத்தில் நடவடிக்கை எடுத்த திருச்சி எஸ்.பி. கலியமூர்த்திக்கு பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: