சென்னை, ஜுலை 30: சென்னையை சேர்ந்த சலாவூதின் முகமது அயூப், உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருந்ததாவது:
தமிழக அரசின் தலைமை ஹாஜியான நான், 2006ம் ஆண்டு தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டேன். கடந்த மே 31ம் தேதி, வக்பு வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி முகமது ஜமாலுதீன் என்னிடம், 'வக்பு வாரியத்தை மாற்றியமைப்பதற்காக, எல்லா உறுப்பினர்களும் ராஜினாமா செய்துள்ளார்கள்' என்று கூறினார். எனது பெயரில் ராஜினாமா கடிதம் தயாரித்து, என்னை கட்டாயப்படுத்தி, கையெழுத்திடச் செய்தார்.
அதன்பின், நானே சொந்த காரணத்துக்காக ராஜினாமா செய்து விட்டதாகவும், எனக்கு பதிலாக கவிக்கோ அப்துல்ரகுமான் வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டதாகவும் ஜுன் 1ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.
தலைமை செயல் அதிகாரி முகமது ஜமாலுதீன் உள்நோக்கத்துடன் எனது ராஜினாமா கடிதத்தை தயாரித்து ஏமாற்றியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு செயலாளருக்கு ஜுன் 2ம் தேதி மனு அனுப்பினேன். இது பற்றி விசாரித்து, தலைமை செயல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
மனுவை நீதிபதி சுகுணா விசாரித்தார். அரசுதரப்பில் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை துணை செயலாளர் முகமது மசூது தாக்கல் செய்த பதில் மனுவில், 'மனுதாரர் புகார் மீது தலைமை செயல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டுள்ளோம். விரைவில் விசாரணை நடத்தி உரிய உத்தரவு பிறப்பிப்போம்' என்று கூறியிருந்தார்.
இதை ஏற்று, 'வக்பு வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி மீதான புகார் குறித்து விசாரணை நடத்தி 12 வாரத்துக்குள் அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்று நீதிபதி உத்தரவிட்டார்.
நன்றி: தினகரன்
(குறிப்பு: தமுமுக பொதுச் செயலாளர் செ.ஹெதர் அலி அவர்கள் வக்ஃபு வாரிய சேர்மன் பதவியைத் தான் ராஜினாமா செய்துள்ளார். வக்ஃபு வாரிய உறுப்பினராக தொடர்ந்து இருந்து வருகிறார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது. வக்பு வாரிய சேர்மன் பதவியை வக்ஃபு வாரிய உறுப்பினர் ஆன பிறகு தான் பெற முடியும் என்பது விதி. வக்ஃபு வாரிய உறுப்பினர்களும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மிகாமலும் இருக்க வேண்டும் என்பதும் விதி. அதற்காகவே இவ்வளவு ஏமாற்று வேலைகளும் என்பது குறிப்பிடத்தக்கது.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக