புதன், 26 ஆகஸ்ட், 2009

தொடரும் மின்வெட்டு - மத்திய, தென் சென்னை மக்கள் குமுறல்

சென்னை: தென் சென்னை மற்றும் மத்திய சென்னைப் பகுதியில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதால் மக்கள் பெரும் குமுறலுடன் உள்ளனர்.

திருவான்மியூர், அடையார், கோட்டூர்பூரம் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் மின்சாரத் தடை பெருமளவில் ஏற்பட்டு வருகிறதாம். இதனால் தூங்க முடியாமலும், உரிய நேரத்தில் எழுந்திருக்க முடியாமலும் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

இதில் முஸ்லீம்கள் தான் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர் என்று கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஜரீனா பெளஸா என்பவர் கூறுகிறார்.

அவர் கூறுகையில், அதிகாலையில், நோன்பு திறக்கும் நேரத்திலும், அதேபோல நோன்பு முடியும் நேரத்திலும் மின்சாரம் போவதால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. அதிகாலையில் மின்சாரம் போவதால் எந்த வேலையையும் செய்ய முடியாமல் போகிறது என்றார்.

மின்வெட்டால் ஜரீனா தனது வீட்டில் வைத்திருக்கும் மருந்துகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார். ஸ்கிளீராஸிஸ் நோய்க்காக பயன்படுத்தப்படும் மாத்திரைகள் விலை உயர்ந்தவை. ஒரு அட்டை மருந்து ரூ. 20,000 விலை கொண்டது. ப்ரீஸரில்தான் இதை வைக்க முடியும். மின்சார வெட்டால் இந்த மருந்துகள் பாதிக்கப்படுவதாக அவர் குமுறுகிறார்.

ரேவதி என்பவர் கூறுகையில், எனது 3 வயது மகனும், 7 வயது மகளும் இரவெல்லாம் தூங்க முடியாமல் தவிக்கின்றனர். அதிகாலையில் வேகமாக எழுந்திருத்து பள்ளிக்குப் போவதால் அவர்கள் வகுப்பறையில் தூங்கும் நிலை ஏற்படுகிறது. தொடர் மின்வெட்டால் அனைவருக்குமே கடும் பாதிப்பு ஏற்படுகிறது என்றார்.

இப்படி தொடர்ந்து மின்தடை ஏற்படுவதற்குக் காரணம், சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு தேவையான விளக்குகளைப் போடுவதற்காக மின்சாரத்தை திருட்டுத்தனமாக எடுப்பதுதான் காரணம் என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் மின்தடையும், குறைந்த மின்அழுத்தமும் ஏற்படுவதாக மக்கள் குமுறுகிறார்கள். இதைத் தடுக்க போலீஸார் உரிய நடவடிக்கைகள் எடுப்பதில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

அடையாரைச் சேர்ந்த சாமுவேல் கூறுகையில், ஜூலை மாதத்தைப் போல இப்போது வெயில் இல்லை. எனவே பெரும்பாலான வீடுகளில் இரவு நேரங்களிலும், பகல் நேரங்களிலும் ஏசி போடுவதில்லை. அப்படி இருந்தும் மின்வெட்டு இந்த அளவுக்கு ஏற்படுவது மிகவும் மோசமானது என்றார்.

ஏன் இந்த அவல நிலை என்று மின்துறை அதிகாரிகளிடம் கேட்டால், வேளச்சேரி - அடையார் - கோட்டூர்பும் சப்ளை லைன் ஒன்றில் பழுது ஏற்பட்டிருப்பதாகவும், அதனால்தான் இந்த திடீர் மின்தடைக்குக் காரணம் என்றும் தெரிவித்தனர்.

மேலும் சமீப காலமாக ஏசிக்களின் எண்ணிக்கை பெருகி விட்டதும் மின் உபயோகம் அதிகரிக்க முக்கிய காரணம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

சாலையோர பிள்ளையார் சிலைகளுக்கு தேவையான மின்சாரத்தை யாரும் திருட்டுத்தனமாக எடுப்பதில்லை என்றும் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தியோ அல்லது முறையாக அனுமதி வாங்கியோதான் பயன்படுத்துகிறார்கள் என்றும் மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை: