சனி, 1 ஆகஸ்ட், 2009

முஸ்லீம் என்பதால் வீடு தர மறுக்கிறார்கள் - நடிகர் இம்ரான் ஹஷ்மி புகார்


தான் ஒரு முஸ்லீம் என்பதால் மும்பையின் முன்னணி வீட்டு வசதிக் கழகம் ஒன்று தனக்கு வீடு தர மறுத்து விட்டதாக பாலிவுட் இளம் நடிகர் இம்ரான் ஹஷ்மி புகார் கூறியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பையின் பெரும் பணக்காரர்கள் வாழும் பாலி ஹில் பகுதியில் நிப்பானா கூட்டுறவுக் கழகம் அடுக்குமாடிக் குடியிருப்புகளை கட்டி விற்கிறது. இந்த நிறுவனத்தை அணுகிய இம்ரான் ஹஷ்மி ஒரு அபார்ட்மெடன்ட் வாங்கி முயன்றுள்ளார்.

ஆனால் தான் ஒரு முஸ்லீம் என்பதால் அந்த கழகம் வீடு தர மறுப்பதாக இப்போது இம்ரான் புகார் கூறியுள்ளார்.

இதுகுறித்து மகாராஷ்டிர சிறுபான்மையினர் ஆணையத்தில் அவர் புகார் கொடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட வீட்டு வசதிக் கழகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் வீடு வாங்க விரும்பிய பகுதியில், பெரும்பாலானவர்கள் இந்துக்கள்தான். சில கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பங்களும் உள்ளனர்.

முன்பும் ஒருமுறை இங்கு நான் வீடு வாங்க முயன்றேன். அப்போது அங்கிருந்த சிலர் நான் ஒரு முஸ்லீம் என்பதால் இங்கு வீடு கிடைக்காது என்று கூறினர். நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இப்போது எனக்கு வீடு மறுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என்றார்.

இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட வீட்டு வசதிக் கழகத்திற்கு சிறுபான்மையினர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக ஆணைய துணைத் தலைவர் ஆப்ரகாம் மத்தாய் தெரிவித்துள்ளார்.

முஸ்லீம் என்பதால் வீடு தர மறுத்த செயல் மும்பை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: